Followers

Tuesday, August 07, 2018

30 வருடங்களுக்கு முன் உள்ள நிலையை எண்ணிப் பார்த்தேன்!

30 வருடங்களுக்கு முன் உள்ள நிலையை எண்ணிப் பார்த்தேன்!
30 வருடங்களுக்கு முன்பு நான் முதன் முதலில் சவுதி வந்தபோது இந்த அளவு இணைய வசதி கிடையாது. ஒரு சிறிய டேப் ரிகார்டர் என்னிடம் இருந்தது. அதில் அவ்வப்போது இளையராஜா பாடல்களும்,எம்எஸ்வி பாடல்களும் ஓடிக் கொண்டிருக்கும். எனக்கு அமைந்த ரூம் மேட் ஒரு ஹைதராபாதி. அவனுக்கு தமிழ் தெரியாது. எனக்கு உருது தெரியாது. இருவரும் ஆங்கிலத்திலும் அரபியிலும் பேசி காலம் தள்ளிய அந்த நாட்கள்.....
அப்போதுதான் எங்கள் ஊர் தப்லீக் ஜமாத்தில் இன்றும் ஐக்கியமாகி இருக்கும் கமால் பாய் என்னிடம் 'நஜீர்.... நம் ஊர் நண்பர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்... இந்த கேசட்டுகளை கேளுங்கள்... உங்களுக்கு உண்மை விளங்கும்' என்று 10 ஆடியோ கேசட்டுகளை கொடுத்தார். 'நஜாத்' பத்திரிக்கையின் சில பிரதிகளையும் என்னிடம் தந்தார். வேலை முடிந்து, சாப்பாடும் முடிந்தவுடன் ஓய்வு நேரத்தில் அந்த கேசட்டுகளை கேட்க ஆரம்பித்தேன். அனைத்தும் பிஜே பேசிய கேசட்டுகள். எனக்குள் ஒரு பொறி தட்டியது. ஏ ஆர் ரஹ்மானும், இளையராஜாக்களும் எனக்கு தூரமானார்கள். பிஜேயின் கேசட்டுகளை தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன். ரூம் மேட்டோ வேற்று மொழிக் காரன். எனவே அவனுக்கும் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக காதோரம் அந்த சிறிய டேப் ரிகார்டரை வைத்து தினமும் ஏகத்துவ பயான்களை கேட்க ஆரம்பித்தேன். அஸர், ஃபீல் போன்ற குர்ஆனின் சிறிய சூராக்களுக்கான விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. யாரும் சொல்லாமலேயே ஃபஜருக்கு எழுந்து அறையின் வெளியில் தொழ ஆரம்பித்தேன்.
எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர் முஹம்மது தமீம் என்பவர் 'உங்களை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பத்ஹாவில் ஒரு பயானுக்கு அழைத்துச் செல்கிறேன். தயாராக இருங்கள்' என்றார். அதன்படி பயானுக்கு அவரோடு சென்றேன். அங்கு அழகிய தமிழில் பள்ளிவாசலில் யூசுஃப் மிஸ்பாஹி என்ற தமிழறிஞர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சு பிஜேயைப் போலவே மிகவும் சிறப்பாக இருந்தது. வாரா வாரம் அந்த பள்ளிக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்போது ஒரு வாரம் மேலப் பாளையத்தில் பிஜே மத்ஹப் வெறியர்களால் வெட்டப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டது. சிறிது நேரம் பயங்கர அமைதி. துவாச் செய்து பிறகு சகஜ நிலைக்கு வந்தோம். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் இல்லை. நம் நெருங்கிய உறவினரில் ஒருவர் வெட்டப்பட்டால் எப்படி துடிப்போமோ அப்படி துடித்துப் போனேன். மறு நாள் பிஜே ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார். இரண்டொரு நாளில் சகஜ நிலைக்கு வந்து விடுவார் என்றவுடன் தான் நானும் சகஜ நிலைக்கு வந்தேன். தமிழகமெங்கும் ஏகத்துவ இளைஞர்களின் நிலை அவர்களின் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்தது. பிஜே என்ற அந்த மனிதருக்காக உயிரையும் கொடுக்க ஆயிரமாயிரம் இளைஞர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவானார்கள்.
ஆனால் நேற்று நடந்த பொதுக் குழுவில் அவரால் வார்த்தெடுக்கப்பட்ட இன்றைய இளைஞர்கள், 'பிஜேயை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குகிறோம்' என்று சொன்னவுடன் 'அல்லாஹூ அக்பர்' என்ற கோஷத்தோடு அதனை ஆமோதித்தனர். இந்த மாற்றம் எப்படி வந்தது? உயிரையும் கொடுக்க தயாரான இளைஞர்கள் இன்று அவரை வெளியாக்க துடிப்பதேன்?
அதுதான் தனி மனித ஒழுக்கம். பிஜே ஒழுக்க சீலராக ஏகத்துவத்தை சொல்லக் கூடியவராக என்று வலம் வந்தாரோ அன்று அவருக்காக கண்ணீர் சிந்தியவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற போது அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்கள் லட்சக்கணக்கானோர். என்று அவர் சைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டார் என்ற உறுதிபடுத்தப்பட்ட செய்தி வந்ததோ அன்றே அவரை தூரமாக்கி விட்டனர் ஏகத்துவ வாதிகள். அவருக்கு அளித்த அன்பு, பாசம் அனைத்தும் அவர் வாயிலிருந்து வந்த ஏகத்துவ செய்திகளுக்காகத்தானேயொழிய தனி மனித துதி பாடல் அல்ல. அதைத்தான் பொதுக் குழுவில் நாம் பார்த்தோம்.
இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

No comments: