Followers

Wednesday, December 10, 2014

நோபல் பரிசு பெற்ற மலாலாவின் உணர்ச்சி மிகு உரை!



நார்வே நாட்டின் ஆஸ்லோவில் இன்று அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தான் பெண் யூசப்சாய் மலாலா 'இப்போதே சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.. இப்போதே.. என்று தனது உரையில் தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில் கூறியதின் சுருக்கம்::

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்......

இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு வாழ்த்துக்கள் கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலாலா என்றால் ’துயரம் தோய்ந்த’ என்று பொருள், ஆனால் மகிழ்ச்சிகரமான ஒரு பெண்ணாக இன்று நான் இருக்கிறேன். எனது பெற்றோரின் நிபந்தனையற்ற அன்புக்கு நான் நன்றி செலுத்துகிறேன். குறிப்பாக என் தந்தை எனது இறகுகளை ஒடுக்காமல் என்னை பறக்க அனுமதித்ததற்கு நன்றியைப் பதிவு செய்துகொள்கிறேன். எனது பொறுமைக்கும், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்பதற்கும் தூண்டுகோலாக இருக்கும் என் தாயாருக்கும் நன்றி. இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு தெளிவாக விளக்கிய எனது தாயாருக்கு என் நன்றி. இதுதான் இஸ்லாமின் உண்மையான செய்தி என்று நாங்கள் பலமாக நம்புகிறோம்.

சகோதர சகோதரிகளே, பலமான நாடுகள் என்று நாம் அழைக்கும் நாடுகள் ஏன் போர்களை உருவாக்குவதில் பலமாக உள்ளன, அமைதியை உருவாக்குவதில் பலவீனமாக உள்ளன? ஏன் துப்பாக்கிகள் அளிப்பது எளிதாக இருக்கிறது, புத்தகங்கள் அளிப்பது கடினமாக இருக்கிறது? போருக்கான டாங்கிகளை உருவாக்குவது சுலபமாக உள்ளது பள்ளிக்கூடங்கள் கட்டுவது கடினமாக உள்ளது? இப்படிப்பட்ட கேள்விகளை பெரியோர்கள் என்று கூறப்படுவர்களுக்குப் புரியும், ஆனால் சிறுவர்களான நமக்கு புரியாது.

நாம் நவீன உலகில் வாழ்கிறோம், இந்த 21ஆம் நூற்றாண்டில் நம்மால் முடியாதது எதுவுமல்ல என்று நாம் நம்புகிறோம். செவ்வாய் கிரகத்திற்கு சென்று விட்டோம், ஏற்கெனவே சந்திர மண்டலத்தை அடைந்து விட்டோம், பின்பு அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி என்பதை மட்டும் சாதிக்க முடியாதா என்ன? இதுவும் உண்மையாகும்.

கல்வி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நம் தலைவர்களுக்கு கூற வேண்டிய நேரம் அல்ல இது. அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும். அவர்களது குழந்தைகள் நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். இப்போது அனைவருக்கும் அத்தகையது தகைய வேண்டும், நடவடிக்கை எடுங்கள் என்/று அவர்களை வலியுறுத்துவோம். உலகத் தலைவர்களே ஒன்று கூடுங்கள், கல்வியை முன்னுரிமையாக்குங்கள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு உலகத் தலைவர்கள் சில இலக்குகளை நிர்ணயித்தனர். இதனையடுத்து வந்த ஆண்டுகளில் கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் முதன்மைக் கல்வி மட்டுமே விரிவடைந்தது. முன்னேற்றம் அனைவரையும் சென்றடையவில்லை.

நமது குழந்தைகளின் கல்விக்காக நாம் போராடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய லட்சியம். நாம் அனைவரும் இதில் ஒன்றுபட்டால் இதனை சாதிக்க முடியும்.

ஏற்கெனவே இதனை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து சென்று கொண்டிருக்கிறோம், ஆனால் தாண்டிச்செல்ல இப்போது நேரம் வந்துள்ளது.

மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, ஆங் சாங் சூசி ஆகிய பெரியவர்கள் பெரிய மாற்றங்களை சாதித்துள்ளனர். அவர்கள் இந்த மேடையில் இருந்திருக்கிறார்கள். கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் நானும் எடுத்துள்ள வழிமுறைகள் மாற்றங்களைக் கொண்டுவரும். நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

என்னுடைய கிராமத்தில் இன்னமும் பெண்களுக்கு உயர்கல்வி இல்லை. நான் இதனை மாற்ற விரும்புகிறேன், இதன் மூலம் அவர்கள் கனவுகளை நிறைவேற்ற விரும்புகிறேன்.

இங்குதான் நான் தொடங்குகிறேன், ஆனால் இதோடு மட்டும் நிறுத்திவிடப்போவதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் இருப்பதை பார்க்கும் வரை நான் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நான் தாக்கப்பட்ட பிறகு இதில் மேலும் பலமானவளாகிவிட்டேன். ஏனெனில் யாரும் என்னை தடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். இப்போது நாம் லட்சக்கணக்கானவர்கள் ஆகிவிட்டோம், ஒருவரும் நம்மை தடுத்து விட முடியாது.

எனது சொந்த ஊரான ஸ்வாட் இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகிய நகரம். கல்வி பயில வேண்டும் என்ற தாகத்தால் கல்விச் சாலைகளில் ஆனந்தமாக சுற்றித் திரிந்தோம். ஸ்வாட் நகரம் சுற்றுலாவுக்கு பிரசித்திப் பெற்றது. திடீரென்று ஒருநாள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. 400 பள்ளிக் கூடங்கள் நிர்மூலமாயின. எங்களின் கனவுகள் தகர்ந்தது. எங்கும் பிரச்னை. பெண்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர். எனது உலகம் தீவிரவாதிகளால் மாற்றப்பட்டது. எனக்கு முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அமைதியாக வீட்டில் முடங்கி விடுவது. இரண்டாவது அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பது. நான் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தேன். இன்று உங்கள் முன் நிற்கிறேன்.

(பயங்கர கை தட்டல்)

என்னுடைய மிகச்சிறந்த பள்ளி தோழிகளில் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் தைரியமானவர். ஆனால் அவரது மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு வெறும் கனவாகவே முடிந்தது. 12 வயதில் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். உடனே குழந்தையும் பிறந்தது. அவரே ஒரு 14 வயது குழந்தை ஆனால் அவருக்கு ஒரு குழந்தை...அவர் சிறந்த மருத்துவராகியிருப்பார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவரால் முடியவில்லை, காரணம் அவர் ஒரு பெண், அவரது உடைந்த கனவுதான் எனது நோபல் பரிசு தொகையை மலாலா நிதியத்திற்கு அளிக்கச் செய்துள்ளது.

இதன் முதல் தொகை எனது இருதயம் எங்கு உள்ளதோ அங்குதான் செல்ல வேண்டும். அதாவது பாகிஸ்தானில் கல்விச்சாலைகளைக் கட்ட வேண்டும், குறிப்பாக எனது சொந்த ஊரான ஸ்வாட் மற்றும் சங்லாவில் கல்விசாலைகள் கட்டப்பட வேண்டும்.

இதை எல்லாம் எடுத்துச் சொன்னதற்காக சிலரால் நான் சுடப்பட்டேன். என்னை சுட்டவர்கள் அதற்கு இஸ்லாத்தையும் காரணமாக காட்டுகின்றனர். இஸ்லாம் அப்பாவி பொது மக்களை சுடச் சொல்கிறதா? கல்வி கற்கச் செல்லும் சிறுமிகளை சுடச் சொல்கிறதா? குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை விளங்கித்தான் அவர்கள் இந்த அராஜகத்தை நிகழ்த்துகிறார்களா?

'ஒரு மனிதனை அநியாயமாகக் கொல்வது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் கொல்வதற்கு ஒப்பாகும்' என்ற குர்ஆன் வசனத்தை தாலிபான்கள் பார்க்கவில்லையா? அதனைப் பற்றிய விளக்கம் அவர்களுக்கு கிடைக்கவில்லையா?

புனித குரானின் முதல் இரண்டு அத்தியாயத்திலிருந்து நான் கற்றுக் கொண்டது இதைத்தான், அதில் வரும் ’இக்ரா’(Iqra) என்ற சொல், இதன் பொருள் படி அல்லது வாசி. படிப்பதற்கு இறைவன் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றால் அதனை தடுக்க இவர்கள் யார்? எனவே, நான் கடந்த ஆண்டு ஐ.நா.வில் கூறியது போல், ‘ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா போதும் உலகை மாற்ற’.

இன்று பாதி உலகம் விரைவு கதியில் முன்னேற்றம் அடையும் அதே தருணத்தில், பல நாடுகளில் கோடிக்கணக்கானோர் பசி, பட்டினி, அநீதீ என்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இன்றும் பல அப்பாவி மக்கள் போரினால் உயிரிழந்து வருகின்றனர். சிரியா, காஸா, இராக்கில் இன்னும் குடும்பங்கள் அகதிகளாக மாறிவருகின்றன. நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் இன்னமும் பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் அப்பாவி மக்கள் பலர் தற்கொலை தாக்குதல்களில் பலியாகிவருகின்றனர்.

இன்று நான் ஒரு பெண்ணாக தெரியலாம். என்னுடைய குரல் தனித்த குரல் அல்ல. நான் பலவாகவுள்ளேன்.

ஆகவே நாம் பணியாற்றுவோம், காத்திருக்கத் தேவையில்லை.

1 comment:

mona said...

salam