
படைப்பாளுமை மிகுந்த சர்வதேசத் திரைப்படங்களில் ஒன்று ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. 1997-ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தைப் பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியிருந்தார். ஒரு ஜோடி ஷுவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலகத்தையே கலங்க அடித்தவர்.
உலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் தரமான சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் படைப்புடன் உறவுகளின் உன்னதம் பேசும் பல திரைப்படங்களைக் கொடையாக அளித்தவர். அப்படிப்பட்ட இயக்குநரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் எப்படியிருக்கும்? அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் அந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக அங்கேயே தங்கிவிட்டாராம் இசைப்புயல்.
இசையமைக்கும் படங்கள் எந்த மொழியில் உருவானாலும் எத்தனை பெரிய படவுலகாக இருந்தாலும் இடம்பொருள் ஏவல் என்ற பாரபட்சம் காட்டாமல் முழு அர்ப்பணிப்பைச் செலுத்திவிடும் கலைநேர்மை கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மஜித் மஜிதி படத்துக்கு இசையமைத்துவிட்டுத் திரும்பியதிலிருந்தே மிகவும் ஆத்ம திருப்தியோடு காணப்படுகிறாராம் அவர்.
அது மட்டுமல்ல, அந்தப் படத்தின் வெளியீட்டையும் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். மஜித் மஜீதி ஈரானிய முஸ்லிம். ஏற்கெனவே இந்திய கலாசாரத்தை திரைப்படங்களாக ஏன் எடுப்பதில்லை என்று ரஹ்மானிடம் கேட்டவர் இவர்தான். மஜீதி மேல் அதிக பற்றுக் கொண்ட ரஹ்மான் ஷியாயிசத்தில் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நமது இந்தியாவிலும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்திலும் தர்ஹா வணக்கத்தை அறிமுகப்படுத்தி ஏக தெய்வ கொள்கையை பலரிடமிருந்து பறித்ததே முந்தய ஷியா ஆட்சியாளர்கள். ஏற்கெனவே ஒவ்வொரு தர்ஹாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஹ்மான். குர்ஆனின் உளப்பூர்வமான பல வசனங்கள் இன்னும் இவரது உள்ளத்தை தொடவில்லை என்றே நினைக்கிறேன். அந்த நிலைக்கு சென்றவுடன் தர்ஹாவின் மேல் உள்ள பற்று தானாக சென்று விடும்.
மேலும் மஜீத் மஜீதி முகமது நபியின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருப்பதாகவும் இந்த வருடமே அதன் வெளியீடு இருக்கும் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த படம் வெளியானால் இஸ்லாத்தை பற்றிய மேற்குலக மதிப்பீடு முற்றிலுமாக மாறும் சூழல் ஏற்படும் என்று வேறு கூறியிருந்தார். ரஹ்மான் இசையமைத்த படம் முகமது நபியைப் பற்றியதா அல்லது அது வேறு படமா என்று தெரியவில்லை. ஒரு ஈரானியர் இந்த படத்தை எடுப்பதால் குர்ஆனின் வசனங்களோடு மோதாமலும் முகமது நபியின் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்து நிகழ்வுகள் எடுக்கப்பட்டதாகவும் அது இருக்க வேண்டும். இந்த படத்தை மிகச் சிறப்பாக எடுப்பார் மஜீதி என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்கார் விருதுக்கே கூட செல்லலாம். ஆனால் பொய் கலக்காமல் உண்மை வரலாறை எடுக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் எதிர்பார்ப்பு. படத்தைப் பற்றிய முழு விபரங்களும் இனிமேல்தான் வெளியாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment