நமது நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு எத்தனை அடுக்கு பாதுகாப்பு: 'அம்மா வாழ்க' 'ஐயா வாழ்க' என்ற கோஷம் என்ன: தலைவர்களின் கார்களுக்கு பின்னே 50 கார்கள் வலம் வந்து பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது என்ன: முதலமைச்சர், கவர்னர் போன்றோர் வருவதற்கு வழிகளை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அடைத்து பொது மக்களை சீரழிப்பது என்ன: என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
துபாய் செல்வ செழிப்புள்ள நாடு: அந்நாட்டின் ஆட்சியாளர் எவ்வளவு எளிமையாக மக்களோடு மக்களாக பயணிப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆடம்பரம் இல்லை: போலீஸ் பாதுகாப்பு இல்லை: பொது மக்களுக்கு இடையூறு இல்லை: இந்த அடக்கமும் எளிமைம் எங்கிருந்து இவருக்கு கிடைத்தது?
இந்த மன்னரின் தலைவரான நபிகள் நாயகம் எவ்வாறு முழு அரபுலகின் சக்கரவர்த்தியாக இருந்த போது எளிமையாக இருந்தாரோ அதைப் பார்த்து தானும் அந்த எளிமையை கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு இந்த எளிமையை தேர்ந்தெடுக்கிறார். மக்களாட்சியோ, மன்னராட்சியோ, கலீபா ஆட்சியோ, ராணுவ ஆட்சியோ எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். மக்களாட்சி என்ற போர்வையில் ஓட்டுக்கள் ஒரு குவார்ட்டருக்கும், ஒரு பிரியாணி பொட்டலத்துக்கும் விற்கப்படும் அவலத்தை நமது நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்து வருகிறோம். நமது நாட்டையும் துபாய், சவுதி அரசுகளை ஒப்பிடும் போது மக்களாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது என்ற முடிவுக்கு நாம் தள்ளப்படுவோம். எனவே இனி வரும் காலங்களிலாவது நமது நாட்டு அரசியல்வாதிகள் துபாய் சவுதி மன்னர்களை ரோல்மாடலாகக் கொண்டு ஆட்சி செய்ய முன்வருவார்களாக!
இதற்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். 'மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
----------------------------------------------------
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 624
-------------------------------------------------
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத்
எழுந்து நின்று கூட தமக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற அடிப்படைக் கொள்கை தான்.
2 comments:
எழுந்து நிற்பது என்பது ஒரு மரியாதை மற்றும் அன்பு நிமித்தம். அது நமது கலாச்சார நடைமுறை. வணக்கத்தில் இது சேராது. ஹதீஸ் அரபி பழக்கவழக்கங்கங்களை முன்னிறுத்திப் பேசும்போது நாம் சிந்தித்து அதை நமது கலாச்சார வழக்கிற்கு உட்படுத்தி அவதானிக்க வேண்டும். நாம் அரேபியாவில் வாழவில்லை, நமது கலாச்சாரமும் அரபுக்கலாச்சாரமும் வேறு வேறு. எனவே இதில் நீங்கள் குழம்ப வேண்டியதில்லை.
ஜமால்
துபாய் நாடு ஒரு நாடு அல்ல. அந்த மன்னாின் சொநத புமி. அவரது பட்டா நிலம்தான். அங்கே அப்பன் செத்தால் மகன் நாடாழ்வான். ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருந்தால்..... தலை உருளும். இந்த முட்டாள் பயல்களைப் புகழ்ந்து எழுத தங்களக்கு வேறு வேலை இல்லையா
Post a Comment