
சென்ற வருடம் டெல்லி விஞ்ஞான் பவனில் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விருதை ஜனாதிபதி பிரணப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார். பீஹார் மாநிலத்தை சேர்ந்த யாஸ்மின் என்ற இஸ்லாமிய சகோதரியும் 2012 ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வாறு விருதை வழங்கும் போது ஜனாதிபதி சம்பிரதாயமாக கையெடுத்து கும்பிடுகிறார். விருதை வாங்கும் சகோதரி யாஸ்மின் இஸ்லாமிய மரபுபடி தனது கைகளை இதயத்தில் வைத்து அவருடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார். அவரவர் மத பண்பாடுகளை எந்த வெறுப்பும் இல்லாமல் கடைபிடிப்பது நமது பாரதத்தில் தொன்று தொட்டு நிலவி வரும் கலாசாரம். இது தான் மத சார்பற்ற இந்தியா!
ஜனாதிபதியே கையெடுத்து கும்பிடும் போது இவரும் கும்பிட வேண்டியது தானே என்று சில இந்துத்வாவாதியினர் கேட்கலாம். கையெடுத்து கும்பிடும் இந்த பழக்கமானது வெறும் சம்பிரதாயமாக முடிந்து விடுவதில்லை. மனிதனை தெய்வமாக மாற்றக் கூடிய வழமை வருவதற்கு முதல்படியே இந்த கையெடுத்து கும்பிடும் வழக்கம்தான். சுய மரியாதை உடைய ஒரு மனிதன் சக மனிதனை கடவுளாக நினைக்கவே மாட்டான். என்னதான் அவர்கள் மனித புனிதர்களாக இருந்தாலும் கடவுள் நிலையை மனிதன் அடையவே முடியாது.
மனிதப் புனிதர்களாக கருதப்பட்ட சாய்பாபா, நித்தியானந்தா, ஜெயேந்திரர் போன்றவர்களலெல்லாம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குண்டு, அதை மறைக்க கொலை வரை கூட சென்றதை நாம் மறந்து விட முடியாது. சாதாரண மனிதர்களாகிய நமக்கு இருக்கும் சுய கட்டுப்பாடு கூட 'மனித தெய்வம்' என்று கூறக் கூடிய இவர்களிடம் இல்லாதது இவர்கள் என்றுமே கடவுளாக முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்து மத வேதங்களும் பழந் தமிழ் இலக்கியங்களும் இது போல் மனிதனை தெய்வமாக பூஜிக்க சொல்லவில்லை. இவை எல்லாம் பிற்காலத்தில் கலாசார மாற்றத்தினால் ஏற்பட்ட புதிய பழக்கங்கள் ஆகும்.
எனவேதான் நபிகள் நாயகம் தான் சபைக்கு வரும் போது தனக்காக யாரும் எழுந்து நிற்க வேண்டாம் என்று தடை செய்ததைப் பார்க்கிறோம். தனது காலில் யாரும் விழக் கூடாது என்று மனிதனுக்கு சுய மரியாதையை கற்றுத் தந்ததையும் பார்க்கிறோம்.
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.
நூல் : அஹ்மத் 12093
'அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதனையும் நான் பின்பற்றுவதில்லை' என்று முஹம்மதே! கூறுவீராக! 'குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!
(திருக்குர்ஆன் 6:50)
'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று முஹம்மதே! கூறுவீராக!
(திருக்குர்ஆன் 7:188)
குர்ஆனின் இந்த இரு வசனங்களும் நபிகள் நாயகமாக இருந்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான். அவருக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அவருக்கு வரும் இறை செய்திதான் என்பதை விளங்குகிறோம். எனவே மனிதர்களை மதிப்போம். அதே நேரம் அந்த மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தாமலும் இருப்போம்.!
3 comments:
வணக்கம் சொல்லலாமா ?
அழகிய முகமன்
அஸ்ஸலாமு அலைக்கும்
மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.
இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.
ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.
ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.
உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?
ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.
நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒருவரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?
நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!
சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?
http://cedasrilanka.blogspot.com
வணக்கம் சொல்லலாமா ?
அழகிய முகமன்
அஸ்ஸலாமு அலைக்கும் PART 2.
தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?
வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ராம் ராம்' என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக 'ராம் ராம்' என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?
இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் 'நமஸ்தே' என்றோ 'நமஸ்கார்' என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் 'நமஸ்காரம்' என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி 'வணக்கம்' என்கின்றனர். இவை அனைத்தும் 'நான் உங்களை வணங்குகிறேன்' என்ற பொருளையே தருபவை.
யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? 'வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்' என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் 'வணக்கம்' என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் 'வணக்கம்' கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)
இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?
ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்'(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் 'வ அலைக்குமுஸ் ஸலாம்' (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)
ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!)
http://cedasrilanka.blogspot.com
//விருதை வாங்கும் சகோதரி யாஸ்மின் இஸ்லாமிய மரபுபடி தனது கைகளை இதயத்தில் வைத்து அவருடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார்//
1. ஃபோட்டோவில் அப்படி தெரியவில்லை. சகோதரி யாஸ்மின் செய்வதும் வணங்குவது மாதிரிதான் உள்ளது.
2.”இஸ்லாமிய மரபு” - என்று சொல்லியிருக்கிறீர்கள். இஸ்லாத்தில் அப்படி எதுவும் பொதுவான மரபு உள்ளதா ? விளக்கவும்.
Post a Comment