Followers

Sunday, March 27, 2016

மணவை முஸ்தஃபா பற்றி அறிந்து கொள்வோம்!தூண்டில் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடாக அண்ணலாரும் அறிவியலும் என்ற நூல் வெளிவந்துள்ளது அனைவரும் அறிந்ததே... அந்நூலின் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் நாடறிந்த தமிழிறஞர் என்பது முந்தைய தலைமுறையினரில் சிலருக்கு தெரிந்திருக்கும். அம்மாபெரும் ஆளுமையை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக வேண்டியே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அண்ணலாரும் அறிவியலும் என்ற நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளோம்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கிய வளத்திற்கும் இஸ்லாமியர்கள் செய்துள்ள பங்களிப்பு மகத்தானது. அதற்கு சாட்சியானவர்களில் மிக முக்கியமானவர் மணவை முஸ்தபா. தமிழ் மொழிக்கும், சொல் வளத்திற்கும் இவர் ஆற்றிய பணிகளை சமுதாயம் அங்கீகரிக்காமல், அவரையும் அவரது தமிழ் தொண்டையும் நாம் மறந்துபோனது மிகவும் வேதனைக்குரியதாகும்.

இவரைப்போன்ற எத்தனையோ ஆளுமைகளின் வரலாற்றை அறியாமல் இருக்கும் நமது அறியாமையின் காரணமாகவே நம் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை மெய்ப்பிக்க திராணியற்று, இஸ்லாமியர்கள் எங்கிருந்தோ வந்த அந்நியர்கள். இம்மண்ணுக்கும், மொழிக்கும் எந்தப் பங்களிப்பையும் செய்யாதவர்கள் என்ற அவப்பெயரை சுமந்து நிற்கிறோம்.

நண்பர்களே.. தயவுகூர்ந்து இதனைப் போன்ற வரலாற்றைப படியுங்கள்.. பரப்புங்கள்... இதோ நம் சமகாலத்து ஆளுமை மணவை முஸ்தபா அவர்கள் வகித்த பதவிகளையும், பெற்றுள்ள விருதுகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். படித்த பின்பு இவரைப்போன்ற தமிழறிஞர் யார்? என்று பெருமிதம் கொள்ளுங்கள்.. கணினி மற்றும் மருத்துவம் தொடர்பான ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இலட்சங்களில் தந்த வளர் தமிழ்ச் செல்வரின் வரலாறு இதோ...

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரி யான வளர்தமிழ்ச் செல்வர், கலைமாமணி ஹாஜி மணவை முஸ்தபா
15-06-1935இல் பிறந்தவர். சர்வதேச இதழான 'யுனெஸ்கோ கூரியர்'தமிழ் மாத இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகளும், தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகளும், புக் பிரண்ட் இதழின் ஆசிரியராக 4 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.

மேலும்,
• என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் பதிப்பின் பொறுப்பாசிரியராகவும்,
• சுதந்திர பொன்விழா குழுவின் முன்னாள் உறுப்பினராகவும்,
• தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும்,
• அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும்,
• தமிழ்நாடு, பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராகவும்,
• அண்ணா பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும்,
• சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும்,
• பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு உறுப்பினராகவும்,
• கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராகவும்,
• எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும்,
• தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராகவும்,
• தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும்,
• செம்மொழி ஐம்பெரும்குழு தமிழாய்வு மத்திய நிறுவன சென்னை உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.

எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இக்குழுவின் நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'காலம் தேடும் தமிழ்',' இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்', 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட் டம்', 'இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?', 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்', 'அன்றாட வாழ்வில் அழகுத் தமிழ்', 'தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்', உட்பட முப்பத்தைந்து தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும், மலையாளத்திலிருந்து ஏழு நூல்களையும் பெயர்த்துள்ளார். எட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. ஐந்து சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களையும், ஐந்து தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதியுள்ளார்.

இவரது கலை, இலக்கியப் பணியினைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் 1986இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டியுள்ளது. இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அரசு திரு.வி.க... விருதை 1989இல் அளித்துப் பாராட்டியது. 1995இல் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு ரூபாய் ஐம்பதினாயிரம் பெற்றார். இவரது அயரா தமிழ்ப் பணியைப் பாராட்டி இளையான்குடி டாக்டர் ஜாகீர் ஹீசைன் கல்லூரி அறிவியல் மன்றம் 'வளர் தமிழ்ச் செல்வர்' விருதளித்துப் பாராட்டியுள்ளது. சென்னை சிந்தனையாளர் பேரவை 'அறிவியல் தமிழ்ச் சிற்பி' பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

மேலும் ,
• எம்.ஜி.ஆர். விருது,
• தமிழ் தூதுவர் விருது,
• சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது,
• புகழ் பதிந்த தமிழர் விருது,
• அறிவியல் தமிழ் வித்தகர் விருது,
• அறிவியல் தமிழேறு விருது,
• முத்தமிழ் வித்தகர் விருது,
• தந்தை பெரியார் விருது,
• மூப்பனார் விருது,
• சாதனையாளர் விருது,
• அறிவியல் தமிழருவி விருது,
• சேவா ரத்னா விருது,
• சான்றோர் விருது,
• கணினி கலைச் சொல் வேந்தர் விருது,
• மாமனிதர் விருது,
• அறிவியல் கலைச் சொல் தந்தை விருது,
• அறிவியல் தமிழ் தந்தை விருது,
• தமிழேந்தி விருது,
• சீறாச் செல்வர் விருது,
• தமிழ் வாகைச் செம்மல் விருது,
• கலைஞர் விருது,
• அமெரிக்க மாட்சிமை விருது,
• அறிவியல் செல்வம் விருது,
• தங்க நட்சத்திர விருது,
• அறிவியல் தமிழ் கலைச்சொல் வேந்தர் விருது.
• ஆதித்தனார் விருது,
• உமா மகேசுவரனார் விருது,
• செம்மொழிக் காவலர் விருது,
• இயல் செல்வம் விருது,
• அறிவியல் களஞ்சியம் விருது,
• பண்பாட்டு காப்பாளர் விருது,
• வாழ்நாள் சாதனையாளர் விருது,
• பாரதி விருது,
• உலகப் பெருந்தமிழர் விருது
உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விருதுகைளையும், பட்டங்களையும், பாராட்டுகளையும் புகழ்பெற்ற பல்வேறு அமைப்புகளிடமிருந்துப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் ஐந்து விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் இவரே ஆவார். இவரது வாழ்க்கையும், சாதனைகளும் மத்திய அரசால் 7மணி நேரம் 20 நமிடம் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவர் எழுதிய 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்'எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அறிவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூல் 1996ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றுள்ளது.

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் அமைப்பை ஏற்படுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். தற்போது அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் பொறுப்பினை இவரது மகன் டாக்டர் மு.செம்மல் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் :

தூண்டில் பப்ளிகேஷன்

1 comment:

Dr.Anburaj said...


மணவை முஸதபா வின் தகுதியை உணா்ந்து மாநில அரசு மத்திய அரசும் அவரை முஸ்லீம் என்ற பேதம் யின்றி அவரது உயா் தகுதியை உணா்ந்து பாராட்டி கௌரவித்துள்ளது. இந்துக்கள் மதவெறி அற்றவா்கள். யாவரும் ஒா் .... என்ற கொள்கை உடையவா்கள். பாக்கிஸ்தானில் பாவம் ஈஸ்டா் பண்டிகை கொண்டாடிய கிறிஸ்தவ பாக்கிஸ்தானியா்கள் சமக அரேபிய மத காடையா்களால் படுகொலை செய்யப்பட்டதை நினைக்கும் போது இந்தக்கள் அனைவரும் உத்தமா்கள் என்று போற்ற நினைக்கின்றேன்.