

TNTJ இராஜகிரி கிளையில் கடந்த 09/08/15அன்று APM நகர் 2வது தெரு A.கமால்பாட்சா அவர்களின் குமாரர் k.முஜிபுர்ரஹ்மான் மணாளருக்கு கோபாலபுரம் S.தோட்டம் நிஜார் அலி குமாரத்தி N.ஆயிஷா சிபானா மணாளிக்கு கிளை நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள் முன்னிலையில் மாவட்ட தாஃயி சகோ முஹம்மது யாசின் (காஜி)தலைமையில் நபிவழி திருமணம் நடைப்பெற்றது. மணமகன் மணமகளுக்கு மஹராக 44 கிராம் தங்க ஆபரண நகையும் வலிமா விருந்தும் கொடுக்கப்பட்டது.
இவ்வாறான திருமணங்களை நாம் இனம் மொழி கடந்து ஊக்கப்படுத்த வேண்டும். பெண்ணிடம் வரதட்சணை கேட்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் முன்பெல்லாம் சர்வ சாதாரணமாக 50 பவுன், 60 பவுன் என்று பெண் வீட்டாரிடம் வெட்கமில்லாமல் கேட்பார்கள். இரண்டு மூன்று பெண்களை இவ்வாறு கட்டி கொடுத்து விட்டு சொந்த வீட்டையும் இழந்த எத்தனையோ தகப்பன்மார்களை நான் பார்த்துள்ளேன். ஏகத்துவ சிந்தனை மக்கள் மனதில் வந்தவுடன் இன்று இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து வரதட்சணை வாங்காமல் மணமுடிக்கிறார்கள்.
இந்த மணமகன் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கவில்லை. திருமண விருந்தும் மாப்பிள்ளையே கொடுக்கிறார். 44 கிராம் தங்கத்தையும் பெண்ணுக்கு மஹராக கொடுக்கிறார். பெண் வீட்டாருக்கு எந்த பொருளாதார சுமையும் இல்லை. இதுதான் நபிகள் நாயகம் காட்டித் தந்த திருமண முறை. இந்த காலத்தில் பல லட்ச ரூபாய்களை இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று உதறித் தள்ளுகிறார் என்றால் இறை அச்சம்தான் காரணம்.
ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதை ஒரு பாவமாகவே கருதுவதில்லை. பெண்ணிடம் வரதட்சணை கேட்பதும், திருமண விருந்தை பெண் வீட்டார் தலையில் கட்டுவதும், ரூம் ஜோடனை என்ற பெயரில் மாப்பிள்ளையும் பெண்ணும் படுத்துறங்குவதற்கு கட்டில் பீரோ என்று லட்சக் கணக்கில் பெண்ணிடம் வாங்குவதும் இன்றும் தொடர்கிறது. பள்ளிவாசல் தோறும் 'எனக்கு பெண் பிள்ளை இருக்கிறது. ஏதாவது தாருங்கள்' என்று வெட்கத்தை விட்டு கேட்கும் எத்தனையோ தகப்பன்களை பார்த்துள்ளோம்.
இஸ்லாமிய இளைஞர்களே! இந்த இளைஞனைப் போன்று வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்பேன் என்று சபதம் ஏற்றுக் கொள்ளுங்கள். இறைவனுக்காக இந்த வரதட்சணையை ஒதுக்கித் தள்ளினால் உங்களுக்கு இறைவன் இதை விட மேலான பொருளாதார வளத்தை கொடுப்பான். அரபு நாடுகளில் உள்ளது போல் மஹராக இரண்டு லட்சம், மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று உங்கள் தகுதிக்குத் தக்கவாறு மஹர் கொடுக்க முன் வாருங்கள். ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்து வைத்தால் அது பலராலும் தொடரப்பட்டால் உலக முடிவு நாள் வரை அந்த நன்மை உங்களை வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.
திருமணம் முடித்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்காமல் மஹர் கொடுத்து பெண் எடுப்பேன் என்ற உறுதியை எடுப்பார்களாக!
1 comment:
இவையெல்லாம் காட்சிக்கு உதவும். வெறும் நடிப்பு. அரேபிய பழக்க வழக்கங்கள் உலகை ஆள வேண்டும் என்பது முட்டாள்தனமானது.அரேபிய நாகாீகம் உலகத்திற்கு முன் உதாரணம் ஆகாது.அதற்கு அந்த தகுதி என்றுமே கிடையாது.அரேபியா இரத்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றது.
அன்பின் வழிியில் யாா் நடந்தாலும் அவரும் இராமனும் ஒன்று.அழுதவா் கண்களை யாா் துடைத்தாலும் அவனும் இராமனும் ஒன்று -என்ற ஒரு திரைப்படபாடல் அற்புதமானது.
அன்பு நிறைந்த மனம் எந்த தவறையும் செய்யாது.
Post a Comment