Followers

Monday, December 15, 2014

'சாகுல் பாய்' என்று கூப்பிட்டால் நாங்கள் லூசு பயலுகளா?

சகோ சாகுல் கமீது!

//என் உறவுகளே ஒரு நிமிடம்!!!

நான் நேசிக்கிற உறவுகளில் ஒருவர் என்னிடம்....."" சகோ உங்களுக்கு தமிழின உணர்வை விட மத உணர்வு கொஞ்சம் மேலோங்கி இருப்பதை காண முடிகிறது உங்கள் பதிவுகள் மூலம் எனது மன ஓட்டம் தவறாக இருப்பின் மன்னிக்கவும் "" என் பதிவுகளை படித்த உறவுகளே.... இந்த குற்றச்சாட்டு பிழையென்றால் விருப்பம் மட்டுமே கொடுங்க. குற்றச்சாட்டு உண்மைதானென்றால் பின்னூட்டமிடுங்க. என் பதிவுகளில் உள்ள பிழையை சுட்டிக்காட்டுங்க. ஒருவேளை என்னுறவுகள் எவரேனும் என்னை மதவுணர்வு கொண்டவனென்றெண்ணினால்... நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அப்படியே சாகும்வரை இருப்பேன். யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்.//

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். அது உங்களின் விருப்பம். ஒரு தமிழனாகவும் ஒரு இஸ்லாமியனாகவும் இருக்க குர்ஆன் எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் சில தவறுகள் உங்களிடம் உள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சகோதரரே! நீங்கள் இஸ்லாமிய தாய் தந்தையருக்கு பிறந்திருந்தாலும் தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றால் உங்கள் பெயரை "ஷாஹூல் ஹமீத்" என்பதற்கு பதிலாக "சாகுல் கமீத்" என்று மாற்றி வைத்துக் கொண்டுள்ளீர்கள். ஷாஹூல் ஹமீத் என்ற பெயரே இஸ்லாமிய வட்டத்தில் தவறானது. 'அப்துல் ஹமீது' என்று தான் உங்களுக்கு உங்கள் பெற்றோர் பெயர் வைத்திருக்க வேண்டும். ஹமீது என்ற அரபி வார்த்தைக்கு 'புகழப்பட்டவன்' என்று அர்த்தம். இது இறைவனின் பல பண்புகளில் ஒன்றாக குறிக்கப்படுகிறது.

ஆனால் அந்த பெயரை திரித்து 'கமீது' என்று வைத்துள்ளதால் எந்த பொருளும் தரப்போவதில்லை. இப்பொழுது நீங்கள் செய்த மாற்றம் மொழிப்பற்றினால் அல்ல மொழி வெறியினால் எழுந்துள்ளது. தமிழிலும் அரபியிலும் அதற்கு எந்தப் பொருளும் இல்லை. மேலும் இறைவனின் பெயர்களை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி இறைவன் கூறுவதைக் கேளுங்கள்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'

குர்ஆன் 7 : 180

ஒரு மொழியில் தேவையான சொற்கள் இல்லாத போது வேறு மொழியிலிருந்து கடன் வாங்கிக் கொள்வது அந்த மொழியை மேலும் மெருகூட்டவே செய்யும். ஆங்கில மொழி அவ்வாறுதான் வளர்ந்தது. இன்று அரபு மொழியும் அவ்வாறுதான் வளர்ந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு தமிழ்ப் பற்று அதிகமிருந்தால் அன்பழன், அறிவழகன் என்று அழகிய பெயர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதனை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் இறைவனின் பண்புகளின் ஒன்றான 'ஹமீத்' என்ற பெயரை 'கமீத்' என்று திரித்துக் கூறுவது இஸ்லாமிய பார்வையில் தவறானது என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

//இப்ப சில லூசுப்பயலுக 'சாகுல் பாய்' 'சாகுல் பாய்'னு பாய் தலவாணி விக்கிறானுக. அதுக்கும் சேத்துதான் பதிவால அடிச்சுகிட்டு இருக்கோம். //

அதாவது உங்களை யாராவது 'சாகுல் பாய்' என்று கூப்பிட்டால் அவர்கள் உங்கள் பார்வையில் லூசுகள். சரிதானே!

'பாய்' என்ற உருது வார்த்தை 'சகோதரன்' என்ற பொருளைக் கொடுக்கும். தமிழில் சகோதரன், அண்ணா, தம்பி என்ற வார்த்தைகள் இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. அதனால் என்ன மாற்றத்தைக் கண்டீர்கள். ஜூனியர் விகடன் பத்திரிக்கை மீனாட்சி புர மத மாற்றத்திற்கு பிறகு அந்த மக்களை பேட்டி காண சென்றது. அங்கு நின்றிருந்த ஒரு இளைஞனிடம் 'மதம் மாறி விட்டீர்களே! உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏதும் வந்துள்ளதா?' என்று கேட்டனர்.

சரவணன் என்ற அந்த இளைஞர் கூறுகிறார் 'முன்பெல்லாம் என்னை விட சிறிய பசங்களெல்லாம் 'டேய் சரவணா' என்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் இன்று அதே ஆதிக்க சாதி இந்துக்கள் என்னை விட பெரிய வயதாக இருந்தாலும் 'ரஹீம் பாய்' என்று கூப்பிடுகின்றனர். இந்த ஒன்று போதும் எங்களுக்கு' என்று கூறினார்.

எந்த அளவு வர்ணாசிரமத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இத்தகைய வார்த்தை வந்திருக்கும். உங்களின் தாய் தந்தையர் சில தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தை ஏற்றதால் இன்று 'சாகுல் கமீது' என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருகிறீர்கள். ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் நிலையிலிருந்து சற்று சிந்தித்து பாருங்கள்.

உங்கள் தலைவர் சீமானாகட்டும், திருமாவளவனாகட்டும், கி. வீரமணியாகட்டும் எல்லோரும் மேடையில் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் எதுவும் சாத்தியப்படாது. ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று வரை இவர்களை அனுமதிக்கவில்லை, சிதம்பரத்தில் ஆறுமுகசாமியை வெளியே இழுத்து பார்பனியம் போட்டபோது ஏதும் செய்வதறியாது திகைத்து நிற்கத்தான் முடிந்தது இவர்களால். ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. இனி வருங்காலத்திலும் பார்பனியத்தை இவர்களால் இந்து மதத்தினுள் அசைத்துக் கூட பார்க்க முடியாது. இதை எல்லாம் பார்த்து வெறுத்து போய்தான் 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த மருந்து' என்று பெரியார் சொல்லி விட்டு சென்றார்.

பார்பனியத்தின் ஆணி வேரையே பிடித்து உலுக்கும் சக்தி இந்த இஸ்லாம் ஒன்றுக்குத்தான் உள்ளது. எனவே தான் இஸ்லாமியர்களை பார்த்தவுடன் மற்ற இந்துக்கள் 'பாய்' என்று ஒரு வித மரியாதையோடு ஆசையோடு அழைக்கின்றனர். எனது அலுவலகத்தில் இந்தியன், பாகிஸ்தானி முதற்கொண்டு எகிப்து, எமனி நாட்டவர் வரை என்னை 'நஜீர் பாய்' என்றுதான் அழைக்கின்றனர். ஒரு முறை எங்கள் ஊரில் சாலை மறியலில் முஸ்லிம்களை கைது செய்ய வேன் வந்தது. அப்போது காவலர் 'வண்டியில ஏறுங்க பாய்' என்று மரியாதையோடு சொன்னதைப் பார்த்தேன். அதே கான்ஸ்டபிள் தலித் குடிசைக்கு சென்றபோது 'ஏறுடா வண்டியில்....' என்று சொன்னதையும் பார்த்தேன். 'பாய்' என்ற இந்த வார்த்தைக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது.

இந்துத்வா தளத்தில் ஒருவர் 'பாய்' என்று நாம் முஸ்லிம்களுக்கு மரியாதை கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் ஒரு முஸ்லிமான உங்களிடமிருந்து இந்த கோரிக்கை வந்ததுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

'பாய்' என்ற சொல்லை மாற்றி சகோதரன் என்று கூப்பிடலாம்! எப்போது?

தலித் மக்கள் இன்றும் செருப்பை ஆதிக்க சாதி கிராமங்களில் தூக்கிச் செல்கிறார்களே அந்த நிலை மாறும் போது

சிரட்டையில் இன்றும் தேனீர் குடிக்கிறார்களே அந்த நிலை மாறும் போது...

பார்பனர்களின் எச்சில் இலையில் தோஷம் நீங்க உருளுகிறார்களே அந்த நிலை மாறும் போது...

'சமஸ்கிரதம் தேவ மொழி தமிழ் மொழி நீச மொழி' என்ற நிலை மாறி தமிழுக்கு உரிய அந்தஸ்து கிடைக்கிறதே அப்படிப்பட்ட நிலை மாறும் போது....

'நான் பிராமணன்: நீ சூத்திரன்' என்ற நிலை மாறி எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலை வருகிறதே அன்று....

உங்களோடு சேர்ந்து நானும் இந்த 'பாய்' என்ற சொல் பிரயோகத்தை விட்டு விடுகின்றேன். எனது பெயரையும் தூய தமிழல் மாற்றி வைத்துக் கொள்கிறேன்.

அது வரை அது வேற்று மொழி சொல்லாக இருந்தாலும் நிலைமை மாறும் வரை தற்போதுள்ள இந்த நிலை தொடரத்தான் செய்யும்.





1 comment:

mohamedali jinnah said...

சிறந்த விளக்கம்.அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துகள்