Followers

Sunday, December 14, 2014

ஜோதிடத்தை நம்பி கணவனை கொன்ற மனைவி!பெரியபாளையம் கன்னிகைப் பேரை சேர்ந்தவர் கதிர்வேல் (70). அரிசி மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (60). மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கதிர்வேல் தனது பேத்தியிடமும் மருமகளிடமும் பாசத்துடன் இருந்தார். இது விஜயலட்சுமிக்கு பிடிக்க வில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜோசியம் பார்க்கச் சென்றார். அப்போது ஜோசியர், உன் கணவர் உன்னை விட்டு சென்று விடுவார். அவருக்கு இன்னொரு மனைவி பாக்கியம் உள்ளது’ என்று கூறினாராம்.

இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 5 மணிக்கு எழுந்த விஜயலட்சுமி அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டு இருந்த தனது கணவரை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஜோசியம் போன்ற மூட நம்பிக்கையால் இப்படி ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரியபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-12-2014

உங்கள் ராசி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில் உங்கள் ராசி இல்லை. எப்படி? உங்கள் பிறப்பின் போது சூரியன் எந்த ராசி சின்னத்தில் சஞ்சரிக்கிறானோ அந்த சின்னத்தின் இயல்புகளைப் பெறுகிறான் என்பது ஜோதிட நம்பிக்கை.

விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து சந்திரனும் இதர கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த விண்வெளிப் பாதையை 'சோடியாக்' என்றழைக்கின்றனர். இந்த பாதையைக் கடக்க சூரியனுக்கு ஓர் ஆண்டு காலம் பிடிக்கிறது. இதைப் பழங்கால ஜோதிடர்கள் 12 பிரிவுகளாக்கினர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு மாதமாகும். மார்ச் 21ந்தேதி வசந்த காலம் ஆரம்பம் ஆகும் போது மேஷத்தில் சூரியன் சஞ்சரிப்பான். இதை மேலை நாட்டில் 'ஏரிஸ்' என்பர். இந்த ஆடு போன்ற சின்னத்தில் சூரியன் இருக்கும் போது பிறந்த நபர் ஆட்டுக்குரிய குணாதிசியங்களுடன் இருப்பார் என்பதும் ஜோதிடக் கோட்பாடு. இந்த ஆட்டைப் போலவே சூரியன் சஞ்சரிக்கும் ஒவ்வொரு ராசிக்கும் அந்தந்த நட்சத்திரங்கள் ஏறத்தாழ பிரதிபலிக்கும் ஒரு உருவத்தை சின்னமாக அளித்திருக்கின்றனர். இப்படி அளிக்கப்பட்ட சின்னங்கள்தான் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற ராசிகள்.

இப்படி பல்வேறு சின்னங்களில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் இன்ன இன்ன குணாதிசியங்களுடன் இருப்பர் என்று வரையறுத்திருக்கின்றனர். இந்த விண்வெளி கிரகங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வேகமும் சுறுசுறுப்பும் இப்போது இல்லை. தங்கள் சுழற்ச்சியில் வேகம் குறைந்து சற்று சோம்பேறியாகி விட்டன. புவியின் சுழற்ச்சியில் மந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். சூரியனும் தன் பழைய வேகத்திலிருந்து 'டல்' லாகவே சுற்றுகிறதாம் இப்போது சூரியன் தன் சுழற்ச்சியில் ஒரு மாத காலம் பின் தங்கி இருக்கிறதாம். ஆக முந்தய கணக்குப்படி மார்ச் 21 ஆம் தேதி வசந்தகாலம் ஆரம்பிக்கும்போது சூரியன் இப்போது ஆட்டில்(மேஷத்தில்) இருக்க மாட்டான். அதனுடைய முந்தய ராசியான மீனில்(மீனத்தில்) இருப்பான்.

சிம்மத்தில் பிறந்த ஒருவன் சிங்கம் போன்ற வீரத்துடன் இருப்பான் என்பர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு 'லியோ' என்று சொல்லப்படும் சிம்ம ராசி. இப்போது 'சிம்மம்' என்று நாம் நினைப்பது உண்மையில் 'நண்டு' என்கிறார் பால் கூடற்க் என்ற பிரபல பிரெஞ்சு வானியல் நிபுணர். 'நண்டு' என்பது சிம்மத்திற்கு முந்தய ராசியான கடகத்தைக் குறிக்கும். எனவே இன்றைய கிரக சஞ்சாரப்படி நமது ராசிகளே அடியோடு மாறி விடுகின்றன. இது போன்ற ஜோதிடத்தில் படித்தவர்களும் வீழ்ந்து தங்களின் வாழ்க்கையை வீணாக்குவதுதான் விந்தை.

இனி இஸ்லாம் இது பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

முகமது நபி கூறுகிறார், 'எவன் ஜோதிடன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முகம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான்.

ஆதாரம்: அஹமத்

பத்தரிக்கைகளில் வரும் ராசி பலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையை சேர்ந்ததுதான். அதிலுள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் அமைந்த வான சாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இறை மறுப்பாளன் ஆகிறான். இதைப்பற்றி முகமது நபி கூறும் போது,

'இறைவனின் அருளாலும், அவனுடைய கருணையாலும்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறைவனை நம்பியவர் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறை நிராகரிப்பாளரும், நட்சத்திரத்தையே வணங்கியவராவார்' என்றார்.

ஆதாரம்: புகாரி

'யார் தாயத்தைக் கட்டி தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்நூல்:அஹ்மத்


No comments: