ஜிடிபி(GDP) என்றால் என்ன?
சமீபத்தில்தான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து எங்கும் ஜிடிபி வளர்ச்சி விகிதம், 5 டிரில்லியன் பொருளாதாரம் போன்ற வார்த்தைகளைப் பரவலாகக் கேட்கமுடிகிறது. இந்தியாவில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது, இனியும் சரியும் எனக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விகடனின் DoubtOfCommonMan பகுதியில், ராம்குமார் குலசேகரன் மற்றும் பொன்.முத்துகிருஷ்ணன் ஆகிய வாசகர்கள், ``GDP என்றால் என்ன? எதை வைத்து கணக்கிடுகிறார்கள்? இந்தத் தரவினை வைத்து பொருளாதாரத்தை நாம் எப்படி கணிக்கின்றோம்" என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார்கள்.
இந்தக் கேள்வியைப் பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் முன்வைத்து விளக்கம் கேட்டோம்.
ஜிடிபி என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் அல்லது நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product) ஆகும். இதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதைக் கண்டறியவும் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படும். இதன்மூலம் பணவீக்கம் மற்றும் பண மதிப்பு அதிகரித்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். இந்தியாவைப் பொறுத்தவரை ஜிடிபி காலஅளவு ஏப்ரல் ஒன்று முதல் மார்ச் 31 வரையான கால இடைவெளி. மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும்போது உற்பத்தி மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. விற்பனையைக் கணக்கிடுவதில்லை. ஏனெனில் உற்பத்திக்கான செலவுகளைக் கணக்கிட்டு பின் அதே பொருளின் விற்பனையின் செலவையும் கணக்கிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கானது இரட்டிப்பாக இருக்கும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாமினல் ஜிடிபி, ரியல் ஜிடிபி என்று இரண்டு வகை உள்ளன. இதில் நாமினல் ஜிடிபி மற்றும் ரியல் ஜிடிபி என்பது ஒரு ஆண்டிற்கும், அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் மற்றொரு ஆண்டிற்கும் இடையேயான பண மதிப்பை மட்டும் கணக்கிடுவதாகும்,
அதாவது 2017 ஆண்டில் ஒரு கார் 1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது... அதே கார் 2018 ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும்பட்சத்தில் அது பொருளாதார அதிகரிப்பு அல்ல, மாறாக, பணவீக்கத்தினால் உற்பத்தியின் விலை உயர்ந்ததால் காரின் விற்பனை விலையும் உயர்வதாகும். இதுவே நாமினல் ஜிடிபி ஆகும்.
ரியல் ஜிடிபி என்பது, உற்பத்தி செய்யப்படும் காரின் எண்ணிக்கை அதிகரித்து அதன் விற்பனை விலை 1 லட்சமாகவே இருக்கும் பட்சத்தில் அவை உண்மையான பொருளாதார வளர்ச்சியாக இருக்கும். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படும்.
நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) என்ற முறையில் நம் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது" என்றார்.
நன்றி
விகடன் இணைய இதழ்
12-02-2020
No comments:
Post a Comment