Followers

Wednesday, August 27, 2014

மருத்துவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தானா?



-----------------------------------------------------------

மருத்துவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தானா?

விஜய் டிவி கோபிநாத்தின் நீயா நானாவில் மருத்துவ துறை சம்பந்தமாக விவாதம் வந்தவுடன் இணையத்திலும் அதன் தாக்கம் நிறைய எதிரொலிக்கிறது. எனக்கும் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதனையும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது இரண்டாவது மகன் 8 மாதம் வயிற்றில் இருந்த சமயம். எங்கள் ஊரில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவ பெண்மணியிடம் எனது மனைவி காட்டி வந்தார். முதல் மகனும் இந்த மருத்துவரிடமே பிறந்தான். இரண்டாவது மகனுக்கு முதல் மாதத்திலிருந்தே எங்கள் ஊர் மருத்துவரே வைத்தியம் பார்த்து வந்தார். 8 மாதம் ஆனவுடன் வயிற்றில் ஏதோ வலி வருவது போல் தெரிந்திருக்கிறது. இதனை மருத்துவரிடம் எனது மனைவியும் எனது தாயாரும் சொல்லியிருக்கிறார்கள். 'இங்கு வசதிகள் இல்லை. தஞ்சாவூரில் வேண்டுமானால் சென்று ஸ்கேன் போட்டு பாருங்கள்' என்று சொல்ல ஒரு வாரம் கழித்து தஞ்சைக்கு சென்றுள்ளார்கள். அங்கு பிரசவத்துக்கு பெயர் பெற்ற ஒரு பிரபலமான பெண் வைத்தியரிடம் காண்பிக்க சென்றுள்ளனர். எனது சின்னம்மா முதற்கொண்டு எனது சொந்தங்கள் பலருக்கும் இவர்தான் பிள்ளை பேறு பார்த்திருக்கிறார். எனது குடும்பத்துக்கு மிகவும் பரிச்சயமான மருத்துவர் இவர். எனது மனைவிக்கு ஸ்கேன் போட்டு பார்த்திருக்கிறார். உடன் அவசரமாக 'குழந்தை ஆபத்தான கட்டத்தில் உள்ளது. உடன் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க வேண்டும்' என்று சொல்லி விட்டார். எனது தாயாருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்னோடு அலைபேசியில் நடந்த விபரங்களை சொன்னார். நானும்'மருத்துவருக்கு தெரியும். எனவே அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்' என்று சொன்னேன்.

மறுநாளே எனது மனைவிக்கு ஆபரேஷன் மூலம் எனது இரண்டாவது மகன் பிறந்தான். தாயும் சேயும் ஒரு வாரம் கழித்து தஞ்சையிலிருந்து வீட்டுக்கு திரும்பினர். அதன் பிறகு 'காய்ச்சல், சளி போன்ற பிள்ளையின் சிறு சிறு தொந்தரவுகளுக்கு தஞ்சை செல்ல வேண்டாம். நமது கிராமத்தில் உள்ள மருத்துவரிடமே காட்டுவோம்' என்று சொல்லி ஒரு வாரம் கழித்து எங்கள் ஊரில் உள்ள பெண் டாக்டரிடம் எனது மனைவி குழந்தையை காட்ட அழைத்து சென்றுள்ளார். டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் அமர்ந்திருக்கிறார். எனது மனைவி வரிசையில் அமர்ந்திருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த மருத்துவர் தனது செவிலிய பெண்ணிடம் 'அவருக்கு நான் பார்க்க மாட்டேன். தஞ்சாவூரிலேயே சென்று காட்டிக் கொள்ளச் சொல்' என்று சொல்லியனுப்பியுள்ளார். எனது மனைவிக்கோ பயங்கர ஆத்திரம். அதோடு வேறு மருத்துவரிடம் காட்ட ஆரம்பித்தார்.

மருத்துவர் இவ்வாறு திருப்பி அனுப்பிய விபரம் எனக்குத் தெரிந்தவுடன் எனக்கும் கோபம் உச்சத்துக்கு சென்றது. நேராக அந்த நிமிடமே அந்த மருத்துவரின் மருத்துவ மனைக்கு சென்றேன்.

'என்ன டாக்டர்? எப்படி இருக்கீங்க'

'நல்லாயிருக்கேன். நீங்க சௌரியமா? உட்காருங்க! என்ன உடம்புக்கு?'

'நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க செய்தது நியாயமா?'

'என்ன சொல்றீங்க..... புரியல'

'என் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று என் மனைவியை திருப்பி அனுப்பினீர்களாமே'

'ஆமாம்!'

'ஒரு மருத்துவர் செய்யக் கூடிய காரியமா இது?'

'உங்கள் மனைவியும் உங்கள் தாயாரும் செய்தது மட்டும் சரியா? கடந்த எட்டு மாதமாக நான் உங்கள் மனைவியின் உடம்பை கவனித்து வருகிறேன். ஒன்பதாவது மாதம் திடீரென்று தஞ்சாவூரில் சென்று குழந்தை பெற்றுக் கொண்டால் எனக்கு கோபம் வராதா?'

'இதுதான் காரணமா?'

'ஆம். இவ்வளவு பெரிய மருத்துவ மனையை கட்டிப் போட்டு இத்தனை செவிலியர்களுக்கு சம்பளம் கொடுத்து இந்த கிராமத்தில் வைத்துள்ள எனக்கு நீங்கள்தானே ஆதரவு தர வேண்டும்?'

'நீங்கள் சொல்லித்தானே அவர்கள் தஞ்சாவூர் சென்றார்கள்?'

'நான் சொன்னது ஸ்கேன் போட்டு பார்க்க மட்டுமே! பிரசவம் பார்த்துக் கொள்ள அல்ல'

'உங்களைப் பொன்ற மருத்துவர்தானே அவரும். இப்பொழுது குழந்தையை எடுக்கவில்லை என்றால் தாயுக்கும் சேயுக்கும் ஆபத்து என்று சொல்லும் போது அவர்கள் என்ன செய்வார்கள்'

'அந்த மருத்துவர் பணம் பண்ணுவதற்காக பொய் சொல்லியிருக்கிறார். குழந்தை நல்லமுறையில்தான் இருந்தது. ஸ்கேன் பார்க்க வேறு இடங்களுக்கு சென்றிருக்க வேண்டியதுதானே'

'அந்த மருத்துவரைப் போலவே நீங்களும் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்துப் பேசுகிறீர்கள். இது நல்லதல்ல'

பேச்சு முற்றுவதைப் பார்த்தவுடன் நோயாளிகளும் மற்றவர்களும் என்னை சமாதானப்படுத்தி வெளியில் கொண்டு வந்தனர். ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்தால் 15000, 20000, 30000 என்று ஆட்களின் வசதி வாய்ப்பை வைத்து கறந்து விடுவர். அது நஷ்டமாகி விட்டதே என்ற ஆதங்கம்தான் இந்த பெண்மணிக்கு. மருத்துவர்களின் மேல் இருந்த ஒரு நல்ல அபிப்ராயம் இறங்கத் தொடங்கியது அன்றுதான். அந்த தஞ்சை பெண் மருத்துவராகட்டும், எங்கள் கிராமத்தில் உள்ள இந்த பெண் மருத்துவராகட்டும் இந்த இருவருக்குமே பணத்தின் மீதுதான் குறி. மிகச் சிறந்த நல்ல மருத்துவர்கள் ஏழைகளுக்கு பணம் வாங்காமலேயே மருத்துவம் பார்க்கும் எத்தனையோ பேரையும் நான் பார்த்துள்ளேன். இப்படியும் சில மருத்துவர்கள் நம்மோடு இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களும் மனிதர்கள்தானே! மனிதனுக்கு உள்ள ஆசா பாசங்கள், பலஹீனங்கள் எல்லாம் அமையப் பெற்ற சாதாரண மனிதர்கள் தானே இவர்களும் என்று மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் உண்மையான மருத்துவன் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 50 லட்சம் 60 லட்சம் என்று எம்பிபிஎஸ் சீட்டுக்கு அரசாங்கமே ஏலம் போடும் போது இவர்களை நொந்து கொண்டும் பிரயோஜனமில்லை. தவறு அரசாங்கத்திடமிருக்கிறது. இந்த நிலை இனியாவது மாற ஆட்சியாளர்கள் முயற்சிப்பார்களாக!

2 comments:

ஹுஸைனம்மா said...

”நீங்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கணும்”

- இப்படி பதில் வரலாம். :-)

eepojed said...

இன்று கோபிநாத்தை திட்டி தீர்ப்பவர்கள் எல்லோருமே மருத்துவ துறையின் வியாபாரிகள்தான்.