நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்
கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற்
பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொருள்:
சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான
வேதியன் = வேதங்களுக்கு தலைவனான
சோதி = சோதி வடிவாய் உள்ளவன்
வானவன் = வானத்தில் உள்ளவன்
பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள
திருந்தடி = திருவடி
பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ
கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி
கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்
நற்றுணை யாவது = நல்ல துணையாவது
நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே
----------------------------------------------------
கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி நீந்துவது?
கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?
இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும்.
திருநாவுக்கரசர் இறைவனின் உதவியைப் பற்றி இவ்வாறு பாடியிருக்க நமது தமிழகத்தில் இந்த பாடல் சம்பந்தமாக ஒரு வரலாற்று நிகழ்வையும் சொல்வர். அதனையும் பார்ப்போம்.
திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.
அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.
அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார்.
அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார்.
இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில்.
இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.
இது உண்மையான வரலாறா? அல்லது சமணர்களை மட்டம் தட்ட சைவ சமயத்தவர் செய்த கட்டுக் கதையா என்பது இன்றும் விவாதத்தில் உள்ளது. இதே கதையை மையமாக வைத்து தான் கமலஹாசனும் தசாவதாரம் படத்தின் மூலமாக இந்த கதையை எடுத்தாண்டிருப்பார்.
--------------------------------------------
'உங்களுக்காக எனக்கு கொடுத்து அனுப்பப்பட்டதை(இறை வேதத்தை) உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தர முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்'
-குர்ஆன் 11:57
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
No comments:
Post a Comment