Followers

Sunday, December 01, 2013

தேனி மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய சமணர்கள்!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது சமணர் மலை. இப்பகுதிமக்கள் மொட்டை மலை அல்லது சமணர் மலை என அழைக்கிறார்கள். சமணர்கள் பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளும், சமணர்கள் சிலைகளும் பல இங்கு உள்ளன. உத்தமபாளையம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் என்றால் தான் இப்பகுதி மக்களே அடையாளம் காட்டுகின்றனர். இப்பகுதி தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டாலும் தொல்லியல்துறை கோமாநிலையில் உள்ளது போல இங்கும் அப்படித்தான் உள்ளது. மதுபான பாட்டில்கள், ஆணுறைகள், காதல் பற்றிய கிறுக்கல்கள், பாலித்தீன் பைகள், நாசியைத் துளைக்கும் மதுபான வாடைகள் எல்லாம் வரலாற்று சிறப்பிடத்தின் அவலம்.



சமணமும்-இஸ்லாமும்

கி.பி.8 ஆம் நூற்றாண்டில் சமணர்கள் அதிக அளவில் ;இங்கு இருந்துள்ளனர். மேலூர், யானைமலை ஒத்தக்கடை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஏராளமான சமண படுகைகள் உள்ளன. உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிக்கு மேற்கே சாயபுமலை எனப்படும் சமணமலை இன்றும் உள்ளது. சமணர்களின் கற்படுகைகள், நீர்நிலைகள், குகைள், மருந்துகள் தயாரித்த கற்கள் என பல உள்ளன. கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் சமண-சைவ மதப்போரில் சமணர்கள் 8000 பேர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கழுமரத்தில் சாவதை விரும்பாத பல சமணர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டனர்.

சமணர்கள் மொட்டை அடித்து இருப்பார்கள். முஸ்லிம்களாகி மாறியபின் மொட்டைத் தலை அடையாள மாற்றத்திற்கு உதவியது. ரா.பி.சேதுபிள்ளை, எ.கே.ரிபாயி போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கிடைய சமண சொற்கள் பல இருப்பதை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.

கூன்பாண்டிய மன்னரின் அதிதீவிர சைவமத ஈடுபாட்டிற்கு பயந்து பல சமணர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டதால்தான் உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் அதிக அளவில் முஸ்லீம்கள் இருக்க காரணம் என வரலாறுகள் கூறுகிறது.

தமிழகத்தில் இதுவரை 50 இடங்களுக்குமேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரின் முயற்சியால் மல்லப்பாடி என்ற இடத்தில்தான் தமிழகத்தின் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முத்துப்பட்டி என்ற இடத்தில் சிறிய மலையில் சில குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று சமணக்குகையாகும். சமணர்களின் படுக்கைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இக்குகையில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ஊர் அணைப்பட்டியாகும். இவ்வூரின் அருகே அமைந்த மலை சித்தர் மலை ஆகும். இங்கு சமணக் குகை ஒன்று உள்ளது. இக்குகையின் கிழக்குப் பக்கத்தில் ஒரு ஓவியம் செந்நிறத்தில் வரையப்பட்டுள்ளது. குதிரைமீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க குதிரையானது செல்வது போன்று காணப்படுகிறது. (தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவு பவுன்துரை)

பல குகை ஓவியங்களில் படகு வடிவம் இடம் பெறுகின்றது. இது கட்டுமரம் போன்ற வடிவமைப்பைக் கொண்டு திகழ்கின்றது. அவற்றுள் துடுப்புடன் பயணம் செய்யும் காட்சி சிறப்புடைய ஒன்று. காமயகவுண்டன்பட்டியில் படகின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.(தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 234-டாக்டர் ராவு பவுன்துரை).

பாறை ஓவியங்கள், சமணக்குகைளில் படகு, குதிரையின் மீது தொப்பி அணிந்துள்ள மனிதன் போன்றவற்றைப் பார்க்கும்போதும் தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் சமணர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என அறியப்படுகிறது.

ஆதார நூல்கள்:

1.தமிழகப்பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவ பவுன்துறை
2.தமிழகத்தில் இஸ்லாமியர்கள், ஏ.கே.ரிபாயி
3.மறைக்கப்பட்ட வரலாறும், மறுக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்,அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி.

- வைகை அனிஷ் மற்றும் பூஞ்சாரல் கி.சாந்தகுமார்

-----------------------------------------------------------

தமிழ் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ராவுத்தர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்து கலாச்சாரத்தை ஒட்டியே ராவுத்தர்கள் கலாச்சாரம் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்து-முஸ்லிம்களின் சமய ஒற்றுமை காணப்படுகிறது.

ராவுத்தர் என்பதற்கான ஆவணம் (கல்வெட்டுக்கள்) :

திருப்பெருந்துறை சிவன்கோவில் மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரன் சிலை உள்ளது. அச்சிலை 'குதிரை ராவுத்தர்' என்றும், அம்மண்டபம் 'குதிரை ராவுத்தர் மண்டபம்' என்றும் அழைக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள திரௌபதியம்மன் கோவில் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரன் சிலை உள்ளது. அச்சிலைக்கு 'முத்தியாலு ராவுத்தர்' என்று பெயர் வைத்துள்ளனர். இன்றளவும் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் முத்தியாலு ராவுத்தரை வழிபடுகின்றனர். மேலும் ஒரு முஸ்லிமுடைய சமாதியும் சிறியதாக அக்கோயிலினுள்; உள்ளது. (பார்க்க: களஆய்வு புகைப்படம்)

ராவுத்தரை வணங்கும் இந்துக்கள்

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் ஒரு பிரிவினரான கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின் பெயர் 'ராவுத்தனசாமி'. ஆண் குழந்தைகளுக்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகளுக்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் 'டில்லி பட்டாணி துலுக்கர்' என்று கூறுகிறார்கள். அவர்களுடைய குலமுதல்வருக்கு அவர் உதவி செய்து காப்பாற்றியதால் அவரை குலதெய்வமாக வணங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

துலுக்க கவுண்டர்

ஈரோடு மாவட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கனசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார், 'துலுக்கண கவுண்டர்' என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். திருச்செங்கோட்டில் இதே கண்ணகுலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி திருக்கோயிலில் 'பங்கடு சுல்தான்' என்ற சமாதி உள்ளது. பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி ஆகும். (ஆதாரம் : ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.கொங்குநாடு (1934) தி.சு.முத்துசாமிக் கோனார், பக்கம்-90.)

துலுக்க நாச்சியார்

ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் அமைந்துள்ள இறைவியை 'துலுக்க நாச்சியார்' என்று இன்றும் அழைத்து வருகிறார்கள். இத்தெய்வத்திற்கு முஸ்லிம்களின் உணவு, உடைப் பழக்கத்தையொட்டி ரொட்டி, வெண்ணெய், கைலி (லுங்கி) வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் துலுக்க நாச்சியார்

மதுரை வண்டியூரில் துலுக்க நாச்சியார் பெயரில் கோயில் இருப்பதையும், பெருமாள் உற்சவத்தின் போது, உற்சவ மூர்த்தியான திருமால் துலுக்க நாச்சியார் கோயிலில் தங்கிச் செல்லும் ஐதீகம் நிலவி வருவதையும் கொண்டு ஆய்வு மேற்கொண்டால், ஸ்ரீரங்கம் கோயிலில் இடம் பெற்றிருந்த குந்தவை நாச்சியாரின் செப்பு திருமேனியையே ஸ்ரீரங்கம் பிராமணர்களின் வேண்டுகோளின் பேரில் அங்கிருந்து அப்புறப்படுத்தி சமயபுரம் பகுதியில் வைத்துள்ளது விளங்கும்.

பொருளாதாரத்தில் ராவுத்தர்கள்

தென்மாவட்டங்களில் ராவுத்தரில் பல பிரிவுகள் இருப்பதை காண முடிகிறது. எழுத்துக்காரர், கந்தவெட்டி, நல்லாம்பிள்ளை, தெற்கத்தியார், வடக்கத்தியார் என பல பிரிவுகள் உண்டானதால், அதன் காரணமாக அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதனால் பீடி சுற்றியும், விவசாய கூலிகளாகவும், தோல்தொழில் செய்பவர்களாகவும், நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் உடல் உழைக்கும் தொழிலாளர்களாகவும், நிரந்தர வாழ்விடமின்றி ஊர் ஊராக சுற்றுபவர்களாகவும், பூட்டு மற்றும் திறவுகோல் தொழில் செய்பவர்களாகவும், சந்தை வியாபாரம், பலாப்பழ வியாபாரம் என மூதாதையர்கள் செய்த தொழிலை பரம்பரையாக செய்து வருகின்றனர்.

ஆனால் பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ முன்னேறுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இச்சமூகத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அதே வேளையில் தங்களுடைய நபிமார்கள் செய்த தொழிலை தாங்கள் செய்கிறோம் எனக் கூறி மனதை தேற்றிக்கொள்கின்றனர்.

நபிமார்கள் செய்த தொழில்

ஹஜ்ரத் ஆதம் (அலை) வேளாண்மை மற்றும் நெசவுத்தொழிலும், ஹஜ்ரத் நூஹ் (அலை) தச்சு தொழிலும், ஹஜ்ரத் லூத் (அலை) வேளாண்மை தொழிலும், ஹஜ்ரத் இத்ரீஸ்(அலை) தையல் தொழிலும், ஹஜ்ரத் இப்ராஹிம் (அலை) ஆடு, மாடு பண்ணைத்தொழிலும், ஹஜ்ரத் சுஐபு (அலை) ஆட்டுப்பண்ணையும், ஹஜ்ரத் இஸ்மாயில் (அலை) ஜவுளி வியாபாரமும், ஹஜ்ரத் தாவுது (அலை) பொற்கொல்லராகவும், ஹஜ்ரத் ஹீத்(அலை) தானிய வியாபாரமும் செய்த நிலையில் தாங்களும் இந்த தொழிலை செய்கின்றோம் என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

குடியிருப்பு

ராவுத்தர்கள் குடியிருப்பு பகுதிகள் 'பாளையம்' என அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் விஜயநகரப்பேரரசில் 1529க்கும் 1564 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரை மண்டலத்தை விஸ்வநாத நாயக்கர் நிர்வகித்த போது படைமானிய முறையான பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தி மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாக பிரித்தார்.

அப்பாளையங்கள் பின்வருமாறு, பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர், மேல்மாந்தை, ஆற்றங்கரை, கொல்லபட்டி, கோலார்பட்டி, கடம்ப+ர், மணியாச்சி, தலைவன்கோட்டை, நெற்கட்டும்செவல், சொக்கம்பட்டி, ஊத்துமலை, சேத்தூர், சிவகிரி, சிங்கம்பட்டி, அழகாபுரி, ஊர்க்காடு, சுரண்டை, சந்தையூர், எழுமலை, இராசாக்கனூர், கோட்டையர், மருங்காபுரி, மன்னார்கோட்டை, பாவாலி, இலக்கையனூர், முல்லையூர், கடவூர், இடையக்கோட்டை, நிலக்கோட்டை, தேவதாரம், இராமகிரி, கல்போது, கன்னிவாடி, தொட்டப்பநாயக்கனூர், தும்பிச்சிநாயக்கனூர், நத்தம், வெள்ளிக்குன்றம், மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், போடி, சக்கந்தி, மதவாளைய+ர், சோசலைப்பட்டி, வீரமலை, பெரியகுளம், குருவிகுளம், அத்திப்பட்டி, இளசை, மதுவார்பட்டி, கோம்பை, கூடலூர், கவுண்டன்பட்டி, குமரவாடி, உதயப்பனூர், கொல்லங்கொண்டான் ஆகிய ஜமீன்கள் ஆகும்.

1803 ஆம் ஆண்டு பாளையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்து 'ஜமீன்தாரி' முறையில் மிட்டாக்கள், மிராஸ்தார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆணைக்குளம், வெள்ளாளன்குளம் ஜமீன்களை ராவுத்தர்கள் ஆண்டுள்ளார்கள். பாளையங்களை நிர்வகித்தவர் பாளையக்காரர் என்றழைக்கப்பட்டனர். 'பாலாமு' என்ற தெலுங்கு மொழிச்சொல்லில் இருந்து பாளையம் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், தண்டுப்பாளையம் போன்ற ஊர்கள் இன்றளவும் காலத்தின் சுவடாக உள்ளது.

ஆதார நூல்கள்:
1.மறைக்கப்பட்ட வரலாறும், மறைக்கப்படும் உண்மைகளும். அனிஸ்தீன், அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி.
2.மரைக்காயர் ஒர் சமூக ஆய்வு-அகமது மரைக்காயர், சென்னை
3.மறைக்கப்படும் உண்மைகளும், மறுக்கப்பட்ட நியாயங்களும், மக்கள் தாரகை, சூலை மாதஇதழ், சென்னை.


களஆய்வு : இரணியன் & வைகை அனிஷ்
தொகுப்பு: வைகை அனிஷ் (செல்:9715-795795)

5 comments:

Anonymous said...

sarang on December 2, 2013 at 12:35 pm

பிரம்ம சூத்ரம் படித்தாதான் மோக்ஷம் அத படிக்க பிராமணனாக பிறந்திருக்கணும் என்று எழுதி வைத்ததை எல்லாம் நம்பும் வரை இவர்கள் சாதியத்தை விட மாட்டார்கள்.

ஒருவர் எனக்கு வேதம் சொல்லி கொடுக்க தெரியும் படிக்க தான் ஆள் சேக்க முடியலேன்னார். வீடு மெயின் ரோட்ல இருக்கே “இங்கு வேதம் கற்றுத்தரப்படும்” என்று ஒரு போர்டு வெக்கலாமே என்றேன். அதற்கு அவர் அப்படி வெச்சா யார் யாரோ வந்து கத்துக்கறேன் என்று கேப்பாங்களே என்றார். மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் “நாய்கள் ஜாக்கிரதை” என்று போர்டு மாட்ட வேண்டிய வீடு இது என்று.

shueib said...

தஞ்சை பெரிய கோவில் ராஜ கோபுரத்திலும் தலைப்பாகையுடன் ஒரு மனிதனின் உருவம் பதியப்பட்டுள்ளதாக படித்ததுண்டு

shueib said...

தஞ்சை பெரிய கோவில் ராஜ கோபுரத்திலும் தலைப்பாகையுடன் ஒரு மனிதனின் உருவம் பதியப்பட்டுள்ளதாக படித்ததுண்டு

Anonymous said...

அதே போல சாணார்கள் என்ற சொல்லுக்கும் சமணர்கள் என்ற சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன் ..... சமணர்களில் ஒரு பகுதியினர் இசுலாமியர்களாக மாறிய கால் கட்டத்தில் இன்னொரு பிரிவினர் சாணார்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டனர் .... சமணர்கள் பெருமளவில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர் ... அதனால் தான் என்னவோ தெரியவில்லை இசுலாமியர்களிலும் நாடார்களிலும் பெருமளவில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .....திருநெல்வேலியை அடுத்த தென்காசியின் குற்றாலத்தில் சமணர்கள் குகைகள் உண்டு

Anonymous said...

Very interesting news..great.