அமெரிக்க நகரம் ஒகலஹாமாவில் ரிச்சர்டு, மேரி தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தாமஸ் என்றும் ரீட்டா என்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. மகன் நியூயார்க்கிலும், மகள் ஹாங்காங்கிலும் வேலை செய்து வருகின்றனர்.
ரிச்சர்டு சற்று கோபமாக நியுயார்க்கில் உள்ள தனது மகனிடம் அலை பேசியில் பேச ஆரம்பித்தார்.
'ஒரு வருத்தமான செய்தி மகனே! நானும் உனது தாயாரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். 30 வருட திருமண பந்தம் எங்களுக்கு சலிப்பை தந்து விட்டது. எனவே இந்த வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்'
'அப்பா! என்ன சொல்றீங்க!'
'உண்மைதான் மகனே! இனியும் எங்களால் சேர்ந்து வாழ முடியாது'
'உங்கள் குழந்தைகளான எங்கள் இருவரையும் நினைத்துப் பார்த்தீர்களா? உங்கள் இருவரையும் பிரிந்து எங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது தந்தையே! அதிலும் எனது தங்கை இந்த செய்தியை கேட்டால் துடித்து விடுவாள்! உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்'
'எங்கள் இருவரின் முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை மகனே! உன் தங்கையிடம் இந்த விபரத்தை சொல்லி விடு'
தாமஸ் தனது பெற்றோரை நினைத்து மிகவும் கவலை கொண்டான். எவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர். அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்னை என்ற சிந்தனையோடு ஹாங்காங்கில் உள்ள தனது தங்கையை தொடர்பு கொண்டான்.
'ரீட்டா! உனக்கு விபரம் புரியுமா? நமது பெற்றோர் இருவருக்கும் திருமண வாழ்வு கசந்து விட்டதாம். எனவே விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்களாம். அப்பா இப்பொழுதுதான் விபரங்களைச் சொன்னார்.'
'என்ன சொலறே நீ! அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? நான் அப்பாவிடம் பேசுகிறேன்' என்று கோபத்தோடு போனை வைத்தாள் ரீட்டா.
போனை வைத்த அதே வேகத்தோடு ஒகலஹாமாவில் உள்ள தனது தந்தையை தொடர்பு கொண்டாள் ரீட்டா.
'அப்பா! என்ன இது பைத்தியக்காரத்தனம். விவாகரத்து பண்ணப் போறீங்களாமே! திருமணம் முடிக்கும் வயதில் உள்ள உங்கள் இரு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமாவது யோசித்தீர்களா?'
'உன் கோபம் புரிகிறது. என்னால் இதைத் தவிர வேறு முடிவு எடுக்கத் தெரியவில்லை. என்னை மன்னித்து விடு ரீட்டா'
'அப்பா! அவசரப்படாதீங்க! நானும் அண்ணனும் இன்னும் இரண்டு நாட்களில் ஒகலஹாமா வருகிறோம். 15 நாள் விடுப்பில் வருகிறேன். அது வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது. சரியா!'
'நீ வந்து ஏதும் நல்லது நடந்தால் சரி. அது வரை விவாகரத்தை தள்ளி வைக்கிறேன்.'
போனை வைத்த ரிச்சர்ட் தனது மனைவியை நோக்கி 'கவலைப்படாதே! இரண்டு பிள்ளைகளும் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை நம்மோடு கொண்டாடுவர். உனக்கு சந்தோஷம் தானே' என்று தனது மனைவியின் கன்னத்தை கிள்ளினார்.
'அதற்காக விவாகரத்து என்று பொய் சொல்ல வேண்டுமா?' சிணுங்கினாள் மேரி.
'வேறு வழி. போன வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் இருவரும் வரவில்லை. இந்த வருடமும் ஏதாவது காரணம் சொல்லி வராமல் இருந்து விட்டால்! எனவே தான் ஒரு பொய்யை சொன்னேன்' என்றார் ரிச்சர்டு குறும்பாக!
-இணையத்தில் ஆங்கிலத்தில் வந்த சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது
No comments:
Post a Comment