Followers

Tuesday, September 09, 2014

உணவு சுழற்சி முறை இருந்தாலே உலகம் இயங்க முடியும்!



'வானத்தையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை'
-குர்ஆன் 21:16


விலங்குகளை உணவுக்காக கொல்வது பாவம் என்று ஒரு வாதம் பலராலும் வைக்கப்படுகிறது. இது இந்த உலக நியதிக்கு முற்றிலும் ஒத்து வராத ஒரு தத்துவம். இந்த உலகில் உள்ள பொருள்கள் யாவும் ஏதோ ஒரு காரணத்தினால்தான் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் நமக்கு அது உதவிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும்? சூரியனை படைத்து மரங்களையும் படைத்து லட்சக்கணக்கான உயிரினங்களையும் படைத்த இறைவன் எதனையும் வீணுக்காக படைக்கவில்லை என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

'பூமியில் வாழும் உயிரினங்கள் தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!'
-குர்ஆன் 6;38

இந்த வசனத்தின் மூலம் உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் மனிதனைப் போலவே ஒரு சமுதாயமாக வாழ்கின்றன. ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சிக் கூட தனது இனம் எது? தான் யாரோடு உறவு கொள்ள வேண்டும்? தனது குழந்தை யார்? என்று பகுத்தறிந்து ஒரு சமுதாயமாகவே வாழ்கின்றது.

நிலத்தில் வாழும் உயிரினமாகட்டும்: நீரில் வாழும் உயிரினமாகட்டும்: வானத்தில் பறந்து திரியும் பறவைகளாகட்டும்: அனைத்தும் ஒவ்வொரு சமுதாயமாக வாழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலி(Food Chain). இதைப்பற்றி நாம் பள்ளி பாடங்களில் படித்திருப்போம், இந்த உணவு சங்கிலி அமைப்பை பார்க்கும் பொழுது அது ஒரு அதிசயமிக்க மனித அறிவை மிஞ்சிய செயலாகவே காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பெரிய உயிரினம் வரை ஒரு ஏற்பாட்டுடன் நடைபெறுகின்றது. சிறு பூச்சிகளை தவளை இனம் உண்கிறது, தவளைகளை உண்ணும் பாம்பை கழுகு உட்கொள்கின்றது என அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து சுழற்சிகளை மேற்கொள்கின்றன. இது குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.



கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனப் பெருக்க காலத்தில் முப்பது கோடி முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் முட்டைகள் வரை இடும், . அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.

இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. ஜீவகாருண்யம் பேசிக் கொண்டு இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும். மேலும் இத்தனை கோடி ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற உயிரினங்கள் மனிதனால் வெட்டப்பட்டாலும் இவற்றின் எண்ணிக்கை எந்த நாட்டிலும் குறைந்ததாக காணோம். அதிகரித்த வண்ணமே இருக்கிறது. மனிதன் சாப்பிடாத புலி, சிங்கம் போன்ற உயிரினங்கள் ஆண்டு தோறும் குறைந்து வருவதையும் பார்க்கிறோம். அதே போல் காட்டில் காட்டெருமை, மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். அந்த அளவு இனப்பெருக்கமும் அதிகமாக பண்ணும் இந்த உயிரினங்கள்.

இதில் பரிணாமிவயலின் கொள்கைகளும் அடிபட்டுப் போகின்றன. பரிணாமவியல் சொல்வதென்ன? முதலில் ஒரு செல் உயிரிகள் உற்பத்தியாகி கடலிலிருந்து பரிணமித்து நீர் நில உயிரினமாக மாறி பல தரப்பட்ட உருமாற்றம் அடைந்து குரங்கு வரை வந்து அதன் பிறகு பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் இன்றுள்ள மனித இனம் உருவானதாக சொல்கிறது. அறிவியல் முடிவுகளின் விளக்கங்களின் படி இது சாத்தியமே இல்லை. ஒரே நேரத்தில் உலக உயிரினங்கள் அனைத்தும் உண்டாக்கப்பட்டிருந்தால் தான் இன்று வரை உலக உயிரினங்கள் ஜீவித்திருந்திருக்க முடியும். டார்வினின் தத்துவம் இந்த இடத்திலும் சறுக்கி விடுகிறது.

No comments: