Followers

Monday, January 20, 2014

சவுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!



புரைதா. சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து 350 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தோட்டங்களும் வயல் வெளிகலும் நிறைந்த ஒரு அழகிய நகரம். ராஷித் அல் ஸல்லாஸ் என்ற சவுதி நாட்டவர் தனது வீட்டில் வீட்டு டிரைவராக வேலை செய்து வரும் இந்தோனேஷிய டிரைவருக்கு தனது செலவிலேயே திருமண ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். மண்டப வாடகை, சாப்பாட்டு செலவு, பெண்ணுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் இந்த சவுதி நாட்டவரே ஏற்றுக் கொண்டு அந்த திருமணத்துக்கு தலைமை தாங்கி நடத்தியும் வைத்தார். இந்த திருமணத்துக்கு தனது உறவினர்கள், தொழிலதிபர்கள் என்று அனைவரையும் அழைத்து ஒரு செல்வந்த சவுதியின் திருமணத்தைப் போன்று நடத்தி வைத்துள்ளார். விருந்து உபசரிப்பு முடிந்தவுடன் திருமண அன்பளிப்பாக தனது விலையுயர்ந்த நான்கு சக்கர வாகனத்தையும் அன்பளிப்பாக கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

அல்குதா என்ற தொழிலதிபர் இது பற்றிக் கூறும் போது 'இதை நான் மிகவும் வரவேற்கிறேன். மனிதர்களை இனத்தால், மொழியால், நிறத்தால் வேறுபடுத்துவதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் ஒரு சில சவுதிகள் இந்த தவறை செய்கின்றனர். அவர்கள் இந்த திருமணத்தை முன்னுதாரமாகக் கொண்டு முஸ்லிம் அல்லாதவர்களையும் அன்பாகவும் பண்பாகவும் நடத்த பழகிக் கொள்ள வேண்டும். இஸ்லாம் அதைத்தான் நமக்கு போதிக்கிறது' என்றார்.

ராபிக்கில் அமைந்துள்ள கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல்லா சாதி கூறும் போது 'இந்த நிகழ்வை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வெளி நாட்டு தொழிலாளியோடு எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. இஸ்லாம் நமக்கு எதை போதிக்கிறது என்பதை இந்த திருமணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். வெளிநாட்டு தொழிலாளர்களை கேவலமாக நடத்துபவர்கள் சொற்ப எண்ணிக்கையினரே. அந்த ஒரு சிலர் ஒட்டு மொத்த சவுதிகளின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்கள் அல்ல.' என்றார்.

அக்பர் பாட்சா என்ற தொழிலதிபர் கூறும் போது 'எல்லோரும் இறைவன் முன்னால் சமமே. அரபு அரபு அல்லாதவர் என்ற பாகுபாட்டை இஸ்லாம் நமக்கு கற்றுத் தரவில்லை. மனிதர்களில் சிறந்தவர் இறைவனைக் கண்டு அஞ்சும் ஒரு நல்லடியார் என்பதே இஸ்லாத்தின் பார்வை. இதைத்தான் நபிகள் நாயகமும் போதித்தார். அவரது போதனையை அனைத்து சவுதி நாட்டவரும் தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்தால் உலகிலேயே ஒரு சொர்க்க லோகத்தை சவுதியில் காணலாம்' என்றார்.

மணமகனான இந்தோனேஷிய டிரைவர் கூறும் போது 'கடந்த 27 வருடங்களாக நான் சவுதியில் இருந்து வருகிறேன். ஒரு முறை கூட என்னை இழிவாகவோ இம்சிக்கும் வகையிலோ எவரும் நடத்தியதில்லை. எனது முதலாளியைப் போல் அனேகர் சவுதியில் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் செய்யும் தவறுகளை உலக மீடியாக்கள் பெரிதாக்கி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர்.' என்கிறார்.

தகவல் உதவி

அரப் நியூஸ்

17-01-2014

சவுதிகள் அனைவரும் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. தவறு செய்பவர்கள் எல்லா சமூகத்திலும் இரண்டற கலந்தே உள்ளனர். ஆனால் சவுதிகள் செய்யும் ஒரு சில தவறுகள் மாத்திரம் உலக மீடியாக்களால் பெரிதுபடுத்தப்படுகிறது. இது போன்ற செய்திகள் அவர்களுக்கு கிடைத்தாலும் அதனை வசதியாக ஒதுக்கி விடுகின்றனர்.

No comments: