Followers

Friday, April 17, 2015

புரோட்டா பிரியர்களுக்கு சில பகீர் தகவல்கள்!



சிலருக்கு பரோட்டா சாப்பிட்டால்தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு பரோட்டாவுக்கு அடிமையானவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான். இதையே பல ஊர்களில் பலவிதமாகச் செய்கிறார்கள். மதுரை பக்கம் போனால் சும்மா மெத்மெத்தென்று அடித்த மாவில் செய்த சுவையான பரோட்டா கிடைக்கும். விருதுநகர் பக்கம் சென்றால் எண்ணெயில் சுட்ட பொறித்த பரோட்டா கிடைக்கும். அப்படியே செங்கோட்டை பார்டர் கடைக்குச் சென்றால் கோழிக்குழம்புடன் அள்ளி அள்ளி விழுங்கத் தோன்றும் சுவையான பரோட்டா கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பரோட்டா பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

பரோட்டாவுக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது பரோட்டா வரலாறு அல்ல. அதை செய்யப் பயன்படும் மைதாவுக்கான வரலாறு. மைதா என்றொரு பொருள் ஆங்கிலேயர்களால்தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையில் இந்தியாவில் கோதுமை பயன்பாடுதான். அதில்தான் ரொட்டி சுடுவது, சப்பாத்தி சுடுவது எல்லாம். தனிக்காட்டு ராஜாவாக இந்தியாவில் கோதுமை கோலோச்சிக் கொண்டிருந்தபோது அதற்கு ஆப்பு வைத்தது இரண்டாம் உலகப்போர். போர் வீரர்களுக்கு பெருமளவில் கோதுமை தேவைப்பட்டது. இதனால் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோதுமைக்கு மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சி தீவிரமானது. அப்போது அறிமுகமானதுதான் மைதா. அதாவது மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவுடன் சில ரசாயனங்களையும் சேர்மானங்களையும் சேர்த்து தயாரிப்பதுதான் மைதா. இந்த மைதா மிக எளிதாக உருட்டவும் மாவு பிசையவும் வந்தது. கோதுமையைக் காட்டிலும் விலை குறைவாக இருந்தது. இதனால் மக்களிடம் எளிதில் மைதா புகழ் பெறத் தொடங்கியது. குறிப்பாக ஏழை மக்களின் உணவுப் பொருளாக மைதா பிரபலமானது. அதுவே படிப்படியாக வளர்ச்சி பெற்று நாகரீக உணவு பொருளாகியது.

இதுதான் மைதா அரக்கனின் வரலாறு. மைதாவின் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு மாவு என்பது சற்று பழுப்பு நிறம் கொண்டது. இதை வெளுக்க வைத்து வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில், பெராக்சைடு கலக்கப்படுகிறது. சாதாரணமாக சொன்னால் ரசாயனம். இதை இன்னும் மேலும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தலைமுடிக்கு அடிக்கும் டையில் உள்ள ரசாயனம் என்று கூறினால் நன்கு விளங்கும். இந்த ரசாயனத்தால் சில அரிப்பு ஒவ்வாமை ஏற்படுகிறது. தலைமுடிக்கு இந்த நிலைமை என்றால் உடலில் சென்றால் சொல்ல வேண்டியதே இல்லை. மெல்லக் கொல்லும் விஷமாக பல பாதிப்புகளை இது செய்து வருகிறது. நீரிழிவு என சொல்லப்படும் டயாப்டீஸ் நோய்க்கு அடிக்கல் நாட்டும் விழாவாக மைதா ஆகிவிடும்.

‘அலாக்ஸான்’ எனும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. வெண்மை என்றால் சாதாரண வெண்மையா என்ன? மைதாவின் வெண்மையை ஊரே போற்ற வேண்டும் என்பதற்காக அதில் செயற்கை வண்ணப்பொடியும் கலக்கப்படுகிறது. பரோட்டாவுக்கு சுவை சேர்க்க வேண்டாமா? இதற்காக உணவு எண்ணெய்கள், சுவை கூட்டிகள் எனப்படும் டேஸ்ட் மேக்கர்ஸ், மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையான ரசாயனங்கள் (பிரசர் வேடீவ்ஸ்) அஜினோ மோட்டோ, இனிப்பு பொருட்களில் சாக்ரின் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கடைகளில் விற்கப்படுகின்ற பரோட்டா மாவாகப் பிசைந்து சில மணி நேரங்கள் எண்ணெயில் ஊற வைக்கப்படுகிறது. அது எந்தவகையான எண்ணெய் என்பது மாஸ்டருக்கு மட்டுமே தெரியும். பின்னர் அதை எடுத்து உருண்டைகளை சுற்றி தட்டும்போதும் எண்ணெய் ஊற்றப்படுகிறது. அவ்வாறு எண்ணெயில் குளிப்பாட்டிய பரோட்டாவை எடுத்து சுடும்போது ஊற்றப்படும் எண்ணெய்க்கு அளவே இல்லை. இதில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் மட்ட ரகமான நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுக்கப்படும் பரோட்டாவை சாப்பிட்டால் ஏற்படுகின்ற தீங்கான விளைவுகளை சொல்லவே அச்சமாக உள்ளது. இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் படியும் கொழுப்பாக மாறி ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர், டயாபடீஸ் என்று விதவிதமான நோய்களை வரவழைக்கும் மைதாவில் எவ்வித பயனும் இல்லை என்பதால்தான் ஐரோப்பிய யூனியனும், கனடாவும் இதற்கு தடை விதித்துள்ளது.

இந்த பரோட்டாவுக்கு சைட் டிஸ் என்ன தெரியுமா? கோழி குருமா, சிக்கன் 65! முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி கறி சமைத்து உண்பார்கள். அதில் நல்ல சத்தும் இருந்தது. இப்போது பிராய்லர் சிக்கன் வந்துவிட்டது. பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னை மருத்துவ ஆய்வுக் குழு ஒன்றின் குடல் நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அதற்குள் எடை கூட்டி வளர்க்க பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள், மனிதர்களுக்கு புற்றுநோயை ஊக்குவிக்கும் தன்மை வாய்ந்தவை. கோழிகளுக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள், கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி விடுகின்றன. சிக்கன் 65 தயாரிக்கப் பயன்படும் சிவப்பு நிற கலர் பவுடர் புற்று நோயினை ஏற்படுத்தும். வேதியப் பொருள்களும் இதய நோய்க்கு வித்திடுகின்றன. இத்தகைய அபாயகரமான நோய்களை ஏற்படுத்தும் பரோட்டாவையும், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 ஆகியவற்றினை சாப்பிட்டு நோயினை விலைக்கு வாங்க வேண்டுமா?

நன்றி : நர்கிஸ் – மார்ச் 2015

No comments: