Followers

Sunday, December 21, 2014

சாதீய அமைப்புக்கள் தமிழக இஸ்லாமியரிடத்தில் அறவே இல்லையா?

சகோ மாணிக்க வாசகம்!

//தமிழக இஸ்லாமியர்களிடையே சாதீய அமைப்புக்கள் இல்லை என்று சொல்கிறீர்களா?//

சாதிய அமைப்புகளை முதலில் சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திலும் பிரிவுகள் உண்டு. குர்ஆன் அதனை எவ்வாறு விளக்குகிறது என்று பாருங்கள்.

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்"

- அல்குர்ஆன் 49:13

ஒரு தாய் தந்தையருக்கு பிறந்தவர்தான் உலக மக்கள் என்ற பிரகடனம் அனைத்து சாதி திமிரையும் அடக்கி விடுகிறது. சில பிரிவுகள் மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.

நபிகள் நாயகமும் தன்னை குரைஷி குலத்தை சேர்ந்தவர் என்று தனது அறிவிப்புகளில் பலமுறை சொல்லியிருக்கிறார். ஹபஷி என்ற குலமும் இருந்துள்ளது. அதே போல் ஆப்ரிக்கன், ஐரோப்பியன், ஆசியன், அமெரிக்கன் என்ற பிரிவுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மனிதர்கள் ஒருவரையொருவர் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். அதே போல் மொழி வாரியாக தமிழன், கன்னடன், தெலுங்கன், மலையாளி என்ற பிரிவுகளும் சிலரை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே. இது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். அவனது வேர் என்ன என்பதன் புரிதல் அவனுக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் நம் நாட்டில் உள்ள சாதி முறையோ முற்றிலும் மாறுபட்டது. வேதங்களே மனிதர்களின் தொழில்களுக்கேற்றவாறு பிராமிண், பஞ்சமன், ஷத்ரியன், சூத்திரன் என்று பிரித்து அதனை பிறப்பிலேயே அவனோடு இரண்டற கலக்குமாறும் செய்து விட்டது. இன்ன சாதிகள் இந்த குணாதிசியத்தைப் பெற்றிருக்கும் என்று வேறு வகைப்படுத்தியுள்ளது. இறைவனை வழிபடும் இடங்களிலும் இந்த சாதி தகுதிக்கேற்ப பார்க்கப்படுகிறது. இதற்கு மேல் இறைவனை வழிபட கோவிலுக்குள் வரக் கூடாது என்ற சட்டத்தையும் இன்று வரை பாதுகாத்து வருகிறது. நடை முறைபடுத்தியும் வருகிறது.

இஸ்லாத்திலும் இதே போன்ற பிரிவுகள் சில உண்டு. இந்துவாக இருந்து இஸ்லாமியரனாதால் பழைய வழக்கத்தின்படி சில சாதி பெயர்களை முஸ்லிம்களும் வைத்துள்ளனர்.

லெப்பை பிரிவை சேர்ந்தவர்கள் பள்ளியில் இமாமாக(தலைவராக) பணியில் உள்ளவர்.
ராவுத்தர் பிரிவினரின் முன்னோர் குதிரை பராமரிப்பு, குதிரை வாணிபம் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.
மரைக்காயர் என்று அழைக்கப்படும் பிரிவினரின் முன்னோர் கடல் வாணிபம் செய்தவர்கள்.
ஷேக் , செய்யது போன்ற பிரிவினர் அரபு வம்சாவளிகளை சேர்ந்தவர்கள்.
மாப்பிள்ளா பிரிவினர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்ட கேரளா வம்சாவளியினர்.
தக்னி என்ற பிரிவினர் உருது மொழி பேசக் கூடியவர்.

இவ்வாறு இஸ்லாத்திலும் பிரிவுகள் தமிழக முஸ்லிம்களிடம் இருந்தாலும் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காட்டப்படுவதில்லை. திருமண உறவுகளில் எந்த பிரச்னையும் இல்லை. எனது குடும்பத்தில் உருது முஸ்லிம், அரபு நாட்டு முஸ்லிம், என்று பல இனத்தவர் சம்பந்தம் வைத்து இன்று வரை சந்தோஷமாக குடும்ப வாழ்வு சென்று வருகிறது. வழிபடும் இடங்களில் இந்த பிரிவை வைத்து பேதம் கற்பிக்கப்படுவதில்லை...... என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்ட பிரிவுகள் கூட தமிழகத்தை தாண்டினால் இது போன்ற சாதி பெயர்களை பார்க்க முடியாது.

எனவே இஸ்லாமியர்களிடத்தில் காணப்படும் பிரிவுகளுக்கும் இந்து மதத்தில் காணப்படும் வர்ணாசிர சாதி அடுக்கு முறைக்கும் உள்ள வித்தியாசமானது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாகும்.

குர்ஆன் தமிழ் மொழி பெயர்பு வந்து வெகு நாட்களாகிறது. குர்ஆனின் சட்டங்கள் தான் ஒரு முஸ்லிமைக் கட்டுப்படுத்தும். அந்த குர்ஆன் முழுக்க நீங்கள் தேடினாலும் அதில் ஷியா, என்றோ, சன்னிகள் என்றோ, ராவுத்தர் என்றோ, பட்டாணி என்றோ ஒரு வார்த்தையையும் பார்க்க முடியாது. ஏனெனில் முகமது நபிக்கு அருளப்பட்ட இந்த வேதத்தில் அன்றைய சமூகத்தில் இது போன்ற எந்த பிரிவுகளும் இல்லை. அனைவரும் இஸ்லாமியர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவர்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர் இஸ்லாமியர் என்றுதான் பார்க்கப்படுவார். மேலே உள்ள எந்த பிரிவிலும் வரமாட்டார். உங்களுக்கு பரிச்சயமான ஏ ஆர் ரஹ்மனோ, யுவன் சங்கர் ராஜாவோ, நடிகை மோனிகாவோ, பெரியார் தாசனோ முஸ்லிம்களாகத்தான் அறியப்படுகின்றனர். நீங்கள் குறிப்பிட்ட எந்த பிரிவுகளிலும் அவர்கள் இல்லை. ஏனெனில் குர்ஆன் பிரிவுகளை அங்கீகரிக்கவில்லை.

அடுத்து ஒரு இனமோ, குலமோ, சாதியோ எதுவாக இருந்தாலும் அது ஒரு மனிதனை எந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு அழகிய அறிவுரையை நபிகள் நாயகம் கூறுவதையும் கேளுங்கள்.

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
ஆதாரநூல்: அஹ்மத்

No comments: