Followers

Friday, April 24, 2015

தூக்கில் தொங்கிய பெரியவர் - நேரடி அனுபவம்இன்று மாலை 5 மணி இருக்கும். சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். குடமுருட்டி ஆற்றங்கரையோரம் சிலர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று விசாரித்தேன். 'ஒரு பெரியவர் தூக்கில் தொங்குகிறார்' என்று சொல்லி விட்டு ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவரின் ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொள்ளவே நானும் அவரை பின் தொடர்ந்து சென்றேன்.

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தை ஒட்டி குடமுருட்டி ஆறு ஓடுகிறது. அதன் அருகில் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்பட்டன. அந்த புதர்களுக்கிடையில் ஒரு மரத்தின் கிளையில் தனது துண்டால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். ஒருவர் தூக்கில் தொங்குவதை முதன் முதலாக அப்போது தான் நேரிடையாக பார்க்கிறேன். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் பந்து அந்த புதர்களுக்குள் சென்று விடவே அதனை எடுக்க சென்ற போதுதான் ஒருவர் தூக்கில் தொங்குவதை பார்த்துள்ளனர். அதன் பிறகுதான் செய்தி வெளியே தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களும், கிராம அதிகாரிகளும் வந்தனர். தூக்கில் மாட்டிக் கொண்டு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம்தான் ஆகி இருக்கும் என்று பேசிக் கொண்டனர். தூக்கில் தொங்கிய அவரை போலீஸார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

'யோவ்... யாராவது மேலே ஏறி கயிற்றை வெட்டி விடுங்கய்யா' போலீஸின் சற்று மிரட்டலான குரல்....

பலரும் பயத்தில் பின் வாங்கினர். ஒருவர் தணிச்சலாக மரத்தில் ஏறி மரத்தில் இறுகிய துண்டை வெட்டி விடவே பிணம் 'பொத்தென்று' கீழே விழுந்தது. மூன்று பேர் பிணத்தை புதரிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து போட்டனர். இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி என்று பலரும் அடையாளம் கண்டனர். ஆனால் அவரது பெயரோ ஊரோ இன்னதென்று தெரியவில்லை. எனது செல்லிலிருந்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தூக்கிச் சென்றது. கூட்டமும் களைய ஆரம்பித்தது. வயது ஏறத்தாழ 70 இருக்கும். இந்த வயதில் என்ன மன அழுத்தமோ என்ன கவலையோ அந்த பெரியவருக்கு! தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

No comments: