Followers

Monday, December 16, 2013

ஆராய்ச்சி படிப்பிலும் அசத்தும் சவுதி மாணவர்கள்!



கடந்த சனிக்கிழமையன்று ஜெத்தா துவால் நகரில் இயங்கும் மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் 18 மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டது. முதுகலை பட்டப்படிப்பிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவ மாணவிகள் தங்களின் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். பரிசு பெற்றவர்கள் 13 நாடுகளிலிருந்து இங்கு கல்வி பயில வந்தவர்கள். பரிசு பெற்றவர்களில் 43 சதமான மாணவ மாணவிகள் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். பிஎச்டி பட்டம் வாங்கியவர்களில் மாஜித் குரைஷி என்ற சவுதி நாட்டு மாணவரும் அடங்குவார். தற்போது சவுதிகள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அரசும் பலவித ஊக்கத் தொகைகளை அள்ளிக் கொடுத்து தனது மக்களை படித்தவர்களாக ஆக்க மிகுந்த முயற்சி எடுக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

-----------------------------------------------------

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (58 : 11)


மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

"மூன்று மனிதர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இரண்டு விதக் கூலிகள் உண்டு.

ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது சமூகத்திற்கு அனுப்பப்பட்ட தூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.

மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து கொண்டவர்.

இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ (97)

கல்வி கற்பது என்பது ஒவ்வொரு ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வியானது ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது. இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள், இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.

இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது

ஒருமுறை ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்று வரலாறுகளில் பார்க்கிறோம்.

ஜனாதிபதி அலீ அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.

பாக்தாத்தில் வாழ்ந்த ஷெய்கா சுஹதா அவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா என்ற முஸ்லிமும் ஒரு பெண்மணிதான்.

இவை எல்லாம் சிறந்த உதாரணங்களாக நாம் சொல்ல முடியும்.

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.

எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.

ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் சில ஊர்களில் ஊர்க் கட்டுப்பாடு என்று வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பினால் அபராதம் விதிக்கிறார்களாம். அவர்களின் நோக்கம் பெண் குழந்தைகள் கெட்டு விடக் கூடாது என்று இருந்தாலும் அதற்கு இது தீர்வு அல்ல. ஆணும் பெண்ணும் தனித்தனியே பயிலும் எத்தனையோ கல்விக் கூடங்கள் உள்ளது. அருகில் அவ்வாறு இல்லா விட்டால் செல்வந்தர்கள் சேர்ந்து ஒரு கல்லூரியை ஆரம்பிக்க வேண்டியதுதானே. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கிறார்களே! அரசும் உதவி செய்ய தயாராக இருக்கும் போது என்ன சிக்கல் உங்களுக்கு? ஆர்வத்தில் படிக்கச் செல்லும் பெண்ணை தடுத்து அவருக்கு அபராதமும் விதிப்பது இஸ்லாமிய நடைமுறை அல்ல. டிஎன்டிஜே, தமுமுக போன்ற அமைப்புகள் இது போன்ற கிராமங்களுக்குச் சென்று அந்த பெண்களின் படிப்பு இஸ்லாமிய அடிப்படையில் தொடர ஆவண செய்ய வேண்டும்.

7 comments:

suvanappiriyan said...

மிகச் சிறந்த ஆக்கம். பாகிஸ்தான் பிரிவினையை கான் அப்துல் கபார் கானைப் போலவே மௌலானா அபுல் கலாம் ஆசாத்தும் கடுமையாக எதிர்த்தார். இவர்கள் இருவரும் இஸ்லாமிய சட்டங்களை முழவதுமாக தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள்.

ஆனால் இஸ்லாமிய சட்டங்களை சிறிதும் மதிக்காத மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் ஜின்னா தனக்கு காங்கிரஸில் சரியான மரியாதை இல்லை என்ற காரணத்தைக் கொண்டு பாகிஸ்தான் பிரிவினையை கையிலெடுத்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராஜாஜி, பட்டேல், நேரு போன்றவர்களும் உறுதுணையாய் நின்றனர். முஸ்லிம்கள் தனி நாடு கேட்டு பிரிந்து சென்றால்தான் இவர்களின் அரசியல் வாழ்வு பிரகாசிக்கும் என்று நினைத்திருக்கலாம். இந்திய முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டு விட்டு பாகிஸ்தானை எடுத்துக் கொண்ட ஜின்னா ஒரு சுயநலப் பேர்வழி என்றால் மிகையாகாது.

மற்றபடி ஹூசைன் தனது ஓவியத் திறமையை வேறு வடிவங்களில் காண்பித்திருக்கலாம். இந்துக்கள் புனிதமாக வணங்கும் உருவங்களை ஆபாசமாக வரைவது கண்டிக்கத்தக்கது. இஸ்லாமும் இதனை அனுமதிக்கவில்லை. ஜின்னாவும், ஹூசைனும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும.

அடுத்து தஸ்லிமா கர்ப்பப்பை சுதந்திரம் அதாவது திருமணம் ஆகாமலேயே குழந்தை பெறலாம், சேர்ந்து வாழலாம் என்ற கொள்கை கொண்டவர். இதனை இந்துக்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே தஸ்லிமாவும், ஹூசைனும் இஸ்லாத்தை விட்டு வெளியில் சென்று தங்கள் கருத்துக்களை பரப்பினால் எவருக்கும் ஆட்சேபணை இல்லை என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு.

Anonymous said...

இந்த உலகில் மொத்தம் உள்ள யூதர்களின் எண்ணிக்கை 1.41 கோடி ஆகும்.70 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். 50 இலட்சம் பேர் ஆசியாவிலும், 20 இலட்சம் பேர் ஐரோப்பாவிலும், ஒரு இலட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் வாழ்கின்றனர். இவ்வுலகில் உள்ள யூதருக்கு 100 முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் யூதர்கள் முஸ்லிம்களின் வலிமையை விட நூறு மடங்கு அதிகம் வலிமையுடன் காணப்படுகிறார்களே! இது ஆச்சர்யமாக உள்ளது.

நாசரேத்தில் இயேசு யூதராக இருந்தார். உலகில் எல்லாக் காலங்களிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய, நூற்றாண்டின் சிறந்த மனிதர் என டைம் இதழ் புகழ்கின்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யூதராக இருந்தார். உளவியலின் தந்தை, சிக்மன் ஃபராய்டு ஒரு யூதர். கார்ல் மார்க்ஸ், பால் சாமுவேல்சன், மில்டன் ஃப்ரீட்மேன் ஆகியோர் யூதர்களாக இருந்தனர்.

பெஞ்சமின் ரூபின் மனித குலத்திற்கு மருந்தை உடலுக்குள் செலுத்தும் ஊசியை வழங்கினார் ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பு மருந்தை முதலில் உருவாக்கினார். அலர்ட் ஸாபின் தற்போதுள்ள போலியோ சொட்டு மருந்தை உருவாக்கினார். கொர்ட்ருட் எலியன் லீகேமியா என்ற நோயைப் போக்கும் மருந்தை கண்டுபிடித்தார். பாருச் பிளம்பர்க் ஹெபாடிடிஸ் B தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பால் எர்லிக் சிஃபிலிஸ் என்ற பாலியல் நோய்க்கு சிகிச்சை அளித்தார். எலீ மெட்ச்நிகாஃப் தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.

பெர்னார்டு கட்ஸ் நரம்புத் திசு மாற்ற ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார். ஆண்ட்ரூ ஸ்கேலி ‘ என் டோக்ரினாலஜி’ ஆய்வில் நோபல் பரிசைப் பெற்றார். ஆரோன் பெக் உளவியல் சிகிச்சையை கண்டு பிடித்தவர். கிரிகரி பின்கஸ் மாத்திரையை முதலில் உருவாக்கியவர். வால்ட் என்பவர் கண் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர். ஸ்டேலி கோஹன் கருவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசைப் பெற்றார். வில்லம் கோஃப் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் யூதர்கள் ஆவர்.

கடந்த 105 வருடங்களில் 1.41 கோடி உள்ள யூதர்கள் 180 நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். 140 கோடி உள்ள முஸ்லிம்கள் மூன்று நோபல் பரிசுகளை மட்டுமே வென்றுள்ளனர். (அமைதிக்காகத் தரப்படும் விருதுகள் நீங்கலாக.)

யூதர்கள் ஏன் வலிமையுடன் திகழ்கின்றனர்? ஸ்டேன்ஸி மெஸார் முதல் மைக்ரோ சிப்பைக் கண்டு பிடித்தவர். லியோ ஸலார்ட் முதன் முறையாக நியூக்ளியர் சங்கிலித் தொடர்பைக் கண்டுபிடித்தார். பீட்டர் ஸ்கல்ட்ஸ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்; சார்லஸ் அட்லர் - போக்குவரத்து சிக்னல் விளக்கு; பென்னோ ஸ்ட்ராஸ் - ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்; ஐசடோர் கிஸி - ஒலித் திரைப்படங்கள்; எமைல் பெர்லினர் - தொலைபேசி மைக்ரோ ஃபோன்; சார்ல்ஸ் கின்ஸ்பர்க் - வீடியோ ஒளிப்பதிவுக் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தனர்.

Anonymous said...

ரால்ஃப் லாரன் (போலோ), லீவிஸ் ஸ்ட்ராஸ் (லீவிஸ் ஜீன்ஸ்), ஹோவர்டு ஸ்கல்ஸ் (ஸ்டார்பக்ஸ்), செர்ஜிபிரின் (கூக்ளி), மைக்கேல் டெல் (டெல் கம்யூட்டர்), லேரி எல்லிசன் (ஓராகள்), டொன்னா கரண் (DKHY),இர்வ் ராப்பின்ஸ் (பாஸ்கின்ஸ் & ராபின்ஸ்), பில்ரோசன்பர்க் (டன்கின் டொனட்ஸ்) ஆகியோர் தொழில் உலகில் முன்னணி முதலீட்டாளர்கள் ஆவர்.

(2006 ல் அதிகாரத்தில் இருந்த யூதர்கள் மட்டும் )ரிச்சர்டு லெவின்,யேல் பல்கலைக்கழகத் தலைவர் ஒரு யூதர். அவரைப் போன்றே ஹென்ரி கிஸ்ஸிங்கர் (அமெரிக்கா உள்துறைச் செயலாளர்). ஆலன் கிரீன்ஸ் பான், ஜோசப் லிபர்மேன், மெடலின் ஆல்பிரைட் காஸ்பர் வீன்பர்கள், மேக்ஸிம் லிட்வினோவ். டேவிட் மார்ஷல் (சிங்கப்பூரின் முதல் முதலைமைச்சர்), ஐசக் இஸாக்ஸ் (ஆஸ்திரேலிய காவ்ர்னர் ஜெனரல்), பெஞ்சமின் டிஸ்ரேலி, யெவ்ஜனி பிரிமா கோவ் (ரஷ்யப் பிரதமர்), பாரி கோல்டு வாட்டர், ஜார்ஜ் ஸாம்போய் (போர்ச்சுகல் அதிபர்), ஜான் டெட்ஸ் (CIA, இயக்குநர்), ஹெர்ப் கிரே (கனடா துணைப் பிரதமர்), பியர்ரி மென்டஸ் (பிரான்ஸ் பிரதமர்), மைக்கேல் ஹோவர்டு (இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்), புரூனோ கிரிஸ்கி (ஆஸ்திரிய வேந்தர்), ராபர்ட் ரூபின் (அமெரிக்க நிதிச் செயலாளர்) ஆகியோரும் யூதர்களே.

ஊடகத் துறையில், வோல்ஃப் பிளிட்சர் (CNN), பார்பரா வால்டர்ஸ் (ABC News), யூகின் மேயர் (வாஷிங்டன் போஸ்ட்), ஹென்ரி கிரன்வால்ட் (TIme - எடிட்டர்), காதரின் கிரஹாம் (வாஷிங்டன் போஸ்ட் அதிபர்), ஜோசப் லெலிட் (நியூயார்க் டைம்ஸ் எடிட்டர்), மேக்ஸ் ஃப்ரான்கல் (நியூயார்க் டைம்ஸ்) ஆகிய யூதர்கள் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

உலக வரலாற்றில் இடம் பெற்ற மிகச் சிறந்த ஐரோப்பா கொடையாளரின் பெயரை உங்களால் கூற முடியுமா? அவர்தான் ஜார்ஜ் ஸோரஸ். ஒரு யூதர். இதுவரை அவர் 4 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வாழங்கியுள்ளார். உலகில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த உதவி கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வால்டர் அனன்பர்க் என்ற மற்றோரு யூதர் 2 பில்லியன் டாலர்களை வழங்கி 100 நூலகங்களைக் கட்டியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மார்க் ஸ்பிட்ஸ் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். லென்னி கிரேஸல்பர்க் மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றவர். ஸ்பிட்ஸ், கிரேசில் பர்க் மற்றும் போரிஸ் பெக்கர் ஆகியோர் யுதர்களே.

இந்தப் பூமியில் 1,476,233,470 முஸ்லிம்கள் வழ்கின்றனர். 100 கோடி மக்கள் ஆசியாவிலும் 40 கோடி மக்கள் ஆப்ரிக்காவிலும் 4.4 கோடி பேர் ஐரோப்பாவிலும் 60 லடசம் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர். ஒவ்வொரு யூதருக்கும் 100 முஸ்லிம்கள் உள்ளனர்.ஆனாலும் பலம் குன்றிப் போயிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் (OIC) 57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து 500 பல்கலைக்கழகங்களை மட்டுமே அமைத்துள்ளனர். 30 இலடசம் முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில். அமெரிக்கா 5758 பல்கலைக்கழகங்களையும் இந்தியா 8407 பல்கலைக்கழங்களையும் பெற்றுள்ளன.

Anonymous said...

2004 இல் ஷாங்காய் ஜியோ டான்க் பல்கலைக்கழகம் நடத்திய உலகப் பல்கலைக்கழங்களின் தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடத்தில் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YNDP தகவல்படி கிறிஸ்தவ நாடுகளில் கல்வியறிவு விகிதம் 90% கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் 15 நாடுகளில் எழுத்தறிவு 100%, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் சராசரி 40% மட்டுமே.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பத்து லட்சம் முஸ்லிமுக்கு 230 விஞ்ஞானிகள் மட்டுமே உள்ளனர். அமெரிக்கா 4000 விஞ்ஞானிகளையும் ஜப்பான் 5000 விஞ்ஞானிகளையும் பெற்றுள்ளது. முழு அரபுலகிலும் முழு நேர ஆராய்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கை 35000 மட்டுமே. முஸ்லிம் நாடுகள் அந்தந்த நாடுகளின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 0.2 % மட்டுமே செலவிடுகின்றன. கிறிஸ்தவ நாடுகள் 5% செலவிடுகின்றன.

முஸ்லிம் உலகம் அறிவை உற்பத்தி செய்வதில், பெறுவதில் பின்தங்கி உள்ளதே இதற்கு காரணம்.

1000 மக்களுக்கு எத்தனை நாளிதழ்கள், புத்தகங்கள் உள்ளன என்பதை வைத்து அந்த சமூகத்தின் அறிவை எடை போட முடியும். பாகிஸ்தானில் 1000 மக்களுக்கு 23 நாளிதழ்கள் உள்ளன. சிக்கப்பூரில் 360. UK வில் 10 லட்சம் மக்களுக்கு 2000 புத்தகங்கள், எகிப்தில் 20 மட்டுமே.

இந்த கட்டுரை சமரசம் 2006 நவம்பர் இதழில் வெளியானதாகும்...

suvanappiriyan said...

சகோ அனானி!

சமரசத்தின் கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி!

கல்வி என்பது சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதி சார்ந்து இருக்க வேண்டும். யூதர்களின் மற்றும் மேற்கத்தியவர்களின் கல்வி முறையானது சமூகத்தை மிகவும் சீரழித்துள்ளது. அமெரிக்க மதி மிஞ்சிய துப்பாக்கி கலாசாரம், பாலியல் சீரழிவுகள, தாய் தந்தை மகன் மகள் என்ற பாசப்பிடிப்பு தளர்ந்தற்கான காரணம் மேற்கத்திய கல்வி முறையே என்றால் மிகையாகாது.

அடுத்து ஐரோப்பியர்கள் கண்டு பிடித்த அதிகமான கண்டுபிடிப்புகளின் மூலம் ஈரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து கொண்டு சென்ற அரிய புத்தகங்களே ஆகும். மேலும் நீங்கள் சொல்வது போல் இஸ்லாமிய சமூகம் கல்வி கற்பதில் சற்று பின்னடைவாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளில் மிகச் சிறந்த வல்லுனர்களை இஸ்லாமிய சமூகம் பெறும். அதனால் இந்த உலகமும் பயனுறும்.

Dr.Anburaj said...

ஏன் இப்படி அரேபிய அடிமைத்தனமாக பேசுகின்றீா்கள்.அரேபிய அடிமைத்தனம் வேறு இஸ்லாம் வேறு இல்லையா , சவுதி பெண் டாக்டா் பட்டம் பெறுவதில் என்ன விஷேசம் உள்ளது ? இந்தியாவில் இது சாதாரணம். அரேபிய அடிமைப்புத்தி அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Dr.Anburaj said...

.
அடுத்து ஐரோப்பியர்கள் கண்டு பிடித்த அதிகமான கண்டுபிடிப்புகளின் மூலம் ஈரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து கொண்டு சென்ற அரிய புத்தகங்களே ஆகும்.- அன்பரே இதுபோன்ற மு்ட்டாள்தனமாகக கருத்தக்களை விதைத்து முஸ்லீம்களை முட்டாளாக்க வேண்டாம்.