Followers

Sunday, September 20, 2020

ஜப்பானிய முஸ்லிம்கள்...

 

ஜப்பானிய முஸ்லிம்கள்...

 

 

சாமுராய் குடும்பத்தில் பிறந்த ரயோசி மிடா (படம் 2), 1920-களில் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பயணமாகிறார். அங்கு சீன முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களை கண்டு இஸ்லாம் மீது ஈர்ப்பு கொள்கிறார். ஜப்பான் திரும்பும் மிடா, இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொண்டு, தன் வாழ்வியல் நெறியாக இம்மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

 

 

ஜப்பானிய மொழியில் குர்ஆனின் நேரடி மொழிபெயர்ப்பு இல்லையே என்ற வேதனை நீண்ட காலமாக மிடாவிற்கு இருந்தது. அப்போதிருந்த ஜப்பானிய குர்ஆன் பொழிபெயர்ப்புகள், மூல அரபியில் இருந்து மொழிபெயர்க்கப்படாமல், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளில் இருந்த குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் இருந்து ஜப்பானிய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. ஆகையால், இயல்பாகவே அந்த ஜப்பானிய குர்ஆன்கள் திருப்திகரமான ஒன்றாக இல்லை.

 

 

நாமே அரபியில் இருந்து நேரடியாக மொழிபெயர்ப்போம் என்று முயற்சி செய்த போது, மிடாவிற்கு 69 வயது. தன் வயதையும் பொருட்படுத்தாமல் சவூதிக்கு பயணமாகி, நன்கு அரபியை கற்றுக்கொண்டு, 12 வருட உழைப்பின் முடிவில், தன்னுடைய 81-வது வயதில் ஜப்பானிய குர்ஆன் மொழிபெயர்ப்பை வெளியிட்டார். மிடாவின் அந்த கடின உழைப்பு இன்று வரை பல்வேறு பூர்வீக ஜப்பானியர்களை இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள செய்திருக்கிறது.

 

 

1940-களில் காணப்படும் ஜப்பானிய ஆவணங்களின்படி, அன்றைய முஸ்லிம் மக்கட்தொகை 600 மட்டுமே. இன்று, ஜப்பானின் மிகப்பெரும் ஊடகங்களில் ஒன்றான The Mainichi-யின் செய்திப்படி, ஜப்பானில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு இலட்சம் ஆகும். இதில் 43,000 பேர் ஜப்பானிய பூர்வகுடிகளாவர்.

1980-களில் 3 மட்டுமே என்று இருந்த பள்ளிவாசல்களின் எண்ணிக்கை இன்று 105 ஆக உயர்ந்திருக்கிறது. ஜப்பானின் 47 மாகாணங்களில், 36-ல் பள்ளிவாசல்கள் உண்டு. இவைகள் பலவும் இஸ்லாமிய அழைப்பு மையமாகவும் செயல்படுகின்றன. மதரசாக்களும் இவைகளில் உண்டு (படம் 4). ஜப்பானின் மிகப் பெரிய பள்ளிவாசலான டோக்கியோ கமீ மசூதி (படம் 1), வெள்ளிக்கிழமைகளில் இடப்பற்றாக்குறையால் திணறுவது இயல்பான காட்சியாக மாறிவிட்டது.

 

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக 15-20 என இருந்த ஹஜ் செல்வோரின் எண்ணிக்கை, இன்று சில நூறுகளை தொட்டிருக்கிறது (படம் 3). ஒவ்வொரு வருடமும் குர்ஆன் தொடர்பான போட்டிகளை நடத்துகிறது ஜப்பான் இஸ்லாமிய மையம். இதில் வெற்றி பெறுபவர்கள் உம்ராவிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தடகள வீரர் அப்துல் ஹக்கீம் சனி ப்ரவுன், பிரபல சூப்பர் ஹீரோ சீரியல்கள் இயக்குனரான கொவன் கவாசி ஆகியோர் ஜப்பானிய முஸ்லிம்களாவர்.

 

 

இஸ்லாமோபோபியா நிகழ்வுகள் குறைவு என்ற போதிலும், சில மேற்கத்திய ஊடகங்களின் பாதிப்பால் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர் ஜப்பானிய முஸ்லிம்கள். உதாரணமாக பின்வரும் நிகழ்வை பாருங்கள். 2012-ல், இஷிகாவா மாகாணத்தில் கனசவா என்னும் இடத்தில் பள்ளிவாசல் கட்ட முயற்சித்த போது, அப்பகுதி மக்களில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். பள்ளிவாசல் ஒருங்கிணைப்பாளர்களான கென் முராய்யும், சீஜி மட்சுய்யும் அப்பகுதி மக்களுடன் பேசி 2014-ல் பள்ளிவாசல் உருவாகிறது.

 

 

உருவானதில் இருந்து அப்பகுதியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது பள்ளிவாசல். காரணம், இஸ்லாமிய இளைய தலைமுறையினர் பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு அப்பகுதி மக்களுடன் நெருக்கமாகி விட்டனர். 'உட்கார்ந்து பேசினோம், பொறுமையாக எங்கள் கருத்தை எடுத்துரைத்தோம், இப்பகுதி மக்கள் புரிந்துக்கொண்டார்கள்' என்ற மகிழ்வுடன் தெரிவிக்கிறார் மட்சுய்.

 

 

படம் 1: ஜப்பானின் பெரிய பள்ளிவாசலான டோக்கியோ கமீ மசூதி

 

படம் 2: குர்ஆனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்த ரயோசி மிடா.

 

படம் 3: ஜப்பானிய முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை, 2018

 

படம் 4: ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள கொயடொகு பள்ளிவாசலில் செயல்படும் மதரசா.

 

செய்தி திரட்ட உதவிய தளங்கள்.

 

1. The Mainichi

2. Waseda University website

3. Muslims in Japan Facebook page.

4. Wikipedia.

5. Japanese Hajj travel websites.







 

 

 


1 comment:

Dr.Anburaj said...

ஜப்பானிலும் அரேபிய விஷம் பரவிவருவது உலக சமாதானத்திற்கு பெரும் கேட்டை விளைவிக்கும். இது குறித்து ஜப்பான் அரசு நன்கு அறியும். முட்டாள்தனமாக மனித உரிமைகள் என்ற பெயரில் அரேபிய வஷம் பரவ வழி விட்டால் ....அழகிய ஜப்பான் அழிந்து போகும்.