அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ.
பொருள்கள் எல்லாம் கட்புலனாகா நுண்மை நிலையில் அருவமாகவும், கட்புலனாய், உறுப்பு விளங்காப் பிழம்புநிலையில் அருவுருவமாகவும், உறுப்பு விளங்குநிலையில் உருவமாகவும் காணப்படும். இறைவன் இம் முத்திற நிலைகளையும் கடந்த முழுமுதல்வன். தானாக நிற்கும் பெரும்பொருள். அது திருவருளால் எளியேமுக்கு வந்து புலப்படுநாள் எந்நாளோ?
636:10
அருவம்: உருவமற்றது, காண முடியாத ஒன்று
அருவுருவம்: வடிவம் உண்டென்றும், வடிவம் இல்லை என்றும் சொல்ல முடியாத நடு நிலைமை
'உலகில் பொருட்கள் எல்லாம் ஆரம்ப நிலையில் கண்ணால் காண முடியாத ஒன்றாக இருந்து அது வடிவமைக்கும் போது உருவத்துக்கும் அருவத்துக்கும் இடைப்பட்ட நிலையான அருவுருவத்துக்கு வரும். அதன் பிறகு அந்த பொருள் முழுமையடைந்தவுடன் முழு உருவத்தையும் நமது கண்ணால் பார்க்க முடிகிறது.
நம்மை படைத்த இறைவனானவன் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய இந்த மூன்று நிலைகளையும் கடந்தவன். தானாக நிற்கும் அந்த பரம் பொருளான இறைவனை அவனது திருவருளால் இந்த எளியோன் காண்பது எந்நாளோ?' என்கிறார் தாயுமாவர்.
என்ன அழகாக இறைவனுக்குரிய இலக்கணத்தை தாயுமானவர் விவரிக்கிறார் என்பதை பாருங்கள். இறைவனின் உருவத்தை என்னால் கற்பனை செய்ய முடியாது என்று இவர் சொல்லும் போது நமது நாட்டில் இறைவனுக்கு எத்தனை உருவத்தை நமது சகோதரர்கள் கற்பித்து விட்டார்கள்?
இந்து மதத்தின் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.
இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'
குர்ஆன் 6 : 103
இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். இறைவனைப் பார்க்கும் சக்தி மனிதர்களாகிய நமது கண்களுக்கு கொடுக்கப்பட வில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.
'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.
குர்ஆன் 4 :153
இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.
ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
குர்ஆன் 2 :174
போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.
No comments:
Post a Comment