Followers

Friday, December 27, 2013

ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பர் சிங்கரில் - ஓர் அலசல்



ஓய்வு நேரங்களில் எப்போதாவது தொலைக்காட்சி பக்கம் சென்றால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை தவற விடுவதில்லை. படிக்கும் காலங்களில் இருந்து இசையில் கொஞ்சம் ஆர்வம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வருந்தினராக வந்தார். அதில் நேற்றைய நிகழ்ச்சியில் 'சன் சைன் ஆர்கெஸ்ட்ரா' வைப் பற்றிய ஒரு தொகுப்பை ஒளிபரப்பினார்கள். அந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியை எனக்குத் தந்தது.

சலவைத் தொழிலாளியின் மகன், ரோட்டோரமாக டீக்கடை வைத்து பிழைக்கும் ஒருவரின் மகன் என்று வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 25 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குழந்தைகளை கடந்த ஐந்து வருடமாக மேற்கத்திய இசையில் வார்த்தெடுத்து வருகிறது கேஎம் மியூசிக் குழுமம். இந்த குழந்தைகளில் எவருமே இசைக் குடும்பத்திலிருந்து வரவில்லை. இது எப்படி ரஹ்மானுக்கு சாத்தியமானது? இவ்வளவு பிஸியான வேலைகளுக்கிடையே எவ்வாறு இவ்வாறு இந்த குடும்பங்களை தேர்ந்தெடுக்க முடிந்தது? எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி ஒரு எண்ணம் ஏன் இவருள் வந்தது? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அவர் சிறு வயதில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தார். பள்ளிக்கு சென்று விட்டு வந்து ஓய்வு நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சில நேரங்களில் பள்ளிக்கே செல்லாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். முடிவில் கல்லூரிக்கு செல்லும் தீராத ஆசையை தியாகம் செய்கிறார் தனது குடும்பத்துக்காக! அந்த வலி இன்னும் அவருள் இருப்பதால் அதைப் போன்ற ஏழை குடும்பத்து மாணவர்களை பொறுக்கி எடுத்து இன்று உலக அளவில் பேசப்படக் கூடியவர்களாக மாற்ற முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.



செலோ என்ற வாத்திய கருவியை சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியாத ஒரு மாணவன் அந்த கருவியை மிக அனாயசமாக வாசிக்கிறான். ஆக ஒரு மாணவனுக்கு வாய்ப்பையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவனால் எந்த துறையிலும் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம். முன்பெல்லாம் இசை என்றால் மேல் சாதிக்காரர்களின் ஆக்கிரமிப்பே அதிகம் இருக்கும். இந்த மாணவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் இசைப் பயிற்சியை முடித்து வெளியேறும் போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவ மாணவிகள் அதிகம் தங்களின் திறமைகளை காட்ட ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரஹ்மானை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

இசையை பொறுத்த வரை இஸ்லாம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குர்ஆனும் மிகச்சிறந்த ராகத்தில்தான் ஐந்து வேளையும் பள்ளிகளில் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இறை வேதமான குர்ஆன் ராகங்களோடு வாசிக்கப்படுவதை பார்க்கிறோம். குர்ஆன் இசையை தடை செய்து நேரிடையாக வசனங்கள் எதனையும் அருளவில்லை. கொலை, விபசாரம், வட்டி, பொய், போன்ற பாவங்களை பட்டியலிடும் குர்ஆன் அவற்றை தவிர்த்துக் கொள்ளச் சொல்லும் குர்ஆன் இசையைப் பற்றி எங்குமே ஒரு வார்த்தை கூட கூறவில்லை. சில ஹதீதுகளில் இசையைப் பற்றிய தடையை பார்க்கிறோம். மேலும் சில ஹதீதுகளில் இசையை அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம. எனவே இரண்டு ஹதீதுகளையும் சீர் தூக்கி பார்க்கும் போது நம்மை இசை அடிமையாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு அளவுக்கு மீறி இசையை ரசிக்க ஆரம்பித்தால் பைத்தியத்தின் நிலைக்கு கொண்டு சென்று விட்டு விடும்.

அதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சிகளிலேயே சில உதாரணங்களைப் பார்க்கலாம். திவாகர் என்ற போட்டியாளர் 'நீங்க கடவுள் சார்' என்றும் 'இனி எனது உயிரே போனாலும் கவலையில்லை' என்றும் சொல்கிறார். இசையில் அதிக ஈடுபாடு வந்தால் இது போன்ற வார்த்தைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக வரும்.

இன்னொரு போட்டியாளரான அரவிந்த் சீனிவாஸ் 'சார் உங்க வீட்டு வாட்ச மேனாகவோ அல்லது கார் டிரைவராகவோ இருந்து விடலாம் என்று சில நேரங்களில் தோன்றும். தினமும் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அல்லவா?' என்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த மனிதர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், சகல மதத்தவர்களையும் மதித்து அவர்களோடு அன்போடு தனது தொழிலை கொண்டு செல்லும் லாவகமும் ஒவ்வொரு இந்தியனும் கடைபிடிக்க வேண்டியது. இதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அவரை புகழ்கிறோம் என்ற பேரில் கடவுள் என்பதும், உயிரையே விட்டு விடுகிறேன் என்பதும், வாட்ச் மேனாகவாவது வேலை செய்கிறேன் என்று சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. இதை மேடைகளிலேயே ரஹ்மான் சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. தமிழர்களாகிய நாம் ஓவராக சம்பந்தப்பட்டவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். இதனால்தான் சினிமா துறையிலிருந்து பல முதல்வர்களை நாம் பார்த்து வருகிறோம். எனவே ரஹ்மானை ஒரு இசை அமைப்பளாராக பாருங்கள்: சிறந்த இந்தியனாக: சிறந்த தமிழனாக: சிறந்த மனிதனாக: சிறந்த முஸ்லிமாக: பாருங்கள். கடவுள் அளவுக்கு உயர்த்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம் நாட்டில் உள்ள செல்வந்தர்கள் ரஹ்மானை பின் பற்றி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள இது போன்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்லூரி படிப்பு வரை கொண்டு செல்ல முயற்சிப்பார்களாக! ஏழை மக்களுக்கு உழைக்க வேண்டிய நம் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் பொறுப்பை மறந்து தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து ஆசிய பணக்காரர்களிலும், உலக பணக்காரர்களிலும் இடம் பெற ஆலாய் பறக்கிறார்கள். அதற்காக சாமானய மக்களின் வரிப் பணத்தையும் திருடவும் தயங்குவதில்லை. இந்த அரசியல்வாதிகள் மறந்ததனால்தானோ என்னவோ அந்த பொறுப்பை ரஹ்மான் போன்றவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான்! உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளில் இறைவன் உங்களுக்கு பூரண உதவிகளை தந்தருள்வானாக என்று பிரார்த்திக்கிறேன்.

மற்றபடி இந்த போட்டியில் முதல் இடத்தைப் பெறப் போவது திவாகரா அல்லது சையது சுபுகானா அல்லது பார்வதியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்.

1 comment:

Anonymous said...

கரெக்டா சொன்னீங்க.. இந்த மூன்று பேரும்தான் முதல் மூன்று இடங்களில் வருவார்கள்.