
சவுதியின் ரியாத்திலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹஃப்ரல்பாதின் என்ற ஊர். இங்கு சமீபத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. துர்க்கி அல் துவாய்க் என்ற சவுதி இளைஞரைப் பற்றிய செய்தி இது.
இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இந்த இளைஞரின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். மின் கசிவின் காரணமாக திடீரென்று பெற்றோர் இருந்த மேல் மாடி அறை தீப்பிடித்துக் கொண்டது. தீ வேகமாக அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. கீழே இருந்த துர்க்கி வேகமாக மேல் தளத்துக்குச் சென்று தீப்பிடித்த அறையினுள் நுழைந்தார். தீயின் கோர பிடியில் சிக்கித் தவித்த தனது பெற்றோர் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்து அறையின் வெளியில் போட்டார். இவ்வளவு முயற்சி செய்தும் தீயின் கோரதாண்டவம் மூவரின் உடலையும் பதம் பார்த்தது. மகனையும் பெற்றோரையும் வேகமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்தனர். தீயின் தாக்கம் அதிகமாக தாக்கியிருந்ததால் இவர்களை ரியாத்துக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். வயதான தாய் தந்தையர் தீயின் காயங்களால் அவதிப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இருவருமே இறந்து விட்டனர். மகன் காப்பாற்றியதால் ஏதோ கொஞ்ச காலம் இவர்களின் வாழ்வை உலகில் ஓட்ட முடிந்தது.
துர்க்கிக்கும் உடலில் பலத்த தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடலின் 80 சதவீதமான பாகங்கள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இன்றும் உள்ளார். இவரது இளைய சகோதரர் சுல்தான் செய்தியாளர்களிடம் 'எனது சகோதரன் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. உடலில் 80 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது. தாய் தந்தையருக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்த எனது சகோதரன் எங்கள் குடும்பத்தின் ஹீரோவாக பார்க்கப்படுகிறான். எனது சகோதரன் பிழைப்பது கஷ்டம் என்கின்றனர் மருத்துவர்கள். இறைவனின் நாட்டம் அவ்வாறு இருக்கும் போது நம்மால் என்ன செய்ய முடியும். எனது சகோதரனுக்காக பிரார்த்தியுங்கள்' என்று கண்ணீர் மல்க கூறினார்.
சாராயம் குடிக்க பணம் தராத தனது தாயை ஒரு மகன் வெட்டிக் கொன்றதை சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் படித்தோம். அதே வயதுடைய துர்க்கி தனது பெற்றோரைக் காப்பாற்ற தீயினுள் புகுந்து இன்று தனது உயிரையும் விடும் நிலைக்கு சென்றுள்ளார்.
மனிதர்களில்தான் எத்தனை நிறங்கள்!
குறள் 70:
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு" என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
-----------------------------------------------------
அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (ச்சீ...) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
(அல்-குர்ஆன் 17:23-24)
தகவல் உதவி
சவுதிகெஜட்
06-09-2014
No comments:
Post a Comment