
எனது சிறிய தந்தையார் (அதாவது எனது தாயாரின் உடன் பிறந்த சகோதரியின் கணவன்) ஹாஜி ஏ.தாஜூதீன் அவர்கள் தனது தந்தை ஜனாப் அப்துல் ஹமீது அவர்களின் பெயரால் எங்கள் ஊர் கிரசண்ட் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்துள்ள கட்டிடத்தைத்தான் நாம் பார்க்கிறோம்.
நபி அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்””.
நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை
ஆதாரம் : முஸ்லிம். (3:1631), அபூதாவூத் (3:2880), ஸுனன் அத்திர்மிதி (3:1376), ஸுனன் அந்நஸாயீ (6:3549), முஸ்னத் அஹ்மத் (2:316)
இந்த நபி மொழிதான் எனது சிறிய தந்தையாரால் இங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மூலம் இனி வரும் காலமெல்லாம் எத்தனை மக்கள் கல்வி கற்கிறார்களோ அதன் நன்மைகள் அனைத்தும் எனது சிறிய தந்தையின் தகப்பனாருக்கு சென்று கொண்டே இருக்கும். இந்த வழிமுறையை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? கோடீஸ்வரர்களும் செல்வந்தர்களும் நிறைந்த நமது இஸ்லாமிய ஜமாத்துகளில் உள்ள எத்தனை பேர் தனது பெற்றோருக்காக இது போன்ற நன்மையான செயல்களை செய்ய முன் வருகிறோம். அறியாத மக்களுக்கு இந்த செய்தியை எத்தனை பேர் எத்தி வைத்திருக்கிறோம்.
தமிழக கிராமங்களில் உள்ள அனைத்து செல்வந்தர்களும் இது போன்ற பயனுள்ள செலவினங்களை செய்தால் மிகப் பெரிய புரட்சியை நமது கிராமங்களில் ஏற்படுத்தி விட முடியாதா?
ஆனால் பெரும்பாலும் நடப்பதென்ன? இறந்தவுடன் பெரிய சட்டியை வீட்டில் வைத்து நெய் மணக்க நெய் சோறு ஆக்கி சந்தோஷமாக சாப்பிடுகிறோம். ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இறந்த வீட்டில் சாப்பாடு சமைக்காமல் பக்கத்து வீட்டிலிருந்து சாப்பாட்டை வரவழைத்து 'சோகமாக இருக்கும் இறந்த அந்த குடும்பத்துக்கு இந்த உணவை கொண்டு செல்லுங்கள்' என்று கட்டளையிட்டதை பார்க்கிறோம். ஆனால் பெரும்பாலும் நாம் செய்வதோ நபி மொழிக்கு மாற்றமாக...
அடுத்து 3 ஆம் நாள், 7 ஆம் நாள், 40 ஆம் நாள், ஒரு வருடம் என்று கணக்கு வைத்து பணக்காரர்களையும் உறவினர்களையும் அழைத்து இறந்தவர் பெயரால் சாப்பாடு ஆக்கி உண்டு கழிக்கிறோம். இந்த பழக்கமானது மற்ற மதத்திலிருந்து நம்மவர்கள் கடன் வாங்கிக் கொண்ட பழக்கம். இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய பழக்கம்.
எனவே மாற்று மத கலாசாரங்களை ஒழித்து இஸ்லாம் நமக்கு காட்டித் தந்த நிலையான தர்மங்களான குளம் அல்லது கிணறு வெட்டுதல்: கல்வி சாலை அமைத்தல்: நூலகங்கள் அமைத்தல்: போன்ற நிலையான தர்மங்களை நமது சக்திக்கு ஏற்றவாறு நமது பெற்றோருக்கு செய்து அவர்களின் மறு உலக வாழ்வை சிறப்பாக்க முயற்சிப்போம்.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
-குறள் எண்:70
சிறந்த கல்வியை தன் மகனுக்கு கொடுத்த ஒரு தந்தைக்கு அந்த மகன் பிரதிபலனாக செய்யக் கூடியது என்னவென்றால்.....
'இவ்வளவு நல்லொழுக்கமுடைய ஒரு பிள்ளையை பெறுவதற்கு என்ன தவம் இறைவனிடம் செய்தாரோ இவரது தந்தை' என்று உலக மக்கள் வியக்கும் வண்ணம் தனது வாழ்வை சிறப்புற அமைத்துக் கொள்கிறாரே அத்தகைய மனிதனைப் போல் தனது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
1 comment:
திரு உலகரசன்!
//முதலில் இஸ்லாமியர்கள் எதற்கு அரபியில் பெயர் வைக்கவேண்டும்?//
இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. குர்ஆனோ நபி மொழிகளோ அவ்வாறு எங்களுக்கு கட்டளையிடவில்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.
உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.
இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம்.
Post a Comment