Followers

Thursday, June 08, 2017

முரளி முனுசாமிக்கு டிஎன்டிஜே பற்றி சில விளக்கங்கள்!

//தெரியாம தான் கேக்குறேன் பிஜே என்ன ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தலைவரா?? அவரை விமர்சனம் பண்ணா போலிஸ் பிடிக்குமா??//

//வருசம் முழுவதும் பாஜகவை விமர்சனம் செய்கிறேன். அப்போதெல்லாம் என்னை காவி என சொல்லாதவர்கள்
ததஜவ விமர்சனம் செய்தால் மட்டும் காவி என குறிப்பிடுவது ஏன்??
நண்பர்கள் இதற்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும்.//கடந்த 30 ஆண்டுகள் முன்பாக தமிழகத்தில் முஸ்லிம்கள் கல்வி, இஸ்லாமிய சிந்தனை போன்றவற்றில் மிகவும் பின்தங்கியிருந்தனர்.  பில்லி சூன்யம், தர்ஹா வணக்கம், தட்டு தாயத்து என்று மதியிழந்து இதுதான் இஸ்லாம் என்று விளங்கியிருந்தார்கள். நான் கூட சிறிது சிறிதாக நாத்திகத்தின் பக்கம் சென்றேன். அந்த கால கட்டத்தில்தான் பிஜேயின் பிரசாரம் ஆரமபமானது. உண்மையான இஸ்லாம் என்ன என்பதை கிராமங்கள் தோறும் சொல்ல ஆரம்பித்தார். இதனால் அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஊர் முழுக்க அடி உதை விழுந்தது. லெப்பை குடி காட்டில் பள்ளி வாசலில் விவாதத்துக்கு கூப்பிட்டு 500 பேர் சேர்ந்து பிஜேயை அடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு இளைஞன் பிஜே யின் மேல் படுத்துக் கொண்டு அவருக்கு விழுந்த அடியை தன் மீது வாங்கிக் கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு அந்த இளைஞன் இறந்தே போனான். என்னையும் எங்கள் கிராமத்து பள்ளிக்கு தொழ வர வேண்டாம் என்று தடுத்தனர். எனது உறவினர்களும் எனது நண்பர்களும் என்னை விட்டு விலக ஆரம்பித்தனர். பத்து ஆண்டுகள் இப்படியே சென்றது.

இதனிடையில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை பிஜே பல நகரங்களில் நடத்த ஆரம்பித்தார். கோவை கலவரத்தால் அந்நியப்பட்டிருந்த இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியால் இந்துக்களின் வெறுப்பிலிருந்து மீண்டார்கள். உண்மையான இஸ்லாத்தை அறிந்து கொண்ட பல இந்துக்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்றனர். அது இன்று வரை தொடர்கிறது.

முல்லாக்களின் பிடியில் சிக்கியிருந்த இஸ்லாமியர்களை அந்த முல்லாக்களோடு பல விவாதங்கள் நடத்தி முஸ்லிம்களை மீட்டெடுத்தது டிஎன்டிஜே. இன்று தமிழகத்தில் ரத்த தானத்தில் பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்து பலமுறை தமிழக அரசின் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது சவுதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளிலும் பல விருதுகளை பெற்றுள்ளது. உலகம் முழுக்க பல கிளைகளோடு சமூக பணிகளை செய்து வருகிறது. வளைகுடா நாடுகளில் இறந்து போன இந்து நண்பர்களின் உடல்களை அவர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று சேர்க்கும் பணியையும் செய்து வருகிறது. தீயினால் குடிசைகள் எரிந்து அனாதரவாக நின்ற பல இந்து குடும்பங்களை தேடிச் சென்று அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை இன்று வரை செய்து வருகிறது. தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி மாற்று மத மக்களும் பலன் பெற தன்னலம் மறந்து சேவையாற்றி வருகிறது.

கல்வி உதவி தேவைப்படும் குடும்பங்கள் அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்களை தேடிச் சென்று கல்வி உதவிகளை அளித்து வருகிறது. எங்கள் கிராமத்தில் ஒரு இந்து குடும்பத்துக்கு டிஎன்டிஜே சார்பாக கல்வி உதவி கொடுத்து இன்று அந்த குடும்பம் சிறந்த நிலையில் உள்ளது.

கோவை கலவரத்தால் வெறுப்புற்று தீவிரவாதத்தை நோக்கி சென்ற பல இஸ்லாமிய இளைஞர்களை அழைத்து இஸ்லாம் போதிக்கும் கட்டளைகளை அவர்களுக்கு விளக்கி அவர்களை நேர்வழிப்படுத்தியுள்ளது டிஎன்டிஜே. அதன் நீட்சியாகத்தான் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் முதல் ஆட்களாக டிஎன்டிஜே யின் இளைஞர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

சென்னையில் விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் வெள்ளக் காடானபோது தங்கள் உயிரை பணயம் வைத்து இந்து மக்களை காப்பாற்றி கரை சேர்த்தது டிஎன்டிஜே. மழை நீர் வற்றிய பிறகு  சென்னையே துர் நாற்றத்தால் நாறிக் கிடந்தது. அரசும் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நின்றது. அந்த இடத்திலும் கைகளிலும் கால்களிலும் உறைகளை மாட்டிக் கொண்டு டிஎன்டிஜே இளைஞரணி தொண்டர்கள் களமிறங்கி சென்னையை சுத்தப்படுத்தினர். அவ்வாறு சுத்தப்படுத்தும் போது அவர்களுக்கு கிடைத்த நகைகளையும், பணத்தையும் உரியவர்களிடம் சேர்ப்பித்தது டிஎன்டிஜே. மலத்தையும் குப்பை கூளங்களையும் அள்ளிய அந்த இளைஞர்கள் கோடீஸ்வர வீட்டு பிள்ளைகள். கல்லூரியில் படித்துக் கொண்டுள்ள இளைஞர்கள். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் குர்ஆனின் கட்டளையை செயல்படுத்தினர்.

முன்பெல்லாம் இஸ்லாமிய இளைஞர்கள் கல்லூரியை தொடுவது அரிது. கடந்த 30 ஆண்டுகளாக படிப்பின் அவசியத்தையும் அரசு வேலைகளை பெற வேண்டியதன் அவசியத்தையும் கிராமம் கிராமமாக கொண்டு சென்றது டிஎன்டிஜே. கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் மாறி மாறி  பேச்சு வார்த்தை நடத்தி 3.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது. இதனால் இன்று முஸ்லிம்கள் பல அரசு வேலைகளை சிரமமின்றி பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதனால் பலன் பெறுகின்றனர்.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை தனி ஒரு அமைப்பாக நின்று தன்னலமற்று செயல்பட்டு வரும் ஒரு அமைப்பை எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் கூறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோபம் வராதா? என்னைப் போன்றவர்கள் இது வழக்கமான ஒன்று என்று கடந்து சென்று விடுவோம். ஒரு சில இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். அது போன்றவர்களை இனம் கண்டு தலைமை கண்டிக்கிறது. இவ்வாறு ஆபாச அர்ச்சனைகள் பண்ணுபவர்களை அடையாளப்படுத்தி தலைமைக்கு தெரிவியுங்கள். அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக டிஎன்டிஜேயையும் அதன் தலைமையையும் அதன் செயல்பாடுகளையும் ஆதாரமின்றி விமரிசிப்பது நல்லதல்ல. பல முறை அவசரப்பட்டு டிஎன்டிஜே யை குறை கூறி பதிவிட்டு நாங்கள் ஆதாரங்களை தந்தவுடன் அந்த பதிவுகளை நீக்கியிருக்கிறீர்கள், மன்னிப்பும் கேட்டுள்ளீர்கள். எனவே எது ஒன்றையும் பதியும் முன் யோசித்து பதிவது உங்களைப் போன்றவர்களுக்கு நல்லது என்பதை உங்களின் நெடுநாளைய முகநூல் நண்பன் என்ற உரிமையில் சொல்லிக் கொள்கிறேன்.

https://www.youtube.com/watch?v=GE3tIuTOHy0

https://www.youtube.com/watch?v=p4Br3GSXPTU

https://www.youtube.com/watch?v=yq0XS3sqZVc

https://www.youtube.com/watch?v=XCctTkiXJxU

https://www.youtube.com/watch?v=BQoseJGq_tY
No comments: