'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, October 12, 2013
பி.ஜே தீவிரவாதியா? அவரே பதில் சொல்கின்றார்.
இலங்கை நவமணி வார இதழுக்கு பீஜேயின் பேட்டி இலங்கையில் இருந்து வெளிவரும் நவமணி வார இதழ் தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும் அதன் இலங்கைக் கிளையாக உள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும், முஸ்லிம்களின் நிலை குறித்தும் பீஜே அவர்களை பேட்டி கண்டு விரிவாக வெளியிட்டுள்ளது. அதனை நன்றியுடன் இங்கே அப்படியே வெளியிடுகிறோம்.
பி.ஜே தீவிரவாதியா? அவரே பதில் சொல்கின்றார்.
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பி.ஜே பிரபல தென்னிந்திய மார்க்க அறிஞரும், தமிழுலகறிந்த பேச்சாளரும், எழுத்தாளரும், குர்ஆனை சரளமாக தமிழ் மொழியில் பெயர்த்தவருமாவார். இஸ்லாத்தின் தூய செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் தனது பயணத்தில் ஆயிரக்கணக்கான உரைகளை இவர் ஆற்றியுள்ளார். கிறிஸ்தவர்கள் மற்றும் வேறு பல இயக்கத்தவர்களுடன் குர்ஆனும் நபியவர்களின் வாழ்க்கை வழிகாட்டலும் தான் மறுமை வெற்றிக்கு வழி செய்துதரும் என்பதை பல விவாதங்கள் மூலமாக இவர் நிரூபித்திருக்கின்றார்.
”இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத அன்பர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இவர் நடத்தும் நிகழ்ச்சி தமிழுலகில் பிரபலமானதாகும். இவர் நூற்றுக்கணக்காண நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய உரைகள், விவாதங்கள், கேள்வி-பதில் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைகளை www.onlinepj.com என்ற இவருடைய இணையதளத்தில் பார்க்கலாம்.
கேள்வி - உங்களைப் பற்றியும், உங்களது அமைப்பு பற்றியும் கூறுவீர்களா? உங்களது நோக்கமென்ன? அதன் செயற்பாடுகள் எவ்வாறு இடம் பெறுகின்றன?
பதில் - திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியையும் முஸ்லிம்கள் முறையாகவும், முழுமையாகவும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை ஏற்று பிரச்சாரம் செய்யும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற எங்கள் அமைப்பு நான்கு செயற்திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்தி வரும் இயக்கமாகும்.
01. முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளையும், வணிகம், திருமணம் மற்றும் வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளிலும் திருக்குர்ஆன் காட்டும் வழியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியிலும் நடக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட எல்லா சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரம் செய்வது முதல் திட்டம்.
02. பிற மத மக்களுக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் எழும் சந்தேகங்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி கசப்புணர்வை நீக்குவது இரண்டாவது திட்டம். பிறசமய மக்கள் மத்தியில்
கேள்வி-பதில் நிகழ்ச்சி வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வழியாகவும், துண்டுப் பிரசுரங்கள் வழியாகவும் பிரசாரம் செய்து அனைத்து மதத்தவரும் இணக்கமாக வாழ உழைக்கிறோம்.
அனைத்து மதத்தவருக்கும் பயன்படும் வகையில் இரத்ததானம், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, சுனாமி போன்ற அனர்த்தங்களின் போது சாதி, மத பேதம் பாராமல் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவுவது எல்லாம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
03. கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய முஸ்லிம்களை முன்னேற்றுவதற்காக ஸகாத் நிதியைத் திரட்டி உதவுதல், கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் கல்வி கற்க ஆர்வமூட்டுதல், தொழில் தொடங்குவதற்கு வழிகாட்டுதல், ஆதரவற்ற சிறுவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும், தனித்தனியாக சகல வசதிகளுடன் இலவசமாக ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்துதல்.
04. முஸ்லிம்களுக்கு இந்திய அரசின் மூலமோ அல்லது மற்றவர்கள் மூலமோ பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் வன்முறையில் இறங்காமல் சட்டத்தை மீறாமல் அறவழிப் போராட்டம் மூலமும், நீதிமன்ற நடவடிக்கை மூலமும், பிரசாரம் மூலமும் நியாயம் கிடைக்கப் பாடுபடுதல்.
கேள்வி - இலங்கையில் செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா?
பதில் - இந்தியாவுக்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் எங்கள் அமைப்புக்கு கிளைகளும் வலுவான அடித்தளமும் உள்ளது. அந்த வகையில் இலங்கையிலும் உள்ளது.
மற்ற நாடுகளில் செயல்படும் இயக்கத்தின் கொள்கைகளும், எங்கள் கொள்கையும் ஒன்றுதான்.
நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப செயற்திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை காரணமாக சில செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள சட்டப்படிதான் நடக்க முடியும்.
இது போல் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருக்கலாம்.
கேள்வி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு துணை போகின்றதா?
பதில் - 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏகத்துவக் கொள்கையில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இவ்வளவு நீண்ட காலகட்டத்தில் பல்வேறு ஆட்சிகள் தமிழகத்திலும், இ்ந்தியாவிலும் மாறியுள்ளன. எந்த ஆட்சியிலும் எங்கள் அமைப்பின் மீதோ அதன் தலைவர்கள் மீதோ ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக நாங்கள் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறோம்.
மேலே நான் எடுத்துச் சொன்ன நான்காவது திட்டமே வன்முறை வழியில் மக்கள் செல்லக் கூடாது என்பதற்காகத்தான்.
கேள்வி - இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்குத் துணை போவதாக முத்திரை குத்தப்படுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் - இலங்கையிலுள்ள எங்கள் ஜமாஅத் ஒருகாலத்திலும் தீவிரவாதத்தில் இறங்காது.
அப்படி இறங்கும் அமைப்பு எங்களின் கிளை அமைப்பாக இருக்க முடியாது. இப்படி யாரேனும் குற்றம் சுமத்தினால் எங்கள் இலங்கை நிர்வாகிகளின் பேச்சு அல்லது நடவடிக்கையை ஆதாரமாக் காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இப்படி எங்களுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுடன் அது குறித்து பகிரங்க விவாதம் செய்ய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விட்டது. எங்களை தீவிரவாதிகள் என்று சொன்னவர்கள் இன்றுவரை அந்த அறைகூவலை ஏற்கவில்லை.
இதுவே இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்ற பொய் என்பதை நிரூபித்துக் கொண்டு உள்ளது.
கேள்வி - பொதுபல சேனா, சிங்கல ராகவ போன்ற இனவாத அமைப்புகளின் அண்மைக்கால செயற்பாடுகளால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி உங்களின் கருத்து என்ன?
பதில் - கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற பிரச்சாரம் காரணமாகத்தான் ஈழப் பிரிவினை வாதமும் ஈடுகொடுக்க முடியாத வன்முறைகளும் நடந்தன. இது போல் கடந்த காலங்களில் பேரினவாதிகள் பேசியதை ஆதாரமாகக் காட்டித்தான் விடுதலைப் புலிகள் தமிழர்களை வென்றெடுக்க முடிந்தது. இந்த வரலாற்றில் இருந்து இவர்கள் பாடம் படிக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.
விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பை இலங்கை அரசு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்ததற்கும் முஸ்லிம்கள் அரசின் நிலைபாட்டை ஆதரித்தது முக்கியக் காரணம்.
முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டு இருந்தால் இன்றும் கூட புலிகளைத் தோற்கடிக்க முடியாது. இதற்கு இப்படி நன்றி செலுத்துவது போல் தெரிகிறது. மேலும் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்வதற்கும் முஸ்லிம்கள் தான் பயன்பட்டனர்.
முஸ்லிம்கள் இலங்கையில் நல்ல நிலையில் உள்ளனர் என்று பிரச்சாரம் செய்துதான் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை அரசால் பெற முடிந்தது. சக முஸ்லிம் நாடுகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அது இலங்கைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மேற்கண்ட அமைப்பினர் உணர வேண்டும். இலங்கை அரசு இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
கேள்வி - எல்.டி.டி.ஈ அமைப்பிற்கு எதிராக அதன் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் விமர்சித்திருந்தீர்கள். இதற்கான காரணங்கள் ஏதுமுண்டா?
பதில் - சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்கக் கூடாது என்பது எங்களின் அடிப்படைக் கொள்கையாக உள்ளதாலும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழைந்து பலநூறு முஸ்லிம்களை, புலிகள் சுட்டுக் கொன்றதாலும் இன்னும் பல நியாயமற்ற நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இறங்கியதாலும் நாங்கள் விடுதலைப் புலிககைளை ஆரம்பம் முதல் எதிர்த்தோம்.
எங்கள் ஆதரவைக்கோரி விடுதலைப் புலிகளின் சார்பில் சிவாஜிலிங்கம் என்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரைப்பட இயக்குனர் அமீர் என்பவருடன் வந்து எம்மைச் சந்தித்தார். அவரிடமே அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து புலிகளை, கடுகளவும் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கூட ஆதரிக்க மாட்டான் என்று சொல்லி அனுப்பினோம்.
ஒஸ்லோ மாநாட்டில் முஸ்லிம்களை ஒரு தரப்பாக சேர்க்கக் கூட ஒப்புக்கொள்ளாமல் கிழக்கு மகாணத்தையும் தங்கள் கைவசத்தில் வைத்து கொள்ள நினைத்த புலிகளின் முஸ்லிம் விரோதப் போக்கையும் நாம் அவரிடம் தெளிவாக விளக்கினோம்.
கேள்வி - எல்.டி.டி.இ ன் மோசமான யுகத்திற்கு முடிவுகட்டப்பட்டவை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
பதில் - இப்போது நாடு அமைதியாக உள்ளது. புலிகளின் ஆதிக்கமிருந்த கால கட்டத்தில் நான் இலங்கைக்கு பல தடவை வந்துள்ளேன். கொழும்பிலிருந்து கல்முனைக்குப் போய்ச் சேர்வதற்குள் பத்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் பயணிகளை இறக்கிவிட்டு சோதிப்பார்கள். காலையில் புறப்பட்டால் இறவில்தான் போய்ச்சேர முடியும். அந்த நிலை இப்போது இல்லை. நாங்கள் கொலன்னாவ என்ற இடத்தில் தங்கியிருந்து காலையில் விமானத்தில் சென்னை செல்லக் காத்திருந்தோம்.
எங்கள் பயணத்துக்கு சிலமணி நேரங்களுக்கு முன்னால் கொழும்பு விமான நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். நாங்கள் ஒரு மணிநேரம் முன்னதாகப் புறப்பட்டிருந்தால் கொல்லப்பட்டவர்களில் எங்கள் பெயரும் இடம் பெற்று இருக்கக்கூடும். இது போன்ற நிலை இப்போது இல்லை.
ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டிய சிங்கள இயக்கங்கள் இந்த அமைதியை நீடிக்க விடமாட்டார்களோ
என்று அச்சமாக உள்ளது.
கேள்வி - நீங்கள் தீவிரவாதியா?
பதில் - நான் மேலே கூறியவற்றில் இதற்குப் பதில் உண்டு.
கேள்வி - தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே ஆட்சி தொடர்பாக ஏதாவது கூறுவீர்களா?
பதில் - இலங்கையிலுள்ள அரசியல் நிலவரங்கள் எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு வெளியே வாழும் எல்லா முஸ்லிம்களும் பேரினவாத வெறியர்கள் விஷயத்தில் மென்மையாக அல்லது மறைமுக ஆதரவாக ராஜபக்ஷே இருக்கிறார் என்ற எண்ணம் பதிந்து வருகிறது. இதை அவர்தான் தனது நடவடிக்கை மூலம் மாற்ற வேண்டும்.
கேள்வி - ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழுந்தபோது இலங்கைக்கு ஆதரவாக உங்கள் குரல் வந்தது ஏன்?
பதில் - புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதால் அதைச்செய்த இலங்கை அரசைக் கண்டிக்கக் கூடாது என்பதால் ஆதரவாக் குரல்கொடுத்தோம். ஆனால், பள்ளிவாசல்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் அதிகரித்தால் இந்த நிலை நிச்சயமாக மாறிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
கேள்வி - பௌத்த இனவாதிகளுக்கு ஏதாவது கூற விரும்புகிரீர்களா?
பதில் - பெரும்பான்மை மக்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டி அதிகாரம் செலுத்தவும், சொகுசாக வாழவும் இதேபோல் பேரிணவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் போது நம்மில் ஒருவன் செத்தாலும் எதிரிகளில் ஆயிரம் பேரை அழிக்கவேண்டும் என்ற மனநிலைக்கு உள்ளாகிறான். இதே போல் உருவாகாத வரை தான் பெரும்பான்மை வாதத்தால் பயன் அடைய முடியும்.
கொடுமை எல்லை மீறிப் போனால் சாகத் துணிந்தவர்களை அது மீண்டும் உருவாக்கிவிடும்.
இதனால் பெரும்பான்மை சமுதாயம் பயந்து வாழும் நிலை ஏற்பட்டுவிடும். இதற்கு வரலாற்றில் அநேக ஆதாரங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளை விட வேறு என்ன ஆதாரம் தேவை?
அனைத்து மக்களும் சகோதரர்களாக சம உரிமை பெற்றவர்களாக வாழ்வதற்கு பாடுபடுங்கள் என்பதுதான் இவர்களுக்குச் சொல்லும் செய்தி.
கேள்வி - இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு கூறுகளாக பிரிந்திருக்கின்றார்களே. இது பற்றி...?
பதில் - இலங்கை மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. மார்க்கம் அடிப்படையிலான பிளவுகளும் உள்ளன. அரசியல் ரீதியான பிளவுகளும் உள்ளன. மார்க்க அடிப்படையிலான பிளவுகள் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்பட வேண்டும். மனது வைத்தால் இதில் அதிகமான பிளவுகளைக் குறைத்துவிட முடியும். அனைத்து பிரிவினரும் திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நபிகள் நாயகத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவோம் என்ற மனநிலைக்கு முஸ்லிம்கள் வந்துவிட்டால் இரண்டு மூன்று பேச்சுவார்த்தைகளில் ஏராளமான வேறுபாடுகளைக் குறைத்து விடலாம்.
புரிந்து கொள்வதில் ஏற்பட்ட மிகச் சில வேறுபாடுகள் மட்டுமே மிஞ்சும். யார் பதவியைப் பிடிப்பது என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவுகளையும் கூட நாம் மனது வைத்தால் குறைத்துவிடலாம். இயக்கங்களை நடத்தும் தலைவர்கள் தங்களின் ஆதாயத்திற்காகவே இயக்கம் நடத்துவதால் தங்கள் இயக்கத்தைக் கலைக்க மாட்டார்கள்.
ஆனால் மக்களுக்கு இவர்களைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மக்கள் நினைத்தால் அதிகமான இயக்கங்களை ஒழித்துவிடலாம். எல்லா இயக்கங்களிலும் கேடுகளும் நல்லவைகளும் இருக்கும். முற்றுமுழுதான நல்ல இயக்கம் எதுவும் கிடையாது. முழுமையான கெட்ட இயக்கமும் கிடையாது. எனவே இருக்கும் இயக்கங்களில் குறைவாக தவறு செய்யும் இயக்கம் எது என்றும், அதிகமான நன்மை செய்யும் இயக்கம் எது என்றும் திறந்த மனதுடன் ஆய்வு செய்து உள்ளதில் நல்லதை மட்டும் ஆதரித்து மற்றவைகளை அறவே ஒதுக்கினால் பெரியளவில் இயக்கங்களின் எண்ணிக்கை இருக்காது.
இருக்கும் இயக்கங்களில் ஓரளவு நல்ல இயக்கம் தவிர, வேறு இயக்கங்களை ஆதரிப்பதில்லை.
நிதி அளிப்பதில்லை. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. என்று முடிவு செய்தால் லெட்டர் இயக்கங்கள் காணாமல் போய்விடும். எவன் எதை ஆரம்பித்தாலும் அதை ஆதரிக்கவும், உதவவும் நாலு பேர் இருப்பதால்தான் இயக்கங்கள் பெருகுகின்றன.
கேள்வி - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய அமைப்புகளுடன் முரண்படுகின்றதாம். இக்குற்றச்சாட்டு நியாயமானதா?
பதில் - ஒவ்வொரு அமைப்பும் மற்ற அமைப்போடு பல விடயங்களில் முரண்பட்டுத்தான் இருக்கின்றன. முரண்பட்டாலும் எங்கள் நிலை சரி உங்கள் நிலை தவறு என்று சொல்ல மாட்டார்கள்.
எங்கள் இயக்கத்தின் தவறுகளை நீங்கள் பேசாதீர்கள். உங்கள் இயக்கத்தின் தவறுகளை நாங்கள் பேசமாட்டோம் என்று எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது ஆனால், குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம். வேறு எதுவும் மார்க்கம் இல்லை என்பது எங்கள் கொள்கை. இந்தக் கொள்கையில் நாங்கள் இருப்பதால் மற்றவை தவறு என்று நாம் பிரசாரம் செய்யும் அவசியம் ஏற்படுகிறது.
இதனால் இக்கொள்கையை ஏற்காதவர்கள் எங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். நாங்களும் அவர்களுடன் ஒத்துப்போக மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் இதுதான் நடந்தது. யூதர்களும், நசாராக்களும் கொள்கை அடிப்படையில் அதிக வேறுபாடு உள்ள மக்கத்துக் காஃபிர்களுடன் இணக்கமாக இருக்க முடியாது.
கொள்கையில் நெருக்கமாக உள்ள முஸ்லிம்களுடன் தான் இணக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கத்துக் காஃபிகளுடன் அவர்கள் இணைந்து கொண்டனர்.
நபியவர்கள் அனைவருடைய தவறுகளையும் தாட்சண்யமில்லாமல் போட்டு உடைக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணமாக இருந்தது. இதன் காரணமாகத்தான் எல்லா இயக்கங்களும் மற்ற இயக்கங்களில் இருந்து வேறுபட்டாலும், எழுதப்படாத இந்த ஒப்பந்தம் காரணமாக சேர்கிறார்கள். குறிப்பாக எங்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு விடுகிறார்கள்.
கேள்வி - இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற மகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் உறுப்புரிமை குறைந்துள்ளதை பற்றி?
பதில் - இதுபற்றி முழுமையாக விபரம் என்னிடம் இல்லை. ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டன என்பது மட்டுமே தெரிகிறது. அவர்கள்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கேள்வி - இலங்கையில் தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு உரிமைகளுக்குப் போராடும் போது முஸ்லிம் தலைவர்கள் பிரிந்திரக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் - முஸ்லிமல்லாத தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சினை என்பதால் அந்த நெருக்கடி அவர்களை ஒன்று சேர்த்து விட்டது. சாதாரண நிலை வந்ததும் ஒற்றுமை சிதறிவிடும்.
ஒரு ஊரில் கலவரம் நடந்தால் அந்த நேரத்தில் மட்டும் எல்லோரும் கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை. முஸ்லிம்களுக்கும் வாழ்வா, சாவா என்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்டால் அந்த நெருக்கடியே அவர்களை ஒன்றுபடுத்திவிடும்.
சாதாரண நேரங்களில் ஒரு பார்வையும், நெருக்கடியான நேரத்தில் வேறுபார்வையும் இருப்பது மனிதர்களின் இயல்புதான். எனவே முஸ்லிமல்லாத தமிழர்கள் ஒன்றுபட்டதை முஸ்லிம்களுடன் ஒப்பிட முடியாது.
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/navamani/
Copyright © www.onlinepj.com
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அண்ணாச்சி இந்த பீஜே என்பது யாரு? பீஜேபீ ஆளா?
Post a Comment