Followers

Thursday, August 21, 2014

'இந்து முன்னணியா?' அல்லது 'இந்து பின்னணியா?'

ஜோஸ்வா ஐஸக்; நீங்கள் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுதான் என்று சொல்கிறீர்கள். அதே சமயம் இங்கு கோவில் அர்ச்சகராகப் பயிற்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லாத, அதை அனுமதிக்காத சூழ்நிலையும் இருக்கத் தானே செய்கிறது? அதிலும் ஜாதிப் பிரிவினை வந்து விடுகிறதே?


ராம.கோபாலன்: தமிழ்நாட்டில் அரசின் கணக்குப்படி 43 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. அர்ச்சகராகப் பயிற்சி முடித்தவர்கள், பெரிய கோவில்களுக்குத்தான் போக வேண்டும் என்கிற அவசியம் இல்லையே! தமிழகத்தில் இருக்கிற எத்தனையோ சின்னக் கோவில்களுக்குப் போகலாமே! கருப்பசாமி, மாடசாமி கோவில்களுக்குப் போகலாமே! அங்கு பூசாரியாகப் போகக் கூடாதா? அங்கு போனால் மரியாதைக் குறைவா? என்னைப் பொறுத்த வரை, எல்லாக் கோயில்களிலும் பூஜை நடக்க வேண்டும். அர்ச்சனை செய்யப்பட வேண்டும்.


பல்லாயிரக்கணக் கான கோவில்கள் தமிழகத்தில் விளக்கேற்றக்கூட ஆள் இல்லாத நிலையில் இருக்கின்றன. அதில் எல்லோரும் போய் பூஜை பண்ணலாமே! யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கட்டுமே. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்தான் அர்ச்சகராக வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லா ஜாதியினரும், எல்லாக் கோவில்களிலும் பூஜை பண்ணட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை.

(துக்ளக் 6.8.2014 பக்கம் 7)

இங்குதான் திரு இராமகோபாலய்யரின் சாதிப் பற்று வெளிப்படுகிறது. கருப்பசாமி கோவில், மாடசாமி கோவில் போன்ற கோவில்களுக்கு செல்வது யார்? பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களுமே! கடவுளையே சாதிவாரியாக பிரித்து வைத்துள்ள பார்பனியம் சூசகமாக தனது நச்சுக் கருத்தை திணிப்பதை பார்க்கிறோம்.

மாடசாமி, கருப்பசாமி கோவிலுக்கு அர்ச்சகர் பார்ப்பனர்களே ஏன் நீங்கள் போகக் கூடாதா? அங்கெல்லாம் போவது கவுரவக் குறைவா? என்று கேட்டதுண்டா? ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இதே அர்ச்சகப் படிப்பு படித்த மாணவர்களை அனுப்பினால் அந்த தெய்வம் கோபித்துக் கொள்ளுமா? கற்பகாம்பாள் கோயிலுக்கு கல்கி வகையறாக்கள்தான் அர்ச்சகராக வேண்டுமா? அர்ச்சகர் பயிற்சி பெற்ற காத்த வராயன் சென்று அர்ச்சனை செய்தால் கற்பகாம்பாளுக்கு வயிற்று வலி வந்து விடுமா?


சரி.. கடைசியாக குறிப்பிட்ட ஜாதியார்தான் அர்ச்சகராக வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பதில் சொல்லுகிறாரே. அதிலாவது அறிவு நாணயமாக நடந்து கொண்டதுண்டா?

இந்தப் பிரச்சினைக்காக இவர் அமைப்பாளராக இருக்கும் இந்து முன்னணி ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்குமா?

தீண்டாமையை ஒழிப்பதற்கே அவர்களின் மூத்த சங்கராச்சாரி (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லையே! அதனை காந்தியாரிடத்திலேயே முகத்துக்கு முகம் அடித்துச் சொல்லி விட்டாரே! அப்படி இருக்கும்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள்ளோ, காஞ்சி காமாட்சியம்மன் கர்ப்பக்கிரகத்துக்குள்ளோ பார்பனர் அல்லாதார் - உரிய பயிற்சிகளை முறைப்படி கற்றுத் தேர்ந்தாலும் சென்று அர்ச்சனை செய்ய அனுமதிப்பார்களா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை ஏற்றுக் கொள்ளாத வரை, அது நடக்காதவரை, இந்துக்களே, ஒன்று சேருங்கள்! என்று இந்து முன்னணி வகையறாக்கள்அழைப்புக் கொடுத்தால்; அது கடைந் தெடுத்த நகைச்சுவையாகத்தான் கருதப்படும். இந்துக்கள் ஒன்று சேர வேண்டும் என்கிற அவர்களின் நோக்கமும் நிறைவேறாது; இது கல்லின்மேல் செதுக்கப் பட்ட எழுத்தாகும். இனி ராமகோபாலய்யர் தனது அமைப்புக்கு 'இந்து முன்னணி' என்ற பெயரை நீக்கி விட்டு 'இந்து பின்னணி' என்று வைத்துக் கொள்ளலாம். அதுதான் பொருத்தமான பெயராகவும் இருக்கும்.

No comments: