Followers

Saturday, May 03, 2014

மனம் மாறாமல் மதம் மாறி என்ன பயன்?

திரு அரிசோனன்!

// ஜனாப் சுவனப்பிரியன்,

1971ல் மகாராஷ்டிராவில், இந்து-முஸ்லிம் மதக்கலவரம் நடந்தபோது, என் உயிரைப் பணயம் வைத்து, ஒரு வயதான முஸ்லிம் தம்பதிகளுக்கு சில நாள்கள் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த இந்துவாக நான் எழுதுகிறேன். அப்போழுது அந்த முஸ்லிம் தம்பதிகள் உருதுவில் சொன்ன சொற்களை உங்களுக்குத் தமிழில் தருகிறேன்:

“பண்டிட்ஜி, இப்பொழுது உங்கள் வடிவில் நாங்கள் அல்லாவைக் காண்கிறோம். உங்களை மாதிரி இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் இருந்தால் இந்த பாழாய்ப்போன மதக் கலவரங்கள் வராது. இனிமேல் இந்துக்கள் எங்களுக்கு உடன்பிறப்புகள்தான். அல்லா உங்களையும், உங்கள் குடும்பத்தவர்களையும், உங்கள் மதத்துக்காரர்களையும் ரட்சிப்பார்.”//


உங்களை வாழ்த்துகிறேன். உங்களைப் போன்றவர்கள் அனைத்து மதத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்த நாடு மேலும் செழிப்புறும். எனது பக்க அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

எங்கள் வீட்டில் பல வருடங்களாக சுமதி என்ற பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். துணி துவைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, வீட்டை பெருக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார். இரண்டு குழந்தைகளை கொடுத்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டு இந்த பெண்ணை கணவன் விரட்டி விட்டுள்ளான். எங்கள் வீட்டிலும் அக்கம் பக்கத்து இஸ்லாமிய வீடுகளிலும் வேலை செய்து மேலும் 100 நாள் வெலைக்கும் சென்று ஒரு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு வாழ்க்கையை சிரமத்தில் ஓட்டி வருகிறார். அந்த பெண்ணின் 6 வயது 8 வயது குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கும், துணிமணிகள் செலவுக்கும் மேலதிகமாக நாங்கள் சம்பளம் போக கொடுப்பது வழக்கம். தற்போது அருகிலேயே ஒரு இடம் வருவதாகவும் அதனை வாங்க பணம் தேவைப்பட்டபோது மறு பேச்சு பேசாமல் அந்த பெண்ணுக்கு பண உதவியும் எனது மனைவி செய்துள்ளார். வெளியில் பண உதவி பெற்றால் வட்டிக்குத்தான் அவருக்கு பணம் கிடைக்கும். மேலும் குல தெய்வ வழிபாட்டுக்காக அவரது சொந்த ஊரான மதுரைக்கு குடும்பத்தோடு சென்று வர பொருள் உதவியும் கொடுத்து அனுப்பி வைக்கிறோம். வராத நாட்களுக்கு சம்பளத்தையும் பிடிப்பதில்லை. அவ்வப்போது சாப்பாடும் கொடுக்கிறோம். அந்த பெண்ணின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு அவரை மத மாற்றம் செய்ய இன்று வரை நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதை இஸ்லாமும் விரும்பவில்லை. நான் கேட்டுக் கொண்டால் எனது மேல் உள்ள மதிப்பில் கண்டிப்பாக மதம் மாறுவார். மனம் மாறாமல் மதம் மாறி யாருக்கு என்ன லாபம்? எனவே இன்று வரை அந்த பெண்ணின் மத கடமைகளுக்கு நாங்கள் எந்த தடங்கலும் பண்ணவில்லை. இதுதான் யதார்த்தம். 90 சதமான இந்து முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிந்தே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

'பாபர் நாமா' வில் தனது மகன் ஹுமாயூனுக்கு பாபர் எழுதிய கடிதத்தை பாருங்கள்: டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் பாபர் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது. இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர். மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார். ஹஜ்ஜூப் பெருநாளில் குர்பானி கொடுக்கும் போது கூட மாட்டைக் கொடுக்காமல் ஆட்டை கொடுக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார். இந்து முஸ்லிம் ஒற்றுமை குலைந்து விடக் கூடாது என்பதில் பாபர் மிக கவனமாக இருந்துள்ளார்.

பாரதம் போன்ற இவ்வளவு பரந்த ராஜ்ஜியத்தை பெரும்பான்மை மக்களை பகைத்துக் கொண்டு மொகலாயர்களால் 1000 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்க முடியாது. ஆட்சியில் அமரும் யாரும் குழப்பமில்லாமல் ஆட்சி செல்ல வேண்டும் என்றே எதிர்பார்ப்பர். பல இடங்களில் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் எல்லா முஸ்லிம்களும், மொகலாயர்களும் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு 'எது வேண்டும் உனக்கு?' என்று கேட்டு மதமாற்றியதாக இந்த கட்டுரை சொல்வது பல திரிபுகளைக் கொண்டது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே இதனை எழுதுகிறேன்.

-----------------------------------------------------------------

01. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது. ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் – ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

02. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் – பிரிட்டிஷ்காரர்களும் – சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் – இன்று கூட – 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் – இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

03. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் – முஸ்லிம் அல்லாதோர்களை – தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே – இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

04. இந்தோனேஷியாவும் – மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் – மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் – மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

05. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

06. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் – இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் பிரிந்து தெளிவாகிவிட்டது.

-குர்ஆன் 02 – 256





4 comments:

Anonymous said...

மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலத்தைத்
தொடு கின்றான் - அதற்காக உடனே குளிப்பதில்லை -
சதா றோட்டில் மலம் எச்சில் மூத்திரம்
ஆகியவைகளை மிதித்துக் கொண்டு நடக்கிறான்.
அதற்காக வும் உடனே குளிப்பதில்லை. நதிக்கும்
குளத்திற்கும் குளிக்கப் போய்
குளித்து விட்டு தண்ணீர் கொண்டுவரும் ஸ்ரீகள்
றோட்டில் மலம் எச்சில் மூத்திரம்
முதலியவைகளை மிதித்துக் கொண்டு வருகிறார்கள்.
அதற்காகவும் குளிப்ப தில்லை. ஆனால்
ஒரு “பறையரையோ” ஒரு “சூத்திரனையோ”
தொட்டு விட்டால் - அவன்
வேஷ்டி மேலே பட்டு விட்டால் - அவன் தண்ணீர்
குழாயிக்கு பக்கத்தில் நின்று தண்ணீர் பிடித்த
ஈரத்தை மிதித்து விட்டால், உடனே குளிக்க
வேண்டுமென்கிறான். இவனுக்கு சுயராஜியம்
வேண்டுமாம்-

-தந்தை பெரியார்.

Anonymous said...

சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக கலைஞர் வெளியிட்ட அறிக்கை குறித்து நான் எழுதிய பதிவை பார்த்து தி.மு.க நண்பர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜாகீர் உசேனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது; அப்படியெனில் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா?' என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கூடங்குளம் போராட்டக் குழுவினரை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என அரசும் காவல்துறையும் ஊடகங்களும் சொன்னபோது அதைக் கடுமையாக எதிர்த்துள்ளேன். தலித் மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்து பா.ம.க.வினர் பரப்புரை செய்தபோதும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளேன். அப்போதெல்லாம் சமூக ஆர்வலனாகத் தெரிந்த நான், இப்போது முஸ்லிம்களுக்காக பேசும்போது அடிப்படைவாதியாகத் தெரிவது ஏன்?

தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இங்கே எந்த முஸ்லிமும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்குச் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை. அல்-காய்தாவோ, அல்-உம்மாவோ எவரையும் முஸ்லிம்கள் நேசிப்பதில்லை. குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டால் அவர்களிடமிருந்து இறுதிவரை முஸ்லிம் சமூகம் விலகியே நிற்கிறது. ஆனால், முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை மற்றவர்களிடம் இருக்கிறதா?

கோவை குண்டுவெடிப்பில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களுக்காக இங்குள்ள எந்த முஸ்லிம் அமைப்பாவது வாதிடுகிறதா? அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறதா? அவர்களின் படத்தைப் போட்டு தியாகிகளாகக் கொண்டாடுகிறதா? இல்லையே. ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சேயை இந்துத்துவவாதிகள் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே. பாபர் மஸ்ஜிதை இடித்தப் பயங்கரவாதிகளை ‘கரசேவகர்கள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்களே. கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்று ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மறைந்தபோது, உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு தியாகி ஆக்கப்பட்டாரே. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியென லிபரகான் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட அத்வானி இன்றும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறாரே. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்ற பிறகும் மோடியால் பிரதமர் வேட்பாளர் ஆக முடிகிறதே. அவர்தான் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று பலரால் வாதிட முடிகிறதே. இவையெல்லாம் ஒரு முஸ்லிம் குற்றவாளிக்கு இந்த மண்ணில் சாத்தியமா?

Anonymous said...

எனவே, முஸ்லிம் குற்றவாளியும், இந்துக் குற்றவாளியும் இங்கே ஒரே அளவுகோல் கொண்டு அளக்கப்படுவதில்லை எனும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

ஜாகிர் உசேன் குற்றவாளியா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது என்பதே என் வாதம். அவர் குற்றவாளி என்று நிரூபணமானால் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதை நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அன்றே அவர் குறித்த அனைத்து தகவலையும் நம்பி ஒரு முடிவுக்கு வரலாமா என்பதே நம் கேள்வி.

ஏற்கெனவே, மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் காவல்துறை சொன்னது பொய் என்று ஸ்டாலின் அவர்கள் அம்பலப்படுத்தி உள்ளார். இந்துத்துவ தலைவர்கள் படுகொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன் குழுவினரே குற்றவாளிகள் என காவல்துறை சொன்னதை கலைஞரே கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் பக்ருதீனை காவல்துறையும் ஊடகங்களும் தீவிரவாதி என சொல்லிக் கொண்டிருந்த போதுதான் கலைஞர், போலீஸ் பக்ருதீன் தரப்பு நியாயத்தை கேள்வியாக முன்வைத்தார். அப்படி கேள்வி எழுப்பியதற்காக கலைஞர் தீவீரவாத ஆதரவாளர் ஆகிவிடுவாரா?

இப்போது, ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கும் ஜாகீர் உசேனுக்கும் தொடர்பில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாட்னாவில் மோடி கூட்டத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் இங்கும் வெடித்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. பாட்னா வெடிப்பில் இந்துத்துவ சக்திகளின் சதிவலையே அம்பலமானது. எனவே இதுவும் அதன் தொடர்ச்சிதான் எனும்போது சந்தேகம் யாரை நோக்கி வரவேண்டும்?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பற்றவைப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பதே மோடியின் திட்டம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் துணிந்துள்ளனர். எனவே, ஆந்திராவுக்கு மோடி வரும்போது, ஆந்திராவை கடந்துவரும் ரயிலில் குண்டு வெடிக்கிறது என்றால் சந்தேகம் முஸ்லிம் மீதா வரவேண்டும்? இந்த நேரத்தில் குண்டு வெடித்தால் அந்த லாபம் மோடிக்கா, முஸ்லிமுக்கா என்பதைக் கூடவா சிந்திக்கமாட்டீர்கள்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

தி.மு.க நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

ஆளூர் ஷாநவாஸ்

suvanappiriyan said...

திரு ரூபன்!

//Allah revealed the first verses, namely verses 16:106-10, referring to apostasy from Islam://

'ஏக இறைவனை நம்பியபின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் இறைவனின் கோபமும் கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர'

குர்ஆன் 16:106

நீங்கள் குறிப்பிடும் வசனம் இதுதான். அதாவது உண்மை தெளிவான பின்னால் அந்த நம்பிக்கையை விட்டு வெளியேறினால் இறைவன் கோபப் படுவதாக இந்த வசனம் கூறுகிறது. அதற்காக மனிதர்கள் எவரும் எவரையும் கொலை செய்ய இந்த வசனம் அனுமதிக்கவில்லை.

'இஸ்லாமிய நம்பிக்கையை விடவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன்' என்று யாராவது மிரட்டினால் அந்த நேரத்தில் தனது உயிரை காத்துக் கொள்ள உதட்டளவில் இஸ்லாத்தை மறுக்கலாம். அதனால் தவறொன்று மில்லை என்று இந்த வசனம் அறிவுறுத்துகிறது. நீங்கள் வைக்கும் வாதத்துக்கு இந்த வசனம் எதிராகவல்லவா உள்ளது.