Followers

Friday, May 09, 2014

டைரக்டர் அமீர் ரியாத் வருகை சம்பந்தமாக!



சென்ற வியாழன்(08-05-2014) இரவு ரியாத் தமிழ் சங்கத்தின் 9 ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு சென்றிருந்தேன். டைரக்டர் அமீரும், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சிநேகனும், அன்னை கல்லூரி தாளாளர் ஹூமாயூனும் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். தமிழ்ச் சங்க நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் இம்தியாஸ் தங்கள் அமைப்பு செய்து வரும் நலப்பணிகளை பட்டியலிட்டார். சமீபமாக ஒரு பட்டதாரி பெண் ஏஜண்ட்களால் ஏமாற்றப்பட்டு வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்டதையும், அந்த பெண் அங்கிருந்து தப்பி அதனால் பல சிரமங்களை சுமந்து ஸ்பான்சருக்கு 25000 ரியாலையும் கொடுத்து அந்த பெண்ணையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பியதையும் அதற்கு தமிழ் உள்ளங்கள் வாரி வழங்கியதையும் குறிப்பிட்டார். இது போன்று பல நலத்திட்டங்கள் செய்து வருவதாகவும் பாதிக்கப்படும் தமிழர்கள் எங்களிடம் தாராளமாக உதவிகளை கேட்கலாம் என்றும் விவரித்தார்.

சேவியரும், ஷேக் முஹம்மதும்(லக்கி சாஜஹான்) விழாவை தொகுத்து வழங்கி கொண்டிருந்தனர். விழாவில் வெற்றி பெற்ற குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடைசியாக டைரக்கடர் அமீர் பேசியதில் இருந்து முக்கியமான சிலவற்றை பார்ப்போம்:

'நான் வந்ததில் இருந்து 'நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த டைரக்டர் அமீர்' 'பல விருதுகள் குவித்த அமீர்' என்று தொகுப்பாளர் அடிக்கொருதரம் சொல்லிக் கொண்டிருந்தார். இது எப்படி இருந்தது என்றால் எங்கள் கிராமங்களில் நான் சிறுவனாக இருக்கும் போது திருவிழாக்களுக்கு செல்வதுண்டு. அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். கூட்டத்தை கலையாமல் வைப்பதற்காக 'நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சொப்பன சுந்தரி இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் முன் தோன்றுவார்' என்று மைக்கில் அடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டிருப்பார் விழா ஒருங்கிணைப்பாளர். அது போல் இன்று என்னையும் தொகுப்பாளர் சொப்பன சுந்தரி ரேஞ்சுக்கு கொண்டு சென்று விட்டார்.. (பலமான சிரிப்பு கைதட்டல்)

சவுதிக்கு வருவது என்றாலே எனக்குள் ஒரு பயம். முன்பு ஒரு முறை வந்து இமிக்ரேஷனில் நான்கு மணி நேரம் நிற்க வைத்து விட்டார்கள். அதிலும் நோன்பு வேறு வைத்திருந்தேன். அது போல் இந்த தடவையும் நடந்து விடுமோ என்று சிநேகனிடம் 'எதுவும் நடக்கலாம்: எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள்' என்று முன் கூட்டியே சொல்லி வைத்தேன். ஆனால் நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை. சிரமமில்லாமல் வெளியேறி விட்டோம். சாதி, மதம், இனம் என்ற அனைத்தையும் தாண்டி இந்த தமிழ் மொழி நம் அனைவரையும் ஒன்றாக இணைத்துள்ளது. இந்த தமிழ் சங்கம் கலை நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்திக் கொண்டிருக்காமல் பல உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் மதங்களை எல்லாம் கடந்து செய்து வருவது பாராட்டத்தக்கது. இதே தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக இருந்து இன்று கல்வி தந்தையாக உருமாறி அதே தமிழ்ச் சங்கத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நண்பர் ஹூமாயூனை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

முன்பெல்லாம் சினிமாவில் முஸ்லிம்களை சாம்பிராணி போடுபவராகவும், கறி கடை பாயாகவும், நம்பிள் வரான், நிம்பிள் போரான், என்றும் அரபு ஷேக்குகள் இங்கு வந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களாகவுமே சித்தரித்து வந்தனர். இதை எல்லாம் பார்த்து வெறுப்புற்று இந்த நிலையை முடிந்தால் நம்மால் மாற்றிப் பார்ப்போமே என்ற உந்துதல்தான் என்னை இந்த சினிமா துறைக்குள் தள்ளியது. 'சினிமா ஹராம்' என்று ஒதுக்குபவர்கள் படம் பார்க்காமலே, டிவிக்களை, கணிணிகளை இயக்காமலேர் இருப்பதில்லை. எந்த ஒரு துறையிலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. சினிமா துறைக்கு இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வந்தவன் என்பதால் பல அவமானங்களை எனது சமூகத்தில் பெற்றுள்ளேன். எனது உறவினர்களில் பலர் என்னோடு முகம் கொடுத்துக் கூட சரியாக பேச மாட்டார்கள்.

எனது சிறு வயதில் சவுதியைப் பற்றி 'நம் ஊர் கிணறுகளைப் போல் சவுதியிலும் எண்ணெய் கிணறுகள் இருக்கும். அதிலிருந்து பெட்ரோலை வாளிகளில் எடுதப்பார்களாம்' என்று தமாஷாக சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்று சொர்க்கபுரியாக சவுதி மாறியுள்ளது. அந்த மாற்றத்தில் நம் தமிழர்களின் பங்கும் அளப்பரியது. நேரம் 12 ஐ நெருங்கி விட்டது. நீங்கள் அனைவரும் பசியோடு அமர்ந்திருப்பீர்கள். உங்களை அதிகம் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை. இத்தோடு எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன். பார்வையாளர்கள் யாரும் ஏதும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

கேள்வி: சமூகத்தை மாற்றக் கூடிய வகையில் கருத்துள்ள படங்கள் வருவதில்லையே? மலையாள படங்களைப் போல் தமிழ்ப்படங்கள் வர வாய்ப்பில்லையா?

டைரக்டர் அமீர் பதில்: மலையாளிகள் நன்கு படித்தவர்கள். எனவே சினிமாவும் அது போன்று மேல்மட்ட தொனியில் இருப்பதை விரும்புகிறார்கள். ஆனால் நம் தமிழகம் படிப்பறிவில் கேரளாவோடு ஒப்பிட முடியாது. கேரள மக்களைப் போன்று படித்தவர்கள் அதிகமானால் அது போன்ற படங்களும் வர வாய்ப்புண்டு.

அடுத்து சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சாதனமாக நமது மக்களால் பார்க்கப்படுகிறது. அது ஒரு நிழல் உலகம். உதாரணத்துக்கு சரோஜாதேவியையோ, ஜெயலலிதாவையோ அசோகன் நம்பியார் போன்றவர்கள் கெடுக்க முயற்சிக்கும் போது எங்கிருந்தோ வரும் எம்ஜிஆர் வில்லன்களை அடித்து துவைத்து விரட்டி விடுவார். அதன் பிறகு அதே எம்ஜிஆரே அந்த கதாநாயகிகளோடு அந்த வில்லன்கள செய்ய நினைத்ததை அந்த பெண் அனுமதியோடு செய்து கொண்டிருப்பார். இது சினிமா. மேலும் நம்பியாரை அவரது வாழ்நாள் முழுக்க வில்லனாகவே பார்த்து வந்துள்ளோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்பியார் ஒரு ஐயப்ப பக்தர். மிகவும் நேர்மையாக வாழ்ந்தவர். இதை நாம் புரிந்து கொண்டாலே பல உண்மைகளை விளங்கிக் கொள்ளலாம்.

கேள்வி: உங்களின் ஒவ்வொரு படங்களும் ஆரம்பிக்கும் போது ஒரு குர்ஆன் வசனம் வருகிறதே! அதற்கும் கதைக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா?

டைரக்டர் அமீர்: எனது தயாரிப்பில் வரும் படங்களின் ஆரம்பத்தில் இறை வசனங்களை போடுவது வழக்கம். எனது மாற்று மத நண்பர்கள் எவர் கண்ணிலாவது அது பட்டு அது என்ன சொல்ல வருகிறது என்று ஆராய மாட்டார்களா என்ற எண்ணத்தில் போடப்படுவது. அதற்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.

கேள்வி: திருக்குறளை அரபி மொழியில் மொழி பெயர்க்கும் முயற்சி முன்பு நடந்தது. அந்த முயற்சி மேலும் தொடர முயற்சிப்பீர்களா?

டைரக்டர் அமீர் பதில்: நீங்கள் சொல்லும் இந்த செய்தி எனக்கு புதிதாக உள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்களை பார்க்கிறேன்.

பார்வையாளராக வந்த ரியாத் புற்று நோய் பிரிவில் மருத்துவராக பல ஆண்டுகளாக பணி புரிந்து வரும் டாக்டர் மாசிலாமணி இதற்கான முழு செலவுகளையும் தாம் ஏற்றுக் கொள்வதாக சொன்னார். எனவே அரபியும் தமிழும் இலக்கண சுத்தமாக எழுதத் தெரிந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருக்குறளை அரபு மொழியில் மொழி பெயர்க்க முயற்சிப்பார்களாக!

2 comments:

மஸ்தூக்கா said...

திருக்குறள் ஏற்கனவே அரபியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதாக நினைவு. விபரம் தேடி அறியத்தருகிறேன் இன்ஷா அல்லாஹ்

மஸ்தூக்கா said...

சென்னை புதுக் கல்லூரியில் அரபித் துறைத் தலைவராக இருந்த முஹம்மது யூசூப் கோகன் உமரி அவர்களால் 1976 ஆம் திருக்குறள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

https://groups.google.com/forum/#!topic/dhilligai-ilakkiya-vattam/L5HM2xl9g6Q

http://sekalpana.blogspot.com/2009/03/blog-post_30.html