Followers

Sunday, August 23, 2015

சூல் கொண்ட மேகங்கள் திரளும் அதிசயம் - குர்ஆனின் அறிவியல்



அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும் பின்னர் அதனை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர். வானத்திலிருந்து அங்குள்ள பனி மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான்.

அல்குர்ஆன் 24:43


பஞ்சுகளைப் போல திட்டு திட்டாக தனித் தனியாக மிதந்து சென்று கொண்டிருக்கும் மேகத் திரள்களை நாம் வானில் பார்த்திருப்போம். அந்த மேகத் திரள்களை எல்லாம் காற்றானது தள்ளிக் கொண்டு சென்று அவற்றை ஒன்றாக்குகிறது. இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்க வாட்டிலும் உள்ள குட்டி மேகங்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கிறது. விண்ணில் உள்ள குளிர்ந்த பகுதியை நோக்கி இவை விரைகின்றன. அவ்வாறு மேலெழும்பும் போது குளிரினால் நீரானது சிந்தி விடாமல் இருக்க பக்க வாட்டு மேகங்கள் துணை புரிகின்றன.

இவ்வாறு விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான மேக மலை உருவாகின்றது. இவை கிட்டத்தட்ட 25000 முதல் 30000 அடி வரை வளர்ந்து பெரும் மேகக் கூட்டத்தை உருவாக்குகின்றது.

தனது எல்லைக்குள் இவ்வாறு ஆலங்கட்டிகள் மேக தொகுப்பாக கனமான ஒரு மலையாக மேலே ஏறுவதை அனுமதிக்காத நம் பூமியின் புவியீர்ப்பு விசை அம் மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. இழுக்கப்பட்ட அம் மலைகள் குளிர்விக்கப்பட்டு நமது பூமியின் மீது மழை நீராக பொழிகின்றது. இவ்வாறு ஒன்று திரட்டப்பட்ட மேகக் கூட்டத்திற்கு விஞ்ஞானிகள் ஒன்று திரண்ட கார் முகில் மேகம் (CUMULONIMBUS CLOUD) என்ற பெயரிட்டு அழைக்கின்றனர்.

குர்ஆன் பட்டியலிடும் முறையும் தற்கால விஞ்ஞானிகள் மழை உருவாக்கத்துக்கான பட்டியலும் ஒத்திருப்பது நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. ஒரு இடத்தில் மழை பொழிய அங்கு என்னவெல்லாம் நமக்கு தெரியாத மறைமுக ஏற்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை எண்ணி ஆச்சரியப்படுகிறோம். இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு காலம் பூராவும் நின்று வணங்கினாலும் அது ஈடாகாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்வோமாக!

No comments: