Followers

Thursday, December 05, 2013

 பாபர் மசூதி இடிப்பும் இல‌க்கற்ற இசுலாமியர்களும் !



2005ஆம் ஆண்டு புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் வெளியிட்ட ஒரு நூலில் பாபர் மசூதி இடிப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிசத் அமைப்புகளால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதாகக் கூறுகிறார்.

ஆக முதலில் இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்பது உறுதி. இது பலரும் அறிந்ததே, ஆனால் இதன் காலம் பத்து மாதங்கள் என்பது அப்பட்டமான பொய்யாகவே பார்க்க முடிகின்றது. பாபர் மசூதி இடிப்பும், அங்கு இராமர் கோவில் கட்டும் திட்டமும், ‘ரஃகுபீர் தாஸ்’ என்பவர் 1885 ஜனவரி-16 அன்று தொடுத்த வழக்கிலிருந்தே அறியப்படுகின்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்து முயற்சித்தும், பின்னர் 1934-ம் ஆண்டு மசூதியின் முகப்பு சுவர்களை இடித்தும் தொடர்ந்தது இந்துத்துவாக்களின் குரோதச் செயல்கள். இதனடிப்படையிலே தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி அவர்களின் வெகு ஆண்டுகாலத் திட்டமாக இருந்த மசூதி இடிப்பின் மத்தியச் செயல்தான், 1949-ம் ஆண்டு சிலைகளை உள்ளே வைத்து, அங்கு இராமர் அவதாரமாக தோன்றியுள்ளார் என்பது. அதன் நீட்சியாகவும், உச்சமாகவும் நிகழ்ந்ததுதான் உலக வரலாற்றிலே கருப்பு தினமாகக் காணப்படும் டிசம்பர்-6 1992 அன்று காவி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்ட பாபரி மசூதி தகர்ப்பு. இப்படி நூற்றாண்டுகளுக்கும் மேல் திட்டமிட்டு செய்யப்பட்டு ஒன்றுதான் இந்த மசூதி இடிப்பு என்பதனை உணர வேண்டும்.

இந்த அவலத்தை சந்தித்து இசுலாமியர்கள் இந்தியாவில் இருண்டு போயுள்ளனர். இவர்களுக்கு ஒரே ஆதரவு நீதித் துறை. ஆனால் அந்த நீதி மன்றமும் கூட மதவாதிகளின் அரசுக் கட்டிடம் என்பதனை நன்கு உணர்ந்து கொண்டார்கள், அலகாபாத் நீதிமன்றத்தின் 2010-ம் ஆண்டைய தீர்ப்பின் மூலம். இதுதான் பாபரி மசூதியின் அவலம் குறித்த குறுகிய வரைவிலக்கணம். இந்தத் துயரிலிருந்து, அவமானத்திலிருந்து, துரோகத்திலிருந்து, தோல்வியிலிருந்து மீண்டெழ, 20 ஆண்டுகளில் இசுலாமியர்கள் என்ன செய்துள்ளார்கள்?

முதலில் இவர்களிடத்தில் எவ்விதமான தூரநோக்கு செயல் திட்டங்களும் கிடையவே கிடையாது. “எங்களுக்குள் தீண்டாமை கிடையாது, பேதமை கிடையாது, ஒற்றுமை அதுவும் கிடையாது” என்று கல்லிடைக்குறிச்சி சொற்பொழிவொன்றில், மறைந்த போராளி பழனி பாபா அவர்கள் இசுலாமியர்களைக் குறித்துச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். உண்மையில் அதுதான் ஆழ்பெரும் உண்மை. வருடம் டிசம்பர் 6 பிறந்துவிட்டால் போதும், அதற்கு முன்பிருந்து ஒரு காலமாக, சுவர் விளம்பரம், தட்டிகள், நோட்டீஸ் பிரச்சாரம், இறுதியில் அன்றைய தினத்தில் ஒரு கண்டனக் கூட்டம், கருத்தரங்கு, பேரணி, இவ்வள‌வுதான் இத்தனை ஆண்டு காலமாக இந்த இசுலாமியர்களும், அவர்களை வழிநடத்தும் தலைவர்களும் கடைபிடிக்கும் போராட்ட வழிமுறைகள். இதனால் கட்டடம் எப்படி உயிர் பெறும்?

"டிசம்பர் 6 போராட்டம் என்பதே ஏதோ 'வருஷம் பாத்திஹா' சடங்கு போல ஆக்கப்பட்டு விட்டது. ராமர் கோவிலைக் கட்டுவதற்காக விஹெச்பியால் தொடங்கப்பட்ட பல பிரிவுகள் தமது இலக்கை அடைய ஒன்றிணைந்து நிற்பதையும், பாபர் மஸ்ஜித் மீட்புக்காகத் தொடங்கப்பட்ட நமது இயக்கங்கள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நிற்பதையும் தான் நம்மால் காண முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார், திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது ‘குருதியில் நினையும் நூலில்’(ப-98). மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நுண் சாதுரியங்களையும் அதில் குறிப்பிட்டுக் காட்டி, இதில் துளியேனும் நம் இசுலாமியர்களிடத்தில் உள்ளதா என்றும் வினவியுள்ளார். அலகாபாத் தீர்ப்பு வெளியான அதே ஆண்டில் இவர் எழுதிய இந்த வரிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் இசுலாமியர்கள் சுயபரிசோதனை செய்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே வேதனை. எப்பொழுதும் போல இந்த வருடமும் தனித்தனியே ஆரப்பித்துவிட்டனர் தங்களின் துக்க நாள் அனுசரிப்புகளை.

"பாபர் மசூதியினை மறந்துவிடாமல் இருப்பதுவே, நமது பாஸிச எதிர்ப்பின் முதல்நிலை" என்ற வண்ணமாக ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' எனும் இசுலாமிய இயக்கம், 21-வது ஆண்டில் ஒரு வாசகத்தை கையிலெடுத்திருப்பது, இச்சமூகத்தின் இலக்கற்ற நிலையினை தெளிவுபடுத்துகின்றது. அதேநேரம் இதே இயக்கம், பாபர் மசூதி குறித்து நான்கு வருடங்களுக்கு முன்னர், ‘நான்தான் பாபரி பேசுகிறேன்' என்று ஒரு ஆவணப் படமும், அலகாபாத் தீர்ப்பு வெளியான உடன் “நீதி தேடும் பாபரி மசூதி” என்ற ஆவணப் படமும் வெளியிட்டது வரவேற்க வேண்டியது. அதேசமயம் அது சென்றடைந்தது எத்தனை பேருக்கு என்கிற போது சோகமாக உள்ளது. இந்நிலையில் அவ்வியக்கத்தின் சார்பாக, இவ்வருடமும் அதேபோல், “வரலாற்றின் வெளிச்சத்தில் பாபரி மஸ்ஜித்” எனும் மற்றுமொரு ஆவணப் படம் வெளியிடப் போவதாக அவர்களின் துண்டறிக்கையில் வெளியிட்டுள்ளனர். இது உண்மையில் மிகக் கசப்பானதே. எத்தனை வருடத்திற்குத்தான் இப்படி ஆவணப் படம் எடுக்கப் போகிறீர்கள்? அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டாமா?

இந்த ஆவணப்படங்கள் எத்தனை பேரைச் சென்று சேர்ந்துள்ளது? பாபரி மசூதி இடிப்பு அநீதி என்று உணர்ந்த இசுலாமியர்களிடமும், அதிலும் அதிகமாக வெளியிடும் அவ்வியக்கம் சார்ந்த உறுப்பினர்களிடமும் தவிர வேறு எவரிடத்தில் சென்று சேர்ந்துள்ளது? சேரி மக்களுக்குத் தெரியுமா இவைகள்? இந்தப் படங்கள் விற்பனைக்காக எத்தனை பக்கங்கள் கடை விரித்துள்ளீர்கள்? நீங்கள் நடத்து டிசம்பர்-6 கூட்ட அரங்கு தவிர?

ஆக, இவர்கள் செய்யும் ஊடக செயல்கள் கூட முழுமையானதாக இல்லை. ஆனால் ஆவணப்படங்கள் தாண்டியும் இது ஒரு பெரும் திரைப்படமாக எடுத்து அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணம் இவர்களிடத்தில் இல்லை. 'ராம் கே நாம்’ என்று ஹிந்தியில் பாபரி மசூதி இடிப்பிற்கு முன்னரே வெளிவந்த படத்தினை இங்குள்ள மக்களுக்கு மொழியாக்கம் செய்து காட்டவோ, வட இந்திய மக்களுக்கு அதனை பரப்பிக் காட்டவோ இவர்களிடத்தில் திறன் இல்லை, திட்டங்கள் இல்லை.

ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எழுதிய அதே நூலில், இசுலாமியர்களின் கையறு நிலையினை அவர் தெளிவாகக் கூறியிருக்கின்றார். வி.ஹெச்.பி செய்த பள்ளிக்கூடத் திறப்பு, அதில் இராமர் பற்றிய திணிப்பு, ஊடகங்களில், சின்னத்திரைகளில் இராமர் தொடர் ஒளிபரப்பு, மலைவாழ் மக்களிடத்தில் இராமர் சிலை இலவச அளிப்பு என்று அவர்களின் செயல்திட்டங்களை கூறியிருக்கின்றார். இதில் ஒன்றையேனும் இசுலாமியர்கள் செய்துள்ளார்களா என்றால் இல்லை? சமீபத்தில் 26-இயக்கங்கள் தமிழகத்தில் ஒன்றிணைந்து, முகம்மது நபி அவர்களை இழிவுபடுத்திய அமெரிக்க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து, அமெரிக்க தூதரகத்தினை தமிழகத்தை விட்டும் துரத்தியடித்தது. ஏன் இந்த ஒற்றுமை இதில் வருவதில்லை. ஏன் இந்த 26 இயக்க‌ங்களிடத்திலாவது ஒரு பள்ளிக் கூடம் உள்ளதா? ஊடகம் உள்ளதா? அரசியல் பலம் உள்ளதா? தென்னக இசுலாமியர்களின் நிலையே இப்படியென்றால், வடக்கில் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அவர்கள் இசுலாமியர்களாக உலாவுவதே பெரிய சிக்கல்.

இப்படி 20 வருடங்கள் கழிந்தும் எந்த செயல் திட்டமும் அற்று இந்த சமூகம் இருப்பதன் பின்புலம், இரண்டு. ஒன்று இவர்களிடத்தில் இல்லாத ஒற்றுமை, இன்னொன்று இந்துத்துவாக்களின் திசை மாற்றும் வேலை.

மசூதி இடிக்கப்பட்டதும் இசுலாமியர்கள் எழுந்து விடுவார்கள் என்ற காரணத்தால், இசுலாமியர்களுக்கு தொடர்ந்து வெவ்வேறு பிரச்சனைகளைக் கொடுத்து, அவர்களை திசைமாற்றிக் கொண்டே உள்ளது காவிக் கும்பலும், அதனோடு இருள் கரம் கோர்த்திருக்கும் காங்கிரஸ் கும்பலும். அதனால்தான் இசுலாமியர்கள் டிசம்பர் ஆறன்றே இதனை நினைவு கூறும் அவலம் தொடர்கின்றது.

மசூதி இடிப்புக்குள்ளான சில வருடங்களில், பழனிபாபா கொலை செய்யப்படுகிறார். ஒரு வீரியமிக்க தலைமையை அழித்துவிட்டது. இந்தியாவெங்கும் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு, இசுலாமிய இளைஞர்கள் சிறைகளுக்குள் நிரப்பப்படுகின்றனர், இசுலாமியர்களின் பிற‌ப்புரிமையான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர், அப்துல்நாசர் மதானி தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டுள்ளார், 2002-ல் குஜராத்தில் இசுலாமியர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டனர், இப்படி ஒரு இழப்பில் இருக்கும் சமூகத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகளைக் கொடுத்து அதன் மூலம் அவர்களை விழிப்புணர்வு அடையவிடாமல், எக்காலமும் போராடிக் கொண்டே இருக்கும் முகமாக, இசுலாமியர்களை திசை திருப்புவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள்.

இப்படியான சூழலில்…. “பாபர் மசூதி இடிப்பு தினத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டும்போது, அதைக் கொண்டாடியதால் பரமக்குடி முருகனையும், பெரிய பொட்டு வைத்துக்கொண்டு அன்னதானத்தை பிரமாண்டமாக நடத்தியதால் மதுரை சுரேஷையும் படுகொலை செய்ததாக தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாஜக‌ பிரமுகர் முருகன் கொலை குறித்து விசாரிக்க தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்தனர்” என்கிற செய்தி இன்றைய தினங்க‌ளில் ஊடகங்களில் பரவ விடப்பட்டுள்ளன. இது எவ்வலவு பெரிய விஷமம். முஸ்லீம்கள் நீதி வேண்டி நடத்தும் போராட்டங்கள் கூட இனி இந்துக்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்துமல்லவா? இவர்களின் போராட்டங்கள் தவறாக பார்க்கப்படுமல்லவா? இருபது வருடங்கள் கழித்தும் இந்தச் சமூகம் எள்ளள‌வும் எழுந்து நிற்கவில்லை, எழ விடாமல் எதிரிகள் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் இத்தனை அடுக்கடுக்கான பிரச்சனைகளையெல்லாம் களைய இந்த இசுலாமியர்கள் ஒன்றுபட்டாலே ஒழிய வேறு தீர்வே இல்லை என்பதுவே ஆழமான உண்மை.

பாபர் மசூதி இடிப்பானது, எவ்வகையிலும் நியாயமற்றது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியும், அங்கு இராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தும் கூட, அலாகாபாத் நீதிமன்றம் அப்பட்டமான ஒரு விநோதத் தீர்ப்பினை வழங்கியது, வேதனையிலும் வெங்கொடுமை. அங்கு இராமர் பிறந்ததற்கான ஆதாரங்களைத் தேடி, அகழ்வாராய்ச்சி தொல்பொருளியாளர்கள் மசூதியினுள் தோண்டிய குழிகள் ஆதாராம் தேடி இல்லை; அது இராமர் கோவில் கட்டுவதற்கான பூமி தோண்டல் என்பதனை அலாகாபாத் தீர்ப்பு தெளிவாக்கிவிட்டது. முழுக்க முழுக்க இந்துக்களுக்கே சாதகமான இந்தத் தீர்ப்பினைக் கூட இந்துத்துவாக்கள் அநியாயம் என்கிறார்கள்.

“ஜென்ம பூமியின் மூன்றில் ஒரு பங்கு இசுலாமியர்களுக்கென்று தீர்ப்பு கூறியுள்ளார்கள். இது என்னவென்று புரியவில்லை. அநீதியாக உள்ளது” என்று இந்து முன்னணி இராமகோபலய்யர் கூறியுள்ளார்.

"முஸ்லீம்கள் இனியும் பாபர் மசூதி என்று ஜென்ம பூமியினை அழைத்தால், நாங்கள் முஸ்லீம்களின் மக்காவினைக் கேட்போம்” என்று ஒரு மிரட்டல் விடுத்தார், தீர்ப்பு வெளியான அடுத்த நாளில் திரு.இராஜ்நாத் சிங்.

ஆனால், இசுலாமியர்களுக்கோ இதுபற்றியெல்லம் எந்த அறிவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்றறிந்தும் இவர்கள் மனங்களுக்குள்ளே புழுகிக் கொள்கின்றனர். இது ஒரு மதத்திற்கான இழிவல்ல, இது இந்திய தேசத்தின் இழிவென்பதனை உணர்ந்து, இப்பிரச்சனையினை, ஐ.நா மன்றம் வரையிலும், ஏனைய இசுலாமிய நாடுகளிடத்திலும் முறையிட்டு இருக்க வேண்டாமா இந்த இசுலாமிய சமூகம்?

“நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு, நீதிபதிகளையும் மதவெறி தீண்டிவிட்டதோ என்ற ஐயத்தை உண்டாக்குகின்றது” என்று நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்களும்,

“நீதிமன்றம் மிகவும் மோசமான தவறிழைத்துவிட்டது” என்று அரசியலமைப்பு சட்ட நிபுண‌ர் திரு.இராஜிவ் தவான் அவர்களும்,

“இது ஒரு அரசியல் தீர்ப்பு, உறுதியான ஆதாரங்களால் வழங்கப்பட்டது இல்லை" என்று எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களும்,

“பள்ளிவாசல் கபருஸ்தானில் நீதியை குழிதோண்டிப் புதைத்துவிட்டது நீதிமன்றம்" என்று, அவினாஷ் பாண்டே ஆராய்ச்சி நிபுண‌ர் அவர்களும்,

இப்படியாக பலரும் 2010 வெளியான தீர்ப்பினை எதிர்த்து, இது அநீதி, அநீதி என்று கூறியுள்ளனர். இந்த உண்மைகளுக்கு மத்தியில் ஊடக‌ங்கள் பார்ப்பனர்களின் குமுறல்களை மட்டுமே திரையிடுகின்றன.

இப்படியிருந்தும் இன்னும் இசுலாமியர்கள், பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியினைச் சார்வது ஒரு நூற்றாண்டு கடந்தும் தொடரும் அவலமாக உள்ளது.

குல்திப் நய்யார் "பியாண்ட் த லைன்ஸ்" என்ற சுயசரிதை நூலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நரசிம்மராவ் பாபர் மசூதி இடிப்பில் மறைமுக ஆதரவாளராக இருந்தார். இடிப்பின் போது பூஜையில் உட்கார்ந்த நரசிம்மராவ் பாபர் மசூதியின் கடைசிக் கல் வீழ்த்து முடிந்தவுடன்தான் பூஜையை முடித்தார்" என்று குல்தீப் நய்யார் அந்த நூலில் எழுதியுள்ளார். "பாபர் மசூதி இடிப்புக்கு ராவ் அரசே முழு பொறுப்பு. அவருக்கு அது நடக்கும் என்று தெரிந்திருந்தபோதும் அவர் அதனைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை" என்கிறார் குல்திப் நய்யார்”

இதுதான் காங்கிரஸின் உண்மை முகமாக உள்ளது. இருந்தும் இசுலாமியர்களின் ஏமாற்றம் தவிர்க்க இயலாததாக உள்ளது. தங்களுக்கென்று ஓர் அரசியல் பலத்தினை உருவாக்காமல், ஊடக வலிமையினை உருவாக்காமல், அறிவுத் தலைமுறைகளை உருவாக்காமல் இவர்களால் என்றுமே எழுந்திருக்க முடிய முடியாது. இதற்க்கெல்லாம் தேவை ஒற்றுமை. அது நிகழ வேண்டுமெனில் ஒவ்வொரு இசுலாமியனும் சிந்திக்க வேண்டும்.

20 வருட காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தலைக்கு ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து கல்வி கொடுத்து, சிவில் சர்வீஸ் பரிட்சை எழுதப் பயிற்சி கொடுத்து ஊக்குவித்து, அவனுக்கான எல்ல செலவுகளையும் ஏற்று வளர்த்திருந்தால் இன்று இசுலாமியர்கள் மத்தியில் குறைந்தது பத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகியிருக்க மாட்டார்களா? ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாகியிருக்க மாட்டார்களா? ஏன் செய்யவில்லை இந்த இயக்கங்கள்?

இருபது வருடங்களில் இந்தப் போராட்டங்களுக்காக செலவு செய்த தொகையினைச் சேமித்து ஒரு பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம். செய்தார்களா? பிரதான இயக்கங்கள் ஒன்றிணைந்து தங்களுக்காக ஒரு செய்தி ஊடகம் உருவாக்கியிருக்கலாம். செய்யவில்லையே ஏன்?
இவர்கள் மத்தியில் நம்பிக்கையில்லை, ஒற்றுமையில்லை. தற்பெருமை, போட்டி மனப்பாங்கு மட்டுமே உள்ளது.

இது கருப்பு நாள் மட்டும், இல்லை காவிகளின் நாள் என்று நாம் உணராத வரையில் வெற்றி நமக்கிங்கு இல்லவே இல்லை. நாம் சக்தி பெற, நீதம் பெற ஒற்றுமை தவிர மாற்று இல்லை என்று உணர்ந்ததை நிறைவேற்றாத வரையில், வெற்றி எட்டாக் கனியே.

பாசிசவாதிகளின் ஹிந்துஸ்தானத்திற்கு, சுதந்திர போரட்ட நாயகர்களின் வழிவந்த இசுலாமியர்கள் என்றும் தடையாகவே இருப்பர். இதனை அடைய இசுலாமியர்களை விரட்டியடிக்கவும், தலித்துகளை ஒடுக்கி வைக்கவும் பாசிசம் உறங்காது வேலை செய்யும். ஆனால் தவறு செய்பவனே, அவனை தண்டிக்கும் வழிமுறையினையும் காட்டிக் கொடுத்து விடுகின்றான். அவ்வகையிலேதான், இந்துத்துவாக்கள் ஒரு தவறு இழைத்துவிட்டனர். அதுவே டிசம்பர்-6. அவர்களால் அந்நியப்படுத்தப்படும் இசுலாமியர்களும், ஒடுக்கப்படும் தலித்துகளும் இணைவு கொள்வது இத்தளத்தில்தான். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஓங்கி மறைந்த சட்டமேதை, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மறைந்த நாளில், மசூதியை இடித்து இசுலாமியர்களுக்கு தங்களின் தோழமையினை அடையாளம் காட்டிவிட்டது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பு.

இவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கும், அவ்வகையில் மசூதியினை இவர்கள் இடித்தது, “நான் சாகும் போது ஒரு இந்துவாகச் சாக மாட்டேனென” கூறி மரணித்திட்ட மாவீரர் அம்பேத்கர் மறைந்த டிசம்பர்-6 ஆகும். வேறு எந்தக் காரணமும் இருப்பதாக இந்நாள் குறித்த வரலாறுகள் இல்லை.

இதனால்தான், “எரிபடும் சேரிகளில், இடிபடும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி' என்று தொல்.திருமாவளவன், திசம்பர் 6 - 1992 அன்றே மதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இனி இசுலாமியர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். தலித் சமூக மக்களிடையே நல்லுணர்வு வளர்த்து, தங்களின் பொது எதிரியினை மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும். அதற்கு எதிர்வரும் நாடாளுமன்றமும், சட்டமன்றமுமே பாடமாக இருக்க வேண்டும். வீணாக பணத்தினை செலவழிக்காமல் அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டிற்குள்ளாவது இசுலாமியர்களுக்கென்று ஒரு தனி ஊடகமும், ஒருமித்த தலைமை கொண்ட கட்சி கூட்டணியும் அமைந்திட வேண்டும்.

இளைஞர்களை அறிவுத் தளத்தில் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் குறைந்தது ஐந்து மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு கல்வி, இருப்பிட, உணவுகளை இலவசமாக்கி, அவர்களை ஒவ்வொரு துறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இன்றிலிருந்து முயற்சித்தாலே, அடுத்த வருடங்களில் இசுலாமிய ஆட்சியாளர்கள் சொல்லும் விதமாக‌ ஏற்பட்டு இருப்பார்கள். இதுபோன்ற ஆரோக்கியமான கருத்துக்களைக் கூறி, இவைகளை செயல்படுத்த ஒவ்வொரு இசுலாமியனும் அவரவர் இயக்கத் தலைமைகளை கட்டாயப்படுத்த வேண்டும். இதில் கயமம் காட்டும் இயக்கங்களை இசுலாமியர்களே நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

“பள்ளிவாசல்கள் பஜனை மன்றங்களல்ல; அவை பாசறைகளாக மாறாத வரையில், நாம் இம்சிக்கப்பட்டுக் கொண்டுதான் இருப்போம்” என்று கூறிய பழனிபாபாவின் வார்த்தைகளின் படி, பள்ளிவாசல்கள் தோறும் இது வெறுமனே நம் இழப்பு அல்ல, மாறாக நம் தேசத்தின் இழுக்கு என்று உணர்ந்தும், இதனைப் பற்றி பேசுவதால் அமைதி குலையாது என்று உணர்ந்தும், மசூதி மதகுருமார்கள் துணிவாக தத்தம் மசூதிகளில் பேச வேண்டும். நம் முன்னோர்கள் இம்மண்ணிற்க்காக தம் இன்னுயிர் கொடுத்ததினைப் போல, இன்று இசுலாமியர்கள் மசூதியினை மீட்டு, நம் தேசத்தின் கருப்பு நாளை ஒளி வீசச் செய்து, நமது தியாகத்தினை மீண்டுமொருமுறை நிரூபிக்க வேண்டும்

இறுதியாக பொதுச் சமூகத்திற்கு:

“பாபர் மசூதி தீர்ப்பானது, இந்து-முஸ்லீம் பிரச்சனை அல்ல. மாறாக இது அமைதியினை விரும்பக்கக் கூடிய, மதச்சார்பின்னைமையினை போற்றக் கூடிய, அரசியல் சட்டங்களை மதிக்கக் கூடியவர்களுக்கும், சட்டத்தை காலில் போட்டு மிதிக்கக் கூடிய, நாசகர செயலை செய்கின்றவர்களுக்கும், அநீதியாள‌ர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமாகும்” என்று இதன் தன்மையினை விவரித்துக் கூறுகின்றார், சிறந்த சமூக ஆர்வலரான திரு.ஹர்ஷ் மந்திர் அவர்கள்.

ஆகவே, இசுலாமற்ற தோழர்களே! பாப்ரி மசூதி இடிப்பிற்கு ஆதரவு தரும் எவரும் உண்மை தேசியவாதிகள் இல்லை என்பதனையும், மாறாக அவர்களே தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்பதனையும் நீங்கள் உணர்ந்து, நாட்டை நலம் காணச் செய்ய வேண்டும்.

- ஷஹான் நூர், கீரனூர் ( chenoor35@gmail.com)

2 comments:

Anonymous said...

மும்பை: மும்பையில், 22ம் தேதி நடைபெறவுள்ள, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினைரையும் பங்கேற்கச் செய்து, பா.ஜ., மீதான மதச்சார்பு சாயத்தை போக்கும் முயற்சியில், மகாராஷ்டிரா, பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர்.

Anonymous said...

குஜராத் : கல்வியில் பெரும் பின்னடைவு ! 18வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது !! 3 வது இடத்தில் தமிழகம் !!! குஜராத் மாநிலம், கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வியியல் பல்கலைக் கழகத்தின் சார்பில் மாநிலங்களின் கல்வி வளர்ச்சி பற்றிய 'ரேங்க் பட்டியல்' வெளியிடப்பட்டிருக்கிறது. தொடக்க கல்வியில், 9வது இடத்தில் இருந்த குஜராத் மாநிலம், தற்போது 18வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது உயர் கல்வியில், 8வது இடத்தில் இருந்து 14வது இடத்துக்குப் போயுள்ளது. "மூன்றாவது இடத்தில் தமிழகம்" தமிழகம் தொடர்ந்து, 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் 8வது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கம் 2 இடங்கள் பின் தள்ளி, 31வது இடத்தில் இருக்கிறது. 6வது இடத்தில் இருந்த டெல்லி, 11வது இடத்தை நோக்கி சரிந்து போயிருக்கிறது "மிசோரம், மணிப்பூர் ஏறுமுகம்" 24வது இடத்தில் இருந்த மணிப்பூர் 9வது இடத்திலும் 19வது இடத்தில் இருந்த மிசோரம் 10வது இடத்துக்கும் முன்னேறியிருக்கிறது.