சிதம்பரம் அண்ணாமலை நகர் மாரியப்பா நகர் 2–வது தெற்கு சந்தில் முன்னாள் பேராசிரியர் பன்னீர்செல்வம் வீடு உள்ளது.
இவரது வீட்டை பல்கலைக் கழக தொழில்நுட்ப ஊழியர் அருள்பிரசாத் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். நேற்று மதியம் அவரது வீட்டில் திடீரென குண்டு வெடித்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அவருடன் தங்கியிருந்தவர்கள் சிதம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (வயது 34) என்பது தெரியவந்தது. அவர் அருள்பிரசாத்தில் வீட்டில் பதுங்கி இருந்து வெடிகுண்டு தயாரித்தபோது அந்த குண்டு தவறுதலாக வெடித்துள்ளது.
போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது வெடிக்காத டிபன்பாக்ஸ் குண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் செயலிழக்க செய்தனர். வீட்டில் மேலும் கைத்துப்பாக்கி ஒன்றும், வீச்சரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
மோகன்ராம் எதற்காக சிதம்பரத்தில் பதுங்கி இருந்தான் என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மோகன்ராமுடன் மேலும் அவனுடைய கூட்டாளிகள் 3 பேரும் தங்கியிருந்தனர். அவர்கள் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆம்புலன்ஸ் குமார் என்பவரை கொல்லும் திட்டத்துடன் பதுங்கி இருந்துள்ளனர்.
சிதம்பரத்தில் பிரபல ரவுடியாக இருந்தவர் மண்ரோடு சந்திரன். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் அருகே மர்மமாக இறந்தார். இவரும், மோகன்ராமும் கோவை ஜெயிலில் ஒன்றாக இருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அதன் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வந்தனர்.
மண்ரோடு சந்திரனின் தம்பி ஹரி. அவரும் ரவுடியாக செயல்பட்டு வந்தார். அவருக்கும், ஆம்புலன்ஸ் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. 2 மாதங்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் குமார், ஹரியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே ஹரி, ஆம்புலன்ஸ் குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இதற்காக மோகன் ராமின் உதவியை நாடினார். சிதம்பரத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ஹரிக்கு நெருக்கமானவராக செயல்பட்டு வந்தார். அவருக்கும், மோகன் ராமுக்கும் பழக்கம் உண்டு.
அந்த அரசியல் கட்சி பிரமுகரின் உறவினர் தான் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத். மோகன்ராமையும், அவனது கூட்டாளிகளையும் வரவழைத்து ஆம்புலன்ஸ் குமாரை கொல்ல ஹரி மற்றும் அரசியல் பிரமுகர் ஆகியோர் திட்டமிட்டார்கள். இதற்காக மோகன்ராமை திண்டுக்கல்லில் இருந்து வரவழைத்தனர்.
அவனையும், அவனது கூட்டாளிகளையும் அருள்பிரசாத் வீட்டில் தங்க வைத்தனர். ஒரு மாதமாக அவர்கள் அங்கேயே தங்கியிருந்து சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர்.
மேலும் ஆம்புலன்ஸ் குமாரை கொல்லுவதற்காக வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அப்போது தான் குண்டு தவறுதலாக வெடித்துள்ளது. நேற்று குண்டு வெடித்ததும் அவருடன் இருந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அந்த வீட்டில் சில அடையாள அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவை கிடந்தன. அதில் சங்கர்லால், ராஜேஷ்கண்ணன், பாஸ்கர் ஆகியோருடைய பெயர் இருந்தது.
எனவே மோகன்ராமுடன் தங்கி இருந்தவர்கள் அந்த 3 பேராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர்.
தப்பியோடிய பல்கலைக் கழக ஊழியர் அருள்பிரசாத் கிள்ளை அருகே பதுங்கியிருந்தார். போலீசார் அவரை இரவோடு இரவாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை அருகே சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க்கில் ரூ. 1½ லட்சம் கொள்ளை நடந்தது. இந்த 2 சம்பவத்திலும் மோகன் ராமும், அவருடைய கூட்டாளிகளும் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே போலீசார் அதுபற்றியும் விசாரித்து வருகிறார்கள்.
http://www.maalaimalar.com/2014/05/04130944/Chidambaram-blast--goon-to-ki.html
1 comment:
Bro keep Facebook & tweetr on ur web page please
Post a Comment