
அப்துல்லா பவாஜிர் என்ற இந்த சிறுவன் பிறக்கும் போதே கைகளை இழந்து பிறந்தான். இதற்காக மனம் வருந்தி மூளையில் முடங்கி விடவில்லை. இதே போல் கைகளையும் கால்களையும் இழந்து பிறந்த ஆஸ்திரேலிய இளைஞன் நிகோலஸ் ஜேம்ஸின் அமெரிக்க தொலைக்காட்சி பேட்டியை பார்த்தான். அவனை ரோல் மாடலாக வைத்து நாமும் வாழ்க்கையில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தோடு தற்போது சிகரத்தை நோக்கி பயணிக்கிறான் அப்துல்லா பவாஜிர்.
சென்ற பிப்ரவரியில் மராத்தான் ஓட்டப்பந்தயம் உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசையும் தட்டிச் சென்றார் பவாஜிர். பவாஜிர் ரியாத் நகரில் பிறந்தது 1992ல்.
'நான் வெளியிடங்களுக்கு சென்றால் பலரும் என்னை இரக்கத்தோடு பார்க்கின்றனர். இதை நான் விரும்பவில்லை. சிறு வயதில் இருந்தே இந்த குறை தெரியாமல் நான் வளர்க்கப்பட்டேன். எனது பெற்றோர் மிகுந்த தைரியம் கொடுத்து என்னை வளர்த்துள்ளார்கள். இடைநிலைக் கல்வியைத் தாண்டியபோது பொதுப் பள்ளிக் கூடத்துக்கு மாற்றப்பட்டேன். இது எனது வாழ்வில் மிக முக்கியமான தருணம். இங்கு நான் ஒரு குறையுடைவனாக பார்க்கப்படவில்லை. ஆனால் பொது இடங்களில் என்னை பரிதாபமாக பார்க்கும் நிலைதான் இன்னும் மாறவில்லை' என்கிறார்.
பவாஜிர் தனது பெற்றோருக்கு ஆறாவது மகனாக பிறந்தார். இமாம் முஹம்மது பின் சவுத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழிப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றார். இடைநிலை மற்றும் உயர்நிலைப் படிப்புகளில் முக்கிய பாடமாக அரபியை தேர்ந்தெடுத்து மிகச் சிறந்த பேச்சாளராக உருவெடுததார். 2010 ஆம் ஆண்டு சமூக அறிவியல் சம்பந்தமாக மிகச் சிறந்த ஒரு சொற்பொழிவை இமாம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார். சமுக அறிவியலில் அதிக கவனம் செலுத்துவதன் காரணம் இதன் மூலம் மக்களுக்கு பல சேவைகளை செய்ய முடியும் என்ற எண்ணத்தினால் என்று சொன்னபோது நாம் ஆச்சரியப் படுகிறோம்.
"உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இது பலருக்கு சிரமத்தைக் கொடுக்கும் என்று ஏனோ இவர்கள் உணருவதில்லை. எனது உடல் முழு ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் என்னால் இந்த சாதனைகளை செய்து முடித்திருக்க முடியாது" என்று நினைவு கூர்கிறார்.
இங்கு பள்ளியில் நான் தொழச் சென்றால் கை கால்கள் நன்றாக உள்ள சில இளைஞர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் எழுந்து ஏதாவது காரணங்களைச் சொல்லி பாதையில் அமர்ந்து பிச்சை எடுப்பதை பார்க்கிறேன். இப்படி பள்ளியில் பிச்சை எடுப்பதை அரசும் கண்டிக்கிறது. இவர்கள் பவாஜிரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். உண்மையில் பிச்சை எடுக்க முழு தகுதியும் உடையவர் பவாஜிர். ஆனால் மற்றவர்கள் தன்னை இரக்கத்தோடு பார்ப்பதையே விரும்புவதில்லை என்ற தன்மான உணர்வு எல்லோரும் பின் பற்ற வேண்டிய உணர்வு. நமது தமிழகத்தில் சொல்லவே வேண்டாம். பிச்சைக்கார தொழில் முதலீடு இல்லாத முழு நேர தொழிலாகவே மாறி விட்டது. அரசாங்கமும் இலவசங்களை வாரி வழங்கி எல்லோரையும் ஏறத்தாழ பிச்சைக் காரர்களாகவே மாற்றி விட்டது. :-) காதல் தோல்விக்கும் பரீட்சையில் குறைந்த மார்க் எடுத்ததற்கும் தமிழகத்தில் பலர் தற்கொலைகளை நாடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. இது போன்றவர்கள் கைகளையும் கால்களையும் இழந்த இவர்களைப் பார்த்து மனம் உறுதி பெற வேண்டும்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
02-03-2014
இந்த காணொளியையும் இந்த அன்பர் கொடுத்த லெக்சரையும் அவசியம் அனைவரும் பொறுமையாக பாருங்கள். 'கால்களையும் கைளையும் இழந்த நான் சந்தோஷமாக வாழவில்லையா?' என்று நம் எல்லோரையும் பார்த்துக் கேட்கிறார் ஜேம்ஸ். என்னை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்த காணொளி!
No comments:
Post a Comment