Followers

Sunday, August 12, 2018

ஒரு சாய்வாலா மனம் திறக்கின்றார்..!

ஒரு சாய்வாலா மனம் திறக்கின்றார்..!
*********************************************************
லட்சுமன் ராவ்.
தில்லியில் நடைபாதையில் தேநீர்க்கடை நடத்துகின்ற சாய்வாலா. ஆனால் இவர் டூப்ளிகேட் சாய்வாலா அல்லர்.

மற்றவர்கள் எழுதித் தருவதை ஏற்ற இறக்கத்துடன் வாசிப்பவரும் அல்லர். மிக இயல்பாக, சரளமாக ஷேக்ஸ்பியரையும் சாகரடீஸையும் மேற்கோள் காட்டுகின்றவர்.

போலி சாய்வாலாவைப் போன்று அல்லாமல் உண்மையிலேயே பிஏ படித்து முடித்து எம்ஏவும் படித்து தேறியிருக்கின்றார் இந்த சாய்வாலா. இது வரை 18 நூல்களை எழுதியிருக்கின்றார். நாள்தோறும் 1000 சொற்களை எழுதுகின்ற ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்.

நரேந்திர மோடி கடைசி முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றவிருக்கின்ற இந்த நாள்களில் இந்த உண்மையான சாய்வாலா தி டெலிகிராஃப் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் சொன்ன முத்துக்கள் வருமாறு:
........................
# ஒரு டீக்கடைக் காரர்தான் பிரதமராக இருக்கின்றார். என்றாலும் மக்கள் ஒரு தேநீர் வாங்கி குடிப்பதற்கும் யோசிக்கின்றார்கள். என்னுடைய கடையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள்கூட இப்போதெல்லாம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

# 2014-இல் ஒரு குவளை தேநீரை ஏழு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தேன். இப்போது அதன் விலை பத்து ரூபாய். எனக்குக் கிடைக்கின்ற இலாபம் கூடிவிட்டதா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.

# ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்றாலும் ஒன்றைச் சொல்வேன். இப்போதெல்லாம் 100 ரூபாய்த்தாளுக்கு மதிப்பே இல்லை. பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கின்றது. மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கின்றது எனில் வேலை முடிந்ததும் தேநீர் அருந்த வருகின்ற மக்கள் எங்கே போனார்கள்?

# நான்காண்டுகளுக்கு முன்னால் செலவெல்லாம் போக எனக்கு மாதம்தோறும் 14000 ரூபாய் இலாபம் கிடைத்து வந்தது. இப்போது அதே அளவோ அல்லது அதனை விடச் சற்று குறைவாகவோ தங்குகின்றது. என்றாலும் வாழ்க்கைத் தரம் சரிந்துவிட்டது. என்னுடைய கடைக்கு தேநீர் அருந்த வருகின்றவர்களின் எண்ணிக்கை சரிந்து விட்டது.

# இந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்தவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பெரும் தொழிலதிபர்கள்தாம். இது இயல்பானதுதானே. தேர்தல் பரப்புரைக்குப் பணம் கொடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் திருப்பித் தந்துதானே ஆக வேண்டும்.

# பணமதிப்பழிப்புக்குப் பிறகு 2000 ரூபாய்த்தாள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தேநீர் விற்பனை மட்டுமின்றி புத்தக விற்பனையும் படுத்து விட்டது. 2016 நவம்பருக்குப் பிறகு மூன்று மாதங்கள் வரையில் ஒரே ஒரு புத்தகம் கூட விற்பனையாகவில்லை. இன்னும்சொல்லப்போனால் புத்தக விற்பனை முந்தைய நிலையை அடையவேயில்லை.

# 2014-இல் இருந்ததை விட இப்போது மோடியின் செல்வாக்கு 80சதவீதம் சரிந்து விட்டது என்றே நான் சொல்வேன். பாஜகவுக்கு முரட்டுத்தனமாக முட்டு கொடுப்பவர்கள் கூட பணமதிப்பழிப்பாலும் ஜிஎஸ்டியாலும் சிறு, குறு தொழில்கள் அழிந்துவிட்டன எனப் பெரிதும் வருந்துகின்றார்கள்.

# முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு என்ன ஊறு விளைவித்தார்கள், இந்த மக்கள் ஏன் அவர்கள் மீது இத்துணை அக்கிரமங்களை இழைக்கின்றார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முஸ்லிம்களின் வீடுகளை எரிப்பதாலோ, அவர்களை அடித்து கொல்வதாலோ ஒருவர் நல்ல இந்துவாக ஆகவே முடியாது. நல்ல மனிதராக இருந்தால் மட்டுமே நல்ல இந்துவாக மலர முடியும்.


தமிழாக்கம்No comments: