Followers

Tuesday, June 13, 2017

உபியில் இறந்த உடலை சைக்கிளில் சுமந்த சோகம்!

உபியில் இறந்த உடலை சைக்கிளில் சுமந்த சோகம்!

உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இளைஞர் ஒருவர் தனது சகோதரி மகளின் உடலை தோளில் சுமந்தவண்ணம் சைக்கிளில் செல்ல நேரிட்டது.
உத்தரபிரதேச மாநிலம், கவுஷாம்பி மாவட்ட அரசு மருத்துவமனையில் பூனம் என்ற சிறுமி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இச்சிறுமி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.

இச்சிறுமியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவரது மாமா பிரிஜ் மோகன், மருத்துவமனை யில் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் டீசலுக்கான தொகையை முதலில் செலுத்துமாறு கேட்டதால், அதைக் கொடுக்க வசதியின்றி, பூனத்தின் உடலை மோகன் தனது தோளில் சுமந்தபடி சுமார் 10 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

கவுஷாம்பி மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை செலவைக் கூட சமாளிக்க முடியாமல் பூனம் குடும்பத்தினர் சிரமப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளியான பூனத்தின் தந்தை, தனது மகளை மைத்துனர் பிரிஜ் மோகன் பொறுப்பில் விட்டுவிட்டு பணத் தேவைக்காக அலகாபாத் நகருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

எங்களிடமிருந்த சிறிது பணமும் கிசிச்சைக்கு செலவாகிவிட்டது. பிறகு ஆம்புலன்ஸ் டீசலுக்கான பணத்துக்கு நாங்கள் எங்கே செல்வது?” என்கிறார் பிரிஜ் மோகன்.

இதனிடையே இந்த அதிர்ச்சிகர சம்பவம் மாவட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றதால், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பணியிலிருந்த டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி எஸ்.கே.உபாத்யாய கூறியுள்ளார்.

ஆனால் இந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் கூறும்போது, “அன்றாட டீசல் செலவுக்கு அரசு பணம் தருவதில்லை. மருத்துவமனை ஊழியர்களின் நன்கொடை மூலமே இந்த செலவு சமாளிக்கப்படுகிறதுஎன்றார்.

உ.பி.யில் இதற்கு முன் கடந்த மே 20-ம் தேதி அரசு மருத்துவமனையில் இறந்த பெண் ஒருவரின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டது. இதையடுத்து அப் பெண்ணின் கணவர் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்றார். இதனால் நிலைமை விபரீதமாகும் என்பதை உணர்ந்த டாக்டர்கள், பின்னர் ஆம்புலன்ஸ் கொடுத்து உதவினர்.

உ.பி.யில் இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் சில மாதங்களுக்கு முன் தனது 15 வயது மகனின் உடலை தோளில் சுமந்து சென்றார்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

14-06-2017


No comments: