Followers

Monday, August 11, 2014

வீர சிவாஜி - வரலாற்றில் விரிவாகப் பேசப்படுபவன்!

வீர சிவாஜி - வரலாற்றில் விரிவாகப் பேசப்படுபவன்!

படைபல வென்று பட்டம் சூட்டிக் கொள்ள அவன் பட்டபாடு என்ன என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இன்று சிவசேனை என்று பெயர் சூட்டிக் கொண்டு, முஸ்லிம் மக்களை முற்றாக ஒழித்துக் கட்டுவது என்று ஓங்காரக் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கிறார்களே - இதன் பின்னணி என்ன? எத்தனை பேருக்குத் தெரியும்?


அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நாடகம் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - நாடகத்தைப் பார்த்தவர்கள் அறிவார்கள். அதற்கு முன்னால் ஆர்க்காடு ஏ. இராமசாமி முதலியார் அவர்களின் எழுத்தோவியங்களைப் படித்த வர்கள் அறிவார்கள். (நீதிக்கட்சியின் ஆங்கில நாளேடான ஜஸ்டீஸ் ஏட்டில்)
வீரவாளைச் சுழற்றி தன்னை எதிர்த்தவர்களை யெல்லாம் வீழ்த்தி மராட்டிய அரசனாக மணி முடி தரிக்க முயன்றபோது எத்தனை எத்தனைத் தடைகள் எதிர்ப்புகள்!

அவன் பிறப்பால் சூத்திரனாம் - இந்து வர்ணாசிரம தர்மப்படி சூத்திரன் ஒருவன் அரசனாக முடியுமா? ஆகத்தான் ஆசைப்பட முடியுமா? சத்திரியன் ஒருவன் தானே முடிசூட்டிக் கொள்ள முடியும்?


ஆனாலும், சிவாஜி முடி சூட்டிக் கொண்டான் - எப்படி? தன்னைச் சுற்றியுள்ள வர்ணாசிரம வெறியர் களாகிய பார்ப்பனர்களை வெட்டி வீழ்த்தி - அவர்களின் முதுகுகளின்மீது ஏறி நின்றா பட்டம் சூட்டிக் கொண்டான்? அவ்வளவு விவேகம் உள்ளவனாக அவனால் நடக்க முடியவில்லை - இந்த இடத்தில் அவனுக்கு விவேகமும் இருந்திருந்தால் வாள் முனையில் அந்த வன்கணார்களைப் பணிய வைத்திருக்க முடியும்.


ஆனாலும், அவாளின், தாள் பணிந்துதான்; அரசனாக முடிசூட்டிக் கொள்ள முடிந்தது. அதற்காக காகப்பட்டன் என்ற ஒரு பார்ப்பன வேத விற்பன்னன் தேவைப்பட்டான் - சிவாஜி சத்திரியன் தான் என்று முத்திரை குத்துவதற்கு; அவன்தான் தகுதி உடையவனாம்; அதற்காக அந்தக் கால கட்டத்திலேயே பெருந் தொகை அவனுக்கு இலஞ்சமாகக் கொட்டி அழப்பட்டது. முடி சூட்டு விழாவுக்காக நான்கு மாதங்கள் முன்னேற் பாடாம்! ஆயிரக்கணக்கான பார்ப்பனப் பதர்கள் குந்தி உண்டு, மராட்டிய அரசின் கருவூலத்தையே காலி செய்தார்கள்.




தன் படை வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கக்கூட அரசன் சிவாஜியிடம் பணம் இல்லை. விளைவு கொள்ளை யடிக்கப் புறப்பட்டான். அந்தக் கொலு மண்டபத்து வீரன் சிவாஜியைப் பற்றி இப்படி ஏராளமான தகவல்கள் உண்டு.


கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தும் கொடிய பார்ப்பன விரியன்களின் ஆசைப்பை நிரம்பவில்லை. டச்சு ஆவணங்கள் என்ன சொல்லுகின்றன?


இவ்வளவுப் பொருட்களாலும் பார்ப்பனர்களின் பேராசையைத் தணிக்க முடியவில்லை. கற்றறிந்த இரண்டு பார்ப்பனர்கள் சிவாஜி, தன் படையெடுப்பின்போது நகரங்களைக் கொளுத்தியுள்ளான். அந்த நெருப்பில் பார்ப்பனரும், பசு, மாடுகளும், பெண்களும், குழந்தை களும் இறந்து போனார்கள் என்று சுட்டிக் காட்டிச் சொன்னார்கள். ஒரு நல்ல விலை கொடுத்தால் சிவாஜியை அந்தப் பாவத்திலிருந்து விடுவித்துவிட முடியும் என்றார்கள். மனச்சான்று உறுத்தியதால் அரசன், போர் நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்டவர்களைத் தேடி அழைத்து வந்து அவர்தம் இழப்பிற்காகவும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்து விடுவதென்று முடிவு செய்தான். ஆனால் தூய்மைப்படுத்தும் சடங்கின் நோக்கம் அதுவல்ல. (கரிஞ்சா மாவட்டத்தைச் சேர்ந்த) சூரத் நகரைச் சூறையாடியபோது இறந்து போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக கொங்காணத்தையும் தேஷ் பகுதியையும் சேர்ந்த பார்ப்பனரின் பைகளில் பணத்தை நிரப்பி விட்டால் - அதுவே போதுமானது என்று அவனிடம் சொன்னார்கள். இந்தப் பாவ மன்னிப்புக்காகப் பார்ப்பனர் கேட்ட விலை முறையாகக் கொடுக்கப்பட்டது.


மாவீரன் சிவாஜி முடி சூட்டு விழா இவ்வாறுதான் நடந்தது; அந்த விழாவில் பார்ப்பனர்கள் இப்படித்தான் நடந்து கொண்டார்கள். முடிசூட்டு விழாவிற்கான மொத்த செலவு ரூபாய் நூறு கோடிக்கு மேல் இருக்கும்.


இதுபோன்ற எண்ணற்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?


இன்றைக்கு இந்துத்துவா வாதிகள் சிவாஜி பெயரை பயன்படுத்திக் கொள்வது - அவர் முஸ்லிம் ராஜாக்களை மண்டியிடச் செய்து ஒரு ராஜ்யத்தை அமைத்தான் என்கிற அளவில் மட்டும்தான்; அதே நேரத்தில் இந்துத்துவா அந்த ஆற்றல்மிகு வீரனை எப்படி யெல்லாம் சிறுமைப்படுத்தியது!

வாள் எடுத்த வீரனை தர்ப்பைப் புற்கள் எப்படியெல்லாம் தலை குனிய வைத்தன என்பதெல்லாம் மிக முக்கியமான சேதிகளும், தகவல்களும் ஆகும் - வரலாற்றில் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.


ஜஸ்டிஸ் ஏட்டில் ஆர்க்காடு ஏ. இராமசாமி முதலியார் எழுதிய கட்டுரைகள் தலையங்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு (மொழிபெயர்ப்பு: பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து) சிவாஜி முடி சூட்டலும் பார்ப்பனீயமும் எனும் தலைப்பில் திராவிடர் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.


அறிஞர் அண்ணா சிவாஜிபற்றி எழுதிய புலிநகம் கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது (நன்கொடை ரூ.25)

வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோர், பாழ்படுத்தும் பார்ப்பனீயத்தின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் - தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளம்! ஏராளம்!!


அதுவும் இந்துத்துவா ஆட்சி அமைக்கத் துடிக்கும் சக்திகள் தலையெடுக்கும் இந்தக் காலக் கட்டத்தில் அதி முக்கியமே!

--------------------------------------”விடுதலை” தலையங்கம் 11-08-2014

No comments: