Followers

Friday, September 05, 2014

மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!



மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார்.

“ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.

இவற்றால் வெகுண்ட ஐயா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள். முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள். தங்கத்தில் தாலி கட்டுங்கள். இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள். கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்.

இவ்வகையில், மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்த்து மன்னரிட்ட சட்டதிட்டங்களையெல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி ஏற்பட வழிவகுத்துக் கொடுத்தார் ஐயா வைகுந்தர். அவர் மக்களோடு இணைந்து வாழ்ந்தார். மன்னரின் படைகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட பொழுது, மக்களனைவரும் மன்னரின் படைகளை எதிர்த்து வீரப்போரிட்டனர்.
172 ஆண்டுகளுக்கு முன்பே, கருவறையில் சென்று வழிபடும் நிலையை ஐயா வைகுந்தர் ஏற்படுத்தினார். எங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நாங்களே நடத்திக் கொள்கிறோம். தமிழிலேயே வழிபாடு செய்கிறோம். இன்றளவும் ஐயா வைகுந்தரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.”

------------------------------------------------------------------------

மனுதருமக் கொடுங்கோன்மை எங்கே என்போரே – இதோ இங்கே…

“மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…”

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:

“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.

1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’

“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”

நன்றி:
______________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003

1 comment:

UNMAIKAL said...

பிராமிணர்களின் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிகள். Part 1.

மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்

இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் (பிராமண) பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"

நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்.... அது தவறு!

இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 - 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும்.

17 - 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.

இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்....... அதுவும் தவறானதே.

இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல - இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.

கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன?
தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், (பிராமணர்கள் ) தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

"அவரின் - நம்பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர்.

இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்பவர்கள் – தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்".

"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்".

(சி. அச்சுதமேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. c. achchutha menon - Cochin State Manual - 1910. Page No: 193.)


Continued......

முழுமையாக படிக்க>>>இங்கே <<<சொடுக்கவும்.