Followers

Wednesday, December 03, 2014

போபாலின் அழிவை சொல்லும் திரைப்படம்!அமெரிக்காவில் வெளியாகியுள்ள 'போபால் - எ ப்ரேயர் ஃபார் ரெய்ன்' (Bhopal: A Prayer for Rain) படம் தந்த அனுபவத்தின் பதிவு இது.

"என் அப்பா ஒரு பொறியாளர். ஆனால் என்னால் என் மகனை பள்ளியில் கூட படிக்க வைக்க முடியவில்லை. இப்போது மீண்டும் மூன்று தலைமுறைக்கு பின் தங்கி போய்விட்டோம்."

"அன்று அவர் வருவார் என்று இரவு முழுதும் மடியில் குழந்தையை வைத்து காத்திருந்தேன். அவர் வந்தார். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது குழந்தையின் கால்களில் அசைவில்லை என்று."

"என் கணவன் இறந்தாச்சு, என் குழந்தையும் என்னிடம் இப்போது இல்லை, இந்த இடுங்கிய கண்களுடன் நான் மட்டும் உயிருடன் இருக்க என்ன பாவம் செய்தேன்?"

"இவனுடைய வயது இருபத்தி ரெண்டு ஆகிறது. ஆனால் இன்னும் இவனிடம் வளர்ச்சியே இல்லை" என்கிறார் ஒரு தாய். "இங்க பாருங்க என்னோட வாக்காளர் அட்டையை" என்று அந்த மகனும் தன் வாக்காளர் அட்டையயை காட்டி, "நானும் என் நண்பர்களைப் போல் வளர்ந்திருக்க வேண்டும் என விழைகிறேன்' என்று கூறுகிறான். தாய், "இவன் பிறந்திருக்க கூடாது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை" என்கிறார்.

இருளிருந்து வெளிச்சம் பிறப்பதுண்டு. ஆனால் அந்த ஒரே இரவில் போபால் மக்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் இருளுக்கு தள்ளப்பட்டது.

8,000-க்கும் மேற்பட்ட உயிர்கள் என்கின்றன தகவல்கள். ஆனால், இன்னும் மெய்யான எண்ணிக்கை கண்டறியப்படவில்லை என்று மக்கள் கூறி வருகின்றனர். பல பெண்களின் குழந்தைகள் கருவிலேயே சிதையக்கண்டன. இருமல், மார்புவலி, ரத்த ஒழுக்கு, புற்றுநோய் இப்படி எண்ணற்ற நோய்களுக்கு மக்கள் இரையாகினர். பிறந்த பிள்ளைகளின் மூளை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது, பலர் தங்கள் பார்வையை இழந்தனர். இழப்பீடு செய்ய முடியாத சீரழிவாக போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் எரிவாயுக் கசிவு போபால் மக்களின் மனதில் ஆராத வடுவாக பதிந்து கிடக்கிறது.

1984 ஆண்டு டிசம்பர் 2. இந்த ஓர் இரவு போபால் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிப் போட்டது. எந்த ஒரு பேரழிவும் ஒரே ஒரு செயலினால் அமையப்படுவதில்லை. பல சிறிய சிறிய அலட்சிய செயல்களின் ஒட்டு மொத்த பிணைப்பே பேரழிவு என்று அறிவியல் கூறுகிறது.

இந்நிகழ்வு நடந்து முப்பது ஆண்டுகள் ஆகிய இத்தருவாயில், அந்த ஓர் இரவு நிகழ்வின் பின்புலத்தோடு சினிமாவுக்குரிய கற்பனை சிலவற்றை கதை மாந்தர்களுக்கு அளித்து, தன் மனதில் படர்ந்து கிடக்கும் கருத்துக்களை ஆணித்தரமாக மக்களுக்கு புரியும்படி உரைத்த நெஞ்சுரம் மிக்க ரவி குமார் என்ற ஒரு படைப்பாளியின் படைப்பு தான் 'போபால் - எ ப்ரேயர் ஃபார் ரெய்ன்' (Bhopal: A Prayer for Rain). | இப்படத்தின் ட்ரெய்லர் இணைப்பு - கீழே |

2010 ஆம் ஆண்டு வெளிவரவிருந்து வெவ்வேறு காரணங்களால் பின் தள்ளப்பட்டு, நம் திரையரங்குகளில் விடியலை காணக் காத்திருக்கும் இப்படத்தை திரையில் (அமெரிக்கா) பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. (இந்தியாவில் இம்மாதம் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.)

வறுமையிலிருந்து மீள்வதற்காக பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக சேர்கின்ற நாயகன், ஒற்றை மனிதனாக பத்திரிகை நடத்தி அப்பாவி மனிதர்களை அறியாமையிலிருந்து மீட்கக் பார்க்கும் பத்திரிகையாளர், வேலையில் பிழை ஏதும் நிகழ்ந்திடக் கூடாது என்று பொறுப்பாக நடந்து கொள்ளும் இன்ஜினியர், பேட்டி எடுப்பதற்காக இந்தியா வரும் பெண் பத்திரிகையாளர், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் சிந்தனையில் மட்டும் விழுந்து கிடக்கும் அமெரிக்க முதலாளி, இன்னபிற உதிரி கதாபாத்திரங்களின் கட்டமைப்பில் படத்தின் கதையம்சம் அமைந்திருக்க, இப்பேரழிவு நடப்பதற்கு முன் நடக்கின்ற நிகழ்வுகளை கோர்க்கின்ற ஊசியாக படத்தின் திரைக்கதை அமையப் பெற்றிருந்தது.

யதார்த்தமாக ஒரு திரைப்படம் பார்க்கும்போது படத்தின் நடிகர்கள், திரைக்கதை, பின்னணி இசை, இயக்கம் இதைப் போன்ற அம்சங்களை நாம் கவனிப்பதுண்டு. ஆனால், இப்படத்தில் நாம் முக்கியமாக உற்று நோக்குவது, படத்தின் மையக்கதையினையே. கதையின் பின்னணி எப்படி கூறப்பட்டிருக்கிறது? இதுவே இப்படத்தில் நாம் பொதுவாக தேடும் அம்சம்.

வருடங்கள் பல கடந்தபோதும், போபால் பேரழிவைப் பற்றி கூறுவதற்கு பெரிய பெரிய இயக்குனர்களே முன்வராதபோது நமக்கு பரிச்சயம் அற்ற ஓர் இயக்குனர் இக்கதையை எப்படி கையாள்வார் என்ற ஐயப்பாடு மனதில் இருந்தது. சர்வதேச மேடைகளில் படைக்கப்பட்ட படம் இது என்பதால் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு மறைமுகமாக வளைந்து கொடுத்திருக்குமோ என்கிற சந்தேகமும் இருந்தது. ஆனால் இவை யாவும் படம் பார்த்த பிறகு தகர்த்தெறியப்பட்டது.

போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பாதுகாப்பு மூன்றாம் தரமாக கருதப்பட்டதை இப்படம் சாடுகிறது. பேரழிவு நடக்கும் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பொறியாளர் மீதேன் ஐசோசைனேட் என்கிற விஷ வாயுவின் தாக்கத்தால் முச்சுத் திணறி இறக்கிறார். அந்த ஓர் உயிரின் இழப்பு நிறுவனத்தாலும் அன்றைய அரசாங்கத்தாலும் கண்டுக்கொள்ளப்படாமல் போகின்றது.

தவறு நிகழ்ந்தபோது அதை சரி செய்யும் உடனடி நடிவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நிறுவனத்தில் காசை மிச்சப்படுத்தும் பொருட்டு தகுதியற்ற ஊழியர்கள் சரியான பயிற்சியின்றி கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்துடன் மட்டும் யூனியன் கார்பைட் நிறுவனம் இயங்கியதாகவும் இப்படம் கடுமையாக சாடுகிறது.

இந்தியாவிற்கு வருகை தரும் யூனியன் கார்பைடின் நிறுவனராகிய வாரன் ஆண்டேர்சனை அமெரிக்க பத்திரிகையாளர் சந்திக்கும்போது "உங்கள் நிறுவனத்தில் நாற்பதாயிரம் கிலோ மீதையில் யசோ சைனைட் பயன்படுத்துகின்றீர்களே அது மிக அதிகமென்று உங்களுக்குத் தெரியாதா? அமெரிக்காவில் இவ்வளவு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதென்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்கிறார்.

"நீ ஒரு அமெரிக்க பெண் தானே? இது அமெரிக்காவல்ல, இந்தியா. இங்கு பிரச்சினை என் நிறுவனமல்ல, மலேரியா. அதை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லிகளையே நான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறேன்" என்கிற வசனம் படத்தில் வருகிறது.

நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு கோளாறுகளையும், வரம்பு மீறல்களையும் அறிந்தும், அதைக் கண்டுகொள்ளாதவாறு நிறுவனர் செயல்பட்டார் என்பதையும் இப்படம் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கர்கள் ஆராய்ச்சி செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் இந்திய உயிர்கள் எலி போல மலிவாக விற்கப்படுவதையும், அத்தனை உயிர்களின் இழப்பினை வர்த்தக இழப்பாக மட்டும் கண்ட வாரன் ஆண்டேர்சனின் மனப்பாட்டையும், உயிர்களின் இழப்பிற்கு மன்னிப்பு கூட கேட்க மறுத்த அன்றைய அரசாங்கத்தையும், யூனியன் கார்பைடு நிறுவனத்தையும் இப்படம் கடுமையாக சாடுகிறது.

எந்த ஒரு நிறுவனம் இயங்குகின்றபோதும் கோளாறு நடப்பதற்கான சாத்தியம் என்ன என்பதையும், அப்படி ஒரு பிரச்சினை என்று வரும் போது உயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் அப்போது என்ன எடுக்கப் பட்டதென்றும் இயக்குனர் கேட்கிறார்.

இந்நிகழ்விற்கு அன்றைய அரசாங்கமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும், பொருள் ஈட்டும் பொருட்டில் இந்திய மக்கள் சுய பாதுகாப்பில் அலட்சியம் காட்டுகின்றனர் என்பதையும் இப்படம் வன்மையாக பதிவு செய்துள்ளது.

இத்தனை தைரியமாக ஒரு பேரழிவின் பின்புலத்தை இப்படத்தில் வைத்து, தான் உணர்ந்த நிகழ்வுகளை இணைத்து, அதை வளைந்து கொடுக்காமல் தான் நினைத்ததை நினைத்தவாறே வெளிப்படுத்திய விதத்தில் இயக்குனர் ரவி குமார் சிறப்பு பாராட்டு பெறுகிறார்.

இன்று வரை போபாலில் நிலத்தடி நீரில் நச்சுக் கழிவுகள் கலந்துள்ளதையும் கான்சர் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும் மக்கள் வேறு வழியின்றி அந்நீரையே அருந்தி வருவதையும் இயக்குனர் பதிவு செய்துள்ளார்.

திரைப்படம் முடிந்தபின்னும் நம் மனதில் ஏற்படுத்தும் நீடித்த தாக்கத்தை வைத்தே அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

இத்தனை பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் நம் தேசத்தில் இருந்தும் இன்று வரை போபாலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிப்பது முழுமை பெறாமல் இருக்கின்றதே என்கிற கவலையும் கோபமும் கொள்ளச் செய்கிறது இப்படம்.

போபால் நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஜீவன்களுக்கு என்ன பதில்?

தீராத ரணமாய் மனதை இருள் அப்பிக் கொள்கிறது – போபால் நிகழ்வின் தாக்கத்தைப் போல.

- ஹரி, சினிமா ஆர்வலர். தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com

இணைப்புகள்:

போபால் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/APrayerForRain

நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
03-12-2014

No comments: