Followers

Wednesday, September 03, 2014

விநாயக சதுர்த்தியும் முஹர்ரம் பண்டிகையும்!



//முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.//

-ஆதி சேஷன்!

ஆதி சேஷன் அழகிய பதிவை இட்டுள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஷியாக்கள் குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளில் இருந்தோ ஆதாரம் காட்ட முடியாது. அன்றைய பாரசீகர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். நம் இந்திய கலாச்சாரத்தையும் ஒத்தவர்களாக இருந்தனர். பார்பனர்களின் பல பழக்க வழக்கங்கள் ஈரானியர்களை ஒத்தே இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். தம் மூதாதையரின் பழக்க வழக்கத்தில் பற்று கொண்ட ஈரானிய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் ஏற்றிய புதிய பழக்கங்களே ஆதி சேஷன் சுட்டிக்காட்டிய பிரச்னைகள். இந்த பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பழைய பாசம் இன்னும் இருப்பதால் தானோ எண்ணவோ சுப்ரமணியம் சுவாமி போன்ற பார்பனர்கள் ஷியாக்களை ஏகத்துக்கும் ஆதரிப்பர். சுவாமி தனது மகளைக் கூட ஒரு ஷியா முஸ்லிமுக்குத்தான் கட்டிக் கொடுத்துள்ளார்.

'இறைவனையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து அந்த இறைவனை வணங்குவது போல் மற்ற தெய்வங்களை வணங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கைக் கொண்டோர் அவர்களை விட இறைவனை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் இறைவனுக்கே என்பதையும் இறைவன் கடுமையாக தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.'
-குர்ஆன் 2 : 165

'இறைவன் அருளியதைப் பின் பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின் பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
-குரஆன் 2 : 170

'அவர்களே நேர்வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது?'
-குர்ஆன் 2 : 175

ஏக இறைவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள். தங்களது மார்க்கத்தைப் பிரிந்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்ப்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
-குர்ஆன் 30 : 31,32

இந்து மதத்தின் பெருமைகளை குலைக்கும் விதமாக விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுவதை பார்க்கிறோம். அதே போல் இஸ்லாத்தில் முஹர்ரம் பண்டிகையில் வழிகளை மறித்து உடலை கீறிக் கொண்டு ஆக்ரோஷமாக வருவதும் இஸ்லாத்தின் பெருமைகளை குலைப்பதாகவே உள்ளது. இறைவனின் வழி காட்டுதல் இல்லாது இறை வணக்கம் இருந்தால் அது மனித குலத்துக்கு எத்தகைய கேட்டை விளைவிக்கும் என்பதற்கு இந்த இரண்டு பண்டிகைகளே சாட்சி.

No comments: