Followers

Monday, August 10, 2015

சவுதி ஏர்லைன்ஸில் கிடைத்த மன மகிழ்ச்சிகள்!





நான்கு மாத தாய் தமிழக விடுப்புக்குப் பின் சவுதி வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தேன். இளைய மகனிடம் விமான நிலையத்தில் விடைபெற்றுக் கொண்டு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில் சென்று அமர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் ஒரு சகோதரர் வந்து அமர்ந்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். என்னைப் பற்றி நான் சொல்லும் போது இணையத்தில் 'சுவனப்பிரியன்' என்ற புனைப் பெயரிலும் அவ்வப்போது எழுதி வருகிறேன் என்று சொன்னவுடன் 'அடடே.... நீங்கள் தான் சுவனப்பிரியனா? உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று பல நாட்களாக முயற்சி செய்து வருகிறேன். இறைவன் இன்று உங்களை எனக்கு பக்கத்திலேயே உட்கார வைத்து விட்டான்' என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நாகூரை சொந்த ஊராகக் கொண்ட சகோதரர் இத்ரீஸ் அவர்கள் என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன். பல முறை இணையத்தின் மூலம் பேசிக் கொண்டாலும் இன்று தான் முதன் முதலாக அவரை நேரில் சந்தித்தேன்.

தனது ஊரான நாகூரில் தற்போது ஏகத்துவ சிந்தனை எந்த அளவு வந்துள்ளது என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார். தனது மகனின் எதிர்கால படிப்புக்காக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க எந்த அளவு சிரமப்பட்டார் என்பதையும் ஆர்வமுடன் சொல்லிக் கொண்டு வந்தார். ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய சமூகத்தில் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை சகோதரர் இத்ரீஸ் அவர்களின் பேச்சு எனக்கு உணர்த்தியது.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே பகல் நேரத் தொழுகையான லுஹரின் நேரம் வரவே இருவரும் தொழுகைக்கு தயாரானோம். பிரயாணத்தில் பகல் நேர மற்றும் மாலை நேர தொழுகைகளை சேர்த்து தொழுது கொள்ள அனுமதி இருப்பதால் இரண்டு தொழுகைகளையும் சேர்த்து தொழுது கொண்டோம்.

ஏர் லங்கா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் அருகில் அமர்ந்திருப்பவர்களிடமிருந்து மதுவின் நெடி குடலை பிரட்டும். பலமுறை இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டு விமானத்தில் பயணிக்கவே ஆசை அதிகம். ஆனால் மதுவின் பிரச்னையால் நமது நாட்டு விமானங்களை கூடிய வரை தவிர்த்து விடுவேன்.

சவுதி ஏர்லைன்ஸில் ஒரு சிறப்பம்சம் பிராயண பிரார்த்தனையோடு 'அல்லாஹூ அக்பர்... இறைவன் பெரியவன்' என்ற முழக்கத்தோடு விமானத்தை எடுப்பர். அடுத்து நாம் தொழுது கொள்வதற்கு என்றே பிரத்யேகமாக இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். அங்கு விமானத்தின் உள் சகோதரர் ஒருவர் தொழுவதைத்தான் பார்க்கிறோம். இதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ள சவுதி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தை பாராட்டுவோம். சவுதி ஏர் லைன்ஸை பின் பற்றி மற்ற விமான சேவை நிறுவனங்களும் தங்கள் விமானத்திலும் மதுவை முற்றாக தவிர்ப்பார்களாக! தொழுவதற்காக பிரத்யேக இடங்களையும் ஏற்படுத்தித் தருவார்களாக!

No comments: