Followers

Sunday, September 13, 2020

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் எப்படியான மாற்றத்தை கொண்டு வருகிறது ?

 



இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் எப்படியான மாற்றத்தை கொண்டு வருகிறது என்பது தொடர்பான ஒரு கட்டுரையை, 2017-ல், ஆஸ்திரேலிய அரசு ஊடகமான SBS வெளியிட்டது. இதில் ராப்பி மெஸ்ட்ரஸி (Robbie Maestracci) என்பவரது குற்றப் பின்னணி வாழ்வை எப்படி இஸ்லாம் நேர்வழிப்படுத்தியது என்பது விளக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, 2018-ல், SBS வெளியிட்ட "The Mosque Next Door" என்ற ஆவணப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.



ராப்பி மெஸ்ட்ரஸி கூறுகிறார், "அது 2007-ஆம் ஆண்டு. போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக பத்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இது எனக்கு நல்லதாகவே பட்டது. அப்போது நான் உடல் நலம் குன்றி காணப்பட்டேன். பல இரவுகள் தூக்கம் இன்றி போதை வஸ்துக்களுடன் பார்ட்டிகளில் கலந்துக்கொண்டதால் நேர்ந்த விளைவு இது. ஆகையால், நேரத்திற்கு உணவு, உறக்கம் என சிறை வாழ்க்கை சென்றதால் இது எனக்கு நல்லதாகவே பட்டது. உடல்நலமும் முன்னேற்றம் அடைந்தது.


சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மறுபடியும் குற்ற செயல்களின் பக்கம் செல்ல ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில், நம்மை நல்வழிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், ஆன்மீக தேடலும் துவங்கியது. என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்தேன். சர்ச்சுகளுக்கு செல்வேன், அவர்களின் நலப்பணிகளில் பங்கேற்றுக்கொள்வேன். இது ஒரு நல்ல மாற்றமாக எனக்கு தோன்றியது. குர்ஆன் மீதும், பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டுமென்ற ஆர்வமும் கூட இருந்தது.


ஒரு கடினமான நாளில், யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்கும் என தோன்றிய சூழலில், என் கண்ணில் முஹம்மதுவின் தொடர்பு எண் கண்ணில் பட்டது. அவர் டாக்சி ஓட்டுநர். இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு பயணத்தில் அவரை சந்தித்தேன். 'நான் பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும், அழைத்து செல்வீர்களா' என்று கேட்டேன். அவர் ஏன் என்று கேட்டார். எனக்கு உதவி வேண்டும், வழிகாட்டல் வேண்டும் என்றேன். அழைத்து சென்றார்.


அங்கே, பள்ளிவாசலில், இமாம்-மிடம் பேசினேன், சகோதரர்கள் தொழுவதை பார்த்தேன். ஒரு முழுமையான அமைதி என்னை ஆட்கொள்வதை உணர்ந்தேன். இது தான் எனக்கான இடம் என்பதையும் உணர்ந்தேன். சில நாட்களுக்கு பிறகு இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன்.


நான் இஸ்லாமை ஏற்றக்கொண்டு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. போதை வஸ்துக்கள் மீதான ஆசை எல்லாம் முற்றாக ஒழிந்துவிட்டது. இவை குறித்து நான் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. இஸ்லாம் என் வாழ்வை முற்றிலுமாக மாற்றிவிட்டது. நல்வழிக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் எது சரி, எது தவறு என்ற சரியான வழிகாட்டல் இல்லையென்றால், உங்கள் நல்வாழ்வுக்கான முயற்சிகள் கடினமானதாகவே இருக்கும். இங்கு தான் இஸ்லாம் எனக்கு உதவியது. நேரான வாழ்வை எப்படி வாழ வேண்டுமென்ற வழிகாட்டலை அது தந்தது.


இந்நேரத்தில் நான் சந்தித்த முஸ்லிம்கள் குறித்தும் கூறியாக வேண்டும். அவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருந்தனர். குடிக்க மாட்டார்கள், போதை பொருட்களின் பக்கம் போக மாட்டார்கள். இது என்னை கவனிக்க வைத்தது. நான் இதுநாள் வரை வாழ்த்த வாழ்விற்கு முற்றிலும் மாறுபட்ட அழகான வாழ்வை இவர்கள் பிரதிபளித்தார்கள். என் இஸ்லாமிய தழுவலில் இவர்களுக்கும் கணிசமான பங்குண்டு.


நான் மாறுவேன் என என்னை சேர்ந்த எவரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் ஆன்மிக முடிவை அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, ஆனால் நிச்சயமாக என் வாழ்வில் இஸ்லாம் கொண்டுவந்த மாற்றத்தை கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.


நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட மூன்று மாதத்தில் என்னுடைய தாயும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். இப்போது சமுதாய பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறேன். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் உரையாடுகிறேன். என்னுடைய அறியாமைக் கால வாழ்வின் துயரங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் கொண்டு வர முயற்சிக்கிறேன். இச்சிறுவர்/இளைஞர்களின் வாழ்வு சிறந்ததாக அமைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புகின்றோம்"


படம்: SBS ஊடகம் தன் ஆவண படத்திற்கான வெளியிட்ட படம். நடுவில் இமாம் உஸைர், வலது ஓரம் சகோதரர் ராப்பி மெஸ்ட்ரஸி

சகோ Aashiq Ahamed  பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.


No comments: