Followers

Thursday, April 02, 2015

நான் என்றுமே இளையராஜாவின் மகனே - யுவன்




நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முக நூல் பக்கத்தில் நான் பார்த்த ஒரு பதிவு இது. இந்த பதிவுக்காக சிலர் அவரை தூற்றியும் மற்றும் சிலர் பாராட்டியும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிக அழகாக தனது கருத்தை பதிவாக்கியுள்ளார் யுவன்.

'உலக முடிவு நாளன்று நான் இளையராஜாவின் மகனாகத்தான் இருப்பேன்: இளையராஜா எனது தந்தையாகத்தான் இருப்பார். இதில் எந்த மாற்றமும் நடந்து விடப் போவதில்லை' - யுவன் சங்கர் ராஜா

ஆம்... கண்டிப்பாக..... இன்று யுவன் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டிருக்கலாம். தனது பெயரைக் கூட 'அப்துல் ஹாலிக் யுவன்' என்று மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் இளையராஜாவின் மகன் என்ற அடையாளம் உலக முடிவு நாள் வரை நிலைத்திருக்கும். அவர் தமிழன் என்ற அடையாளமும் எந்த நாளும் மாறப் போவதில்லை. அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதை இஸ்லாமும் தடை செய்யச் சொல்லவில்லை.

இன்று அவருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் இறை வழிபாட்டில் மட்டுமே. இந்த மாற்றம் அவர்களை நிரந்தரமாக பிரித்து விட இஸ்லாம் கட்டளையிடவில்லை. ஒரு முறை ஒரு நபித் தோழர் 'இறைவனின் தூதரே! எனது பெற்றோர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. வயதான அந்த பெற்றோருக்கு முஸ்லிமான நான் பணிவிடை செய்ய வெண்டுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்... அவர்கள் இஸ்லாத்தை எற்கா விட்டாலும் கண்டிப்பாக நீ பணிவிடை செய்ய வேண்டும்' என்று மறுமொழி பகர்ந்தார்கள்.

எனவே இளையராஜா இஸ்லாத்தை எற்கா விட்டாலும் யுவன் தனது தந்தைக்கு செலுத்த வேண்டிய மரியாதையை குறைத்து விடச் சொல்லி கட்டளையிடவில்லை இஸ்லாம். பெற்றோருக்கு செய்யும் மரியாதையில் சில மாற்றங்களை இஸ்லாம் செய்யச் சொல்கிறது. முன்பு இளையராஜாவின் காலில் விழுந்து தனது அன்பை யுவன் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மனிதன் மற்ற மனிதனின் காலில் விழுவதை இஸ்லாம் தடுக்கிறது. கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தனது தலையை ஒரு முஸ்லிம் சாய்க்க மாட்டான். எனவேதான் ஏ ஆர் ரஹ்மான் கூட இது வரை பொது மேடைகளில் தனது சீனியர்களான எம்எஸ்வி, இளையராஜா போன்றோரின் கால்களில் விழுந்ததில்லை. தாய் தந்தையருக்கு மரியாதை எந்த விதத்தில் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ அந்த இலக்கணத்திலிருந்து சற்றும் பிறழாமல் தனது வாழ்வை யுவன் அமைத்துக் கொள்வாராக! ஏகத்துவ கொள்கையிலிருந்து சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் தனது பயணத்தை தொடர்வாராக!

No comments: