Followers

Sunday, August 03, 2014

நெகிழ வைத்த நிகழ்வு - சாதிக் கலவரம்

சாதிக் கலவரம்- சாதி மோதல் இதனை நேரில் அனுபவித்து இருக்கிறீர்களா?*****

நான் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்துவிட்டார்கள்.

பெரும் கலவரத்தில் மாட்டிக்கொண்டேன். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டுகிறார்கள், நாட்டு வெடிகுண்டு அதிகமாக வீசினார்கள். 8 கிலோ மீட்டர் பையை தூக்கிகொண்டு நிக்காமல் ஓடினேன். இன்னும் கண்முன் நிற்கிறது.

ப்ளஸ் 1 படிக்கும்போது இதே மாதிரி மாட்டிக்கொண்டு பஸ் இல்லாமல் எல்லோரும் நடந்து வந்தோம். சோதனை என்னவென்றால் ஆதிக்க சாதியினர் ஊர் 4 கிராமத்தை கடக்கவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தடுப்பார்கள். சாதி பெயரை கேட்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அவ்வளவுதான்.

எங்களோடு வந்தவர்களில் இருவர் தாழ்த்தப்பட்டவர்கள். அதனால் நாங்கள் முன் கூட்டியே பேசி வைத்துவிட்டோம். வேறு சாதி பெயரை சொல்வதன்று. நான் செய்த தவறு அந்த இருவரில் பெண்ணை நம் மார்க்க சகோதரி என அடையாளப்படுத்தியதுதான்.
சரியாக வழிமறித்து நிப்பாட்டி விட்டார்கள். தாழ்த்தப்பட்ட சகோதரன் வேறு பெயரை சொல்லி தப்பிவிட்டான். பெண்ணை அந்த காட்டுமிராண்டிகள் விசாரிக்கும்போது முஸ்லீம் என்றோம். அப்பா அம்மா பெயரை சொல்லச் சொன்னார்கள். அதுவும் சொல்லியது. அவர்கள் நம்பாமல்(இங்கு கலர்தான் பிரச்சினை) தாத்தா பாட்டி பெயரை சொல்லச்சொன்னார்கள் அது முழிக்க நான் சொன்னேன். அவர்கள் கோபத்துடன் என்னிடம் "யார் கிட்ட பொய் சொல்ற. கலரப் பார்த்தா தெரியாது. நீங்க டாலர் எப்படா போட்டீங்க கழுத்துல. ஒடிடு. முதல் பலி ஆகாத" என மிரட்டினர். நாங்கள் யாரும் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. அந்த பெண்ணை விட்டால்தான் போவோம் என்று நின்றுவிட்டோம். அவர்கள் அந்த பெண்ணை அடிக்கும்போது எங்களால் கெஞ்சி அழத்தான் முடிந்தது. என் ஆண்மை தோற்றுப்போனதை நினைத்து வெட்கி தலைகுனிந்தேன். அவர்கள் விட்டுவிட்டார்கள் அந்த பெண்ணை. 12 கிலோ மீட்டர் தூரத்தை வயல் வழியே அதிகதூரம் நடந்து சென்று இரவு 10 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்தோம்.

என் மனைவியின் ஊருக்கு செல்ல அந்த ஆதிக்க சாதி கிராமங்களை தாண்டித்தான் செல்ல வேண்டும். நேற்று அவ்வாறு சென்றேன்... அவர்கள் இன்னும் திருந்திய மாதிரி தெரியவில்லை.

-சகோ அஜ்மல்கானின் சொந்த அனுபவம்

No comments: