Followers

Wednesday, September 03, 2014

மஹாத்மா காந்தியின் மகன் இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி.....



மஹாத்மா காந்திக்கு நான்கு புதல்வர்கள். ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ் என்ற நான்கு ஆண் குழந்தைகள் காந்திக்கு பிறந்தனர். மஹாத்மா காந்தி கஸ்தூரிபாயை மணக்கும் போது வயது 13. பால்ய விவாகம் அன்றைய இந்தியாவில் பலரும் கடைபிடித்தால் இது நமக்கு ஆச்சரியத்தை தராது. காந்திஜிக்கு 18 வயதாகும் போதே முதல் மகன் பிறக்கிறார். கடைக்குட்டியான ஹரிலால் சிறுவனாக இருக்கும் போது காந்தி ஆப்ரிக்கா சென்று விடுகிறார். அதன் பிறகு இந்திய விடுதலை போராட்டமும் சேர்ந்து கொண்டதால் குழந்தைகளோடு அதிக நேரத்தை காந்தியால் செலவிட முடியவில்லை.

இளமையில் தந்தையின் அன்பு கிட்டாததாலோ என்னவோ இறக்கும் வரை காந்தியோடு முறுகல் நிலையையே கடைபிடித்தார் ஹரிலால். பிரிட்டிஷார் காந்தியை பழி வாங்குவதற்காக அவருக்கு போதை பழக்கத்தையும் விபசாரிகளிடம் செல்லும் பழக்கத்தையும் கற்றுக் கொடுத்தனர் என்றும் சொல்கின்றனர். இவரது மனைவி ப்ளூ ஜூரத்தினால் பாதிக்கப்பட்டு இள வயதிலேயே இறந்து விட்டார். மூன்று குழந்தைகள். மறுமணம் செய்து கொள்ள ஹரிலால் விரும்பினார். ஆனால் காந்தி 'உனக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை' என்று கூறி திருமணத்தை தடை செய்து விட்டார். இதுவும் கூட தந்தையின் மேல் கோபம் கொள்ள வைத்திருக்கும்.

திடீரென்று ஒரு நாள் மும்பை ஜூம்ஆ பள்ளிக்குச் சென்று 'நான் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறி தனது பெயரை அப்துல்லாவாக மாற்றிக் கொண்டார்.

தாயாரான கஸ்தூரிபாவுக்கு இது மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இது பற்றி தனது கணவனான காந்திஜியிடம் கலந்துரையாடினார். இது பற்றி காந்தி தனது கடிதங்களில் விவரிக்கும் போது...

'மத மாற்றம் என்பது ஒரு மனிதனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் உள்ள விஷயம். மனம் சுத்தமாகாமல் பெயரை மட்டும் மாற்றிக் கொள்வதால் ஒரு மனிதனுக்கு எந்த பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

இந்து மதமும், இஸ்லாமிய மதமும் எனது இரண்டு கண்களைப் போன்றது. என் மகன் ஹரிலால் அப்துல்லாவாக பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய மதத்துக்குள் சென்று விட்டதாக பத்திரிக்கைகளில் படித்தேன். ஏதோ ஒரு வகையில் என் மகனுக்கு சாந்தியும் சமாதானமும் இஸ்லாத்தின் மூலம் கிடைக்கும் என்றால் அது பற்றி எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை' என்றார் பெருந்தன்மையாக!

இஸ்லாம் சொல்வதைத்தான் காந்தியும் பிரதிபலிக்கிறார். மனம் மாற்றமடையாமல் ஒரு மனிதன் தனது பெயரை மாற்றிக் கொள்வதால் மட்டுமே இஸ்லாமியனாகி விட முடியாது. மேலும் சில நிர்பந்தங்களை காண்பித்து ஒருவரை இஸ்லாத்தில் நுழைய வைப்பதையும் இஸ்லாம் தடுக்கிறது. குர்ஆனும் நபிகளின் பொன்மொழிகளும் ஒருவரின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு இஸ்லாத்தில் நுழைவிப்பதை தடை செய்கிறது. சொல்வது மட்டுமே நமது கடமை. மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது இறைவன் புறத்தில் இருந்து வர வேண்டியது.

இதனால்தான் நிர்பந்தத்திற்காக இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று வந்த ஒரு மன்னரையே ஒளரங்கஜேப் தடுத்த சம்பவம் வரலாறுகளில் காணக்கிடைக்கிறது.

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு. பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உள்ளத்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.

No comments: