Followers

Sunday, March 16, 2014

கல்லடி படுவதால் மரம் காய்க்காமல் போவதில்லை!

கல்லடி படுவதால் மரம் காய்க்காமல் போவதில்லை!

எம்ஜிஆர் முதல்வராக பதவி ஏற்றவுடன் கருணாநிதிக்கு அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்று தவறாக கணித்துக் கூறியவர்கள் பலர். குடும்ப அரசியலாலும், ஊழல் குற்றச்சாட்டுகளாலும், எம்ஜிஆரின் சினிமா கவர்ச்சியினாலும் திமுக அன்று சீந்துவாரின்றி கிடந்தது. எல்லோரும் ஒதுக்கித் தள்ளிய கலைஞரை இஸ்லாமிய சமூகம் மட்டும் உதறித் தள்ளவில்லை. அன்போடு அரவணைத்தது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடங்களில் திமுகவின் வாக்கு வங்கி என்றுமே குறையாமல் இருந்தது. காயல்பட்டினத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் திமுக அனுதாபிகளான சில முஸ்லிம்கள் எம்ஜிஆரின் வாகனத்தையும் சேதப்படுத்தி, அவரது தொப்பியே கீழே நழுவும் அளவுக்கு தீவிரமாக செயல்பட்டனர். அந்த அவமானத்துக்குப் பிறகுதான் 'முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும் போது இந்துக்களுக்கு இந்து முண்ணனி இருப்பதில் என்ன தவறு' என்று அறிக்கை விட்டு எம்ஜிஆர் இந்துத்வா வளருவதற்கு ஆசி வழங்கினார். ஆக தமிழகத்தில் இந்துத்வாவின் பக்கம் எம்ஜிஆரை சாய்த்ததில் கலைஞர் அபிமானிகளான அனைத்து முஸ்லிம்களுக்கும் பங்கு உண்டு.

அடுத்து முகமது நபியவர்களை புகழ்ந்து மீலாது மேடைகளில் கலைஞர் பேசுவார். காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டுவார். மீலாது நபிக்கு விடுமுறை விடுவார். நோன்பு கஞ்சி குடிப்பார். அவ்வப்போது இந்து மத மூடப்பழக்கங்களை சாடி அறிக்கை விடுவார். இதுவே எங்களுக்கு போதும் என்று முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை சில ஆண்டுகள் முன்பு வரை தொடர்ந்து செலுத்தி வந்தனர். எல்லா இடத்திலும் எம்ஜிஆர் வெற்றிபெற்றாலும் சென்னை மாநகரம் மட்டும் திமுகவின் பிடியில் இருக்கும். அதற்கு காரணம் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வாக்கு. நானே கூட பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'எம்ஜிஆர் ரசிகன்: கலைஞரின் தொண்டன்' என்று எழுதி ஆசிரியரிடம் குட்டு வாங்கிய அனுபவம் உண்டு. 

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு திரும்பவும் கலைஞர் முதல்வராகிறார். அப்போதுதான் தவ்ஹீத் ஜமாத்தும் தமிழகத்தில் வேரூன்ற ஆரம்பிக்கிறது. இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் பிஜேயின் பேச்சால் கவரப்பட்டு குர்ஆனையும் ஹதீஸையும் கையில் எடுக்கிறார்கள். அப்போதுதான் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால்தான் நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம்: கல்வி அரசு வேலைகளில் முஸ்லிம்கள் அமர வேண்டும்: என்ற கோரிக்கையை பிஜே வைக்கிறார். திமுக அபிமானிகளான முஸ்லிம் லீக் ஏன் முதல்வரிடம் இஸ்லாமியரின் தனி இட ஒதுக்கீடு பற்றி பேசுவதில்லை என்று கூட்டங்களில் கேள்வி எழுப்பினார் பிஜே. அப்துல் சமது சாஹிபும், அப்துல் லத்தீப் சாஹிபும் பிஜேயிடம் 'இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நம்புகிறீர்களா?' என்று சற்று கிண்டலோடு கேட்டார்கள். கண்டிப்பாக கிடைக்காது என்றுதான் அவர்களும் நம்பியிருந்தார்கள். பரவலாக தவ்ஹீத் ஜமாத் தமிழகமெங்கும் வைத்த தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை பரிசீலித்த அப்துல் லத்தீப் ஒரு முறை இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் பேசவும் ஆரம்பித்தார். அதற்கு பதிலளித்த கலைஞர் கோபமாக 'தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறீர்களா' என்று சொல்லி அன்றே அவரது வாயை அடைத்தார் கலைஞர்.

ஆனால் பிஜே அசரவில்லை. தனது அனைத்து கூட்டத்திலும் 'கருணாநிதிக்கு இனி முஸ்லிம்களின் ஓட்டு தேவை என்றால் தனி இட ஒதுக்கீடு தந்தாலே சாத்தியம்' என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் பலரின் சூழ்ச்சிகளால் தமுமுக தனியாக பிரிகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உதயமாகிறது. முன்பை விட மிக வீரியமாக இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை வைக்கப்படுகிறது. எம்பி சீட்டோ, எம்எல்ஏ சீட்டோ இவர்கள் கேட்பதில்லை. ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கும் இட ஒதுக்கீட்டைத்தானே கேட்கிறார்கள் என்பதால் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கையை ஜெயலலிதாவும் ஏற்கிறார். ஆணையம் அமைக்கிறார். பிறகு வந்த கலைஞர் அந்த ஆணையத்தின் வழி காட்டுதலின் படி 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டைத் தருகிறார்.

தற்போது கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்கள் கணிசமாக சிரமமின்றி உள்ளே நுழைய இந்த இட ஒதுக்கீடு மிக உதவியாக உள்ளதாக பலரும் சொல்கின்றனர். முன்பு ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டோம். அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பெரும் மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருக்க இங்கு தவ்ஹீத் ஜமாத், தமுமுக, எஸ்டிபி போன்ற இயக்கங்கள் வலுவாக இருப்பதும் ஒரு காரணம். சிறிய தவறு நடந்தாலும் 1000, 2000 பேர் என்று உடன் கூடி நியாயத்துக்காக போராடும் வழி முறையையும் நாம் அனைவரும் கடைபிடிப்பதும் ஒரு காரணம். முன்பெல்லாம் பஸ்ஸை உடைப்போம், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோம், காவலர்களை தாக்குவோம். இது சரியான வழி முறை அல்ல. ஜனநாயக நாட்டில் போராட்டத்தின் மூலம் பலதையும் வென்றெடுக்கலாம் என்று தவ்ஹீத் ஜமாத் இளைஞர்களையும் பெண்களையும் களத்தில் இறக்கியது.

தவ்ஹீத் ஜமாத் பெற்ற வெற்றியைப் பார்த்து மற்ற இயக்கங்களும் இதே போராட்ட முறையை கையிலெடுத்தன. அவர்களும் பல கோரிக்கைகளில் வெற்றியைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றொரு குஜராத்தாக மாறாமல் இருப்பதற்கு இந்த போராட்ட முறை மிகச் சிறந்த வழியாக உருவெடுத்துள்ளது.

தற்போது தேர்தல் நெருங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எதற்காக அதிமுகவை ஆதரித்தோம் என்பதற்கு விளக்கத்தை கொடுத்துள்ளார்கள். அவர்களின் முடிவு தவறாகவும் இருக்கலாம்: சரியாகவும் இருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன். இந்த தேர்தல் முடிவை காரணமாக வைத்து தவ்ஹித் ஜமாத்தை வசை பாடுவதையே குறிக்கோளாக கொண்டு சிலர் தினம் பதிவுகளை இடுகின்றனர். தேர்தல் இன்று வரும்: நாளை சென்று விடும். ஆனால் தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் இதனால் எந்த விதத்திலும் தொய்வடைந்து விடாது. இறைவன் நாடினால் தொய்வடைய விடவும் மாட்டோம்.

இந்த தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்களின் வாரிசுகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருவோம் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

கல்லடி படுவதால் மரம் காய்க்காமல் போவதில்லை!


8 comments:

Anonymous said...

இது போன வருஷம் !

அதிமுக வுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் இஸ்லாமியனுக்கு விழும் வேட்டு-- அன்று அண்ணார் பீஜே

இது இந்த வருஷம் !

திமுக வுக்கு வாக்களிப்பதும் மோடிக்கு வாக்களிப்பதும்
ஒன்றுதான் --இன்று இன்னார் பீஜே

இதை எல்லாம் பார்க்கும் பொது ஒன்று நியாபகம் வருகிறது --

- நான் இருக்கக்கூடிய ''க கு க'' கட்சியில் எனக்கு சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அண்ணனும் இரும்பு கோட்டையானுமாகிய ''இ கு க'' கட்சியில் இணைந்து விட்டார் --கட்சி மாறுவதால் அண்ணனை கோழை என்றோ பச்சோந்தி என்றோ எண்ணிவிடாதீர்கள் இருக்கின்ற கட்சியிலே இருக்கின்ற மேடையிலேயே இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டில் அண்ணன் ஒருவருக்குதான் இருக்கிறது என்பதை சொல்லிகொள்கிறேன் -அண்ணே வாங்கன்னே போலாம் ----

aiyo aiyo

இராஜகிரியார் said...

சலாம் சகோ.

நீங்கள் சொன்னதில் பெரும்பாலனவை சரிதான். அதனால் முஸ்லிம்களால் பல இலாபங்கள் அடைந்தும் முஸ்லிம்களின் எதிரியாக இருக்கும் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை மறைமுகமாக சொல்ல வருகிறீர்கள்.

உங்கள் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்று கொண்டாலும், அச்சச்சோ... ஒரு 3 வருடங்களுக்கு முன்பு தங்களுக்கோ. ததஜவிற்கோ அல்லது அதன் தலைமைக்கோ இத்தனையும் தெரியாமல் போய் விட்டதே. என்ன செய்ய?

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ.

//உங்கள் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்று கொண்டாலும், அச்சச்சோ... ஒரு 3 வருடங்களுக்கு முன்பு தங்களுக்கோ. ததஜவிற்கோ அல்லது அதன் தலைமைக்கோ இத்தனையும் தெரியாமல் போய் விட்டதே. என்ன செய்ய? //

அப்பொழுது இவை அனைத்தும் தெரியாமல் இல்லை. இத்தனை அழுத்தங்களை தவ்ஹீத் ஜமாத் கொடுத்த பிறகுதான் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. அதற்கான நன்றிக் கடனாகத்தான் போன பாராளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த ஆதரவை கொடுத்து அனைவரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். இந்த முறை ஆளும் கட்சி அதிமுக. ஆளும் கட்சிதான் நமக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும். எனவே தான் அதனை ஒத்துக் கொண்ட அதிமுகவுக்கு இந்த முறை வாக்கு. அடுத்த முறை இதே ஆதரவு திமுகவுக்கும் போகலாம். யார் அந்த நேரத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே நமது ஓட்டு என்ற நிலை அனைத்து இயக்கத்துக்கும் வந்து விட்டால் முழு இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடுவர்.

Anonymous said...

so if modi gives 20% reservations for muslim you will vote for him also?

சுவனப் பிரியன் said...

//so if modi gives 20% reservations for muslim you will vote for him also? //

அப்படி நான் சொன்னேனா? இதற்கு பெயர்தான் அவதூறு!

Anonymous said...

சுவன்ப்ரியர், 'பார்ப்பனியத்திடம் சரணடைந்த த.த.ஜ' என்று ஒரு பதிவு எழுதலாமே நீங்கள். நடப்பது சட்டமன்ற தேர்தல் இல்லையே. பார்ப்பன அம்மாவிற்கும், பார்ப்பன மோடிக்கும் இருக்கும் நட்பு உலகம் அறிந்ததாயிற்றே, கடைசியில் நீங்களும் பார்ப்பன அடிமைகள் தானா? அய்யே, அய்யே எந்த காலத்திலும் அரபுகள் யூதர்களிடம் மண்டியிடுவது தான் கடவுள் சித்தம்.

இராஜகிரியார் said...

அடடே... பூனைக் குட்டி வெளியில் வந்துடுச்சே... இதை தெளிவாக பதிவிலேயே குறிப்பிட்டிருந்தால் “பக்தி முற்றிய ஒரு பக்தனின் உளறல்“ என்று ஒதுக்கி விட்டிருப்பேனே... மேற்கண்ட என்னுடைய கமெண்டிற்கும் வேலை இருந்திருக்காது...!!! என்ன செய்ய? பெரும்பாலான தமிழக முஸ்லிம்களின் மனநிலை இன்று ததஜவின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பதால் நேரிடையாக சொல்லாமல் ”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எதற்காக அதிமுகவை ஆதரித்தோம் என்பதற்கு விளக்கத்தை கொடுத்துள்ளார்கள். அவர்களின் முடிவு தவறாகவும் இருக்கலாம்: சரியாகவும் இருக்கலாம்.“ என்று நடுநிலை வேடம் போட்டு தலைமையின் முடிவு படி சமுதாயத்தை அடகு வைக்கிறீர்கள். ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்... யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் எங்களை பாதுகாக்க கருணையாளனாகிய, எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.

//இத்தனை அழுத்தங்களை தவ்ஹீத் ஜமாத் கொடுத்த பிறகுதான் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது//
அப்படியா? உங்களால் தான் கிடைத்ததா? ஹி..ஹி... எல்லா தரப்பினருமே இதையே தான் சொல்கிறார்கள். சகோதரா. நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கலாம். ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

//எனவே தான் அதனை ஒத்துக் கொண்ட அதிமுகவுக்கு இந்த முறை வாக்கு//
அப்படியாங்கண்ணா? தமிழில் ஒரு பழமொழி உண்டு. கேப்பைல நெய் ஒழுகுதுண்ணா கேட்பாருக்கு மதி எங்கே போச்சு - என்று.

//அடுத்த முறை இதே ஆதரவு திமுகவுக்கும் போகலாம்//
ஆமாமாம்.. சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கு தமுமுக அதிமுக பக்கம் வர வேண்டும்.

அல்லாஹ் உங்களையும் உங்கள் கூட்டத்தினரையும் சூனியத்தை விட்டு பாதுகாப்பானாக!!!

Sabu said...

என்ன கொடுமை சுவனா இது!

பீஜே மோடியை ஆதரித்துவிட்டால் கூட அதையும் நியாயப்படுத்துவதுதான் அடிபொடிகளின் வேலை என்பதை நிரூபிக்கிறது உங்களின் இந்தப் பதிவு. ஜெயாவை ஆதரிப்பது கிட்டத்தட்ட மோடியை ஆதரிப்பதைப் போன்றது தானே. பீஜே தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயங்காதவர் என்பது உண்மையானால், பெட்டர் லேட் தென் நெவர், இப்போதே இந்த வரலாற்றுப் பிழையை சரிசெய்யும்படி தொண்டரடிப் பொடியாழ்வார்களாகிய நீங்கள் அழுத்தம் கொடுங்கள் - பீஜே கட்சியை விட முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்துதான் முக்கியம் என்று நினைத்தால்!