அபிராமபுரத்தில் மனைவி தீக்குளித்தும், கணவன் மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை அபிராமபுரம் வாரன் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிப்பவர் துர்க்ரு(40). கொத்தனார் வேலை செய்தார். இவரது மனைவி விஜயா(35). துர்க்ருவுக்கு குடிப் பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதேபோல தகராறு ஏற்படவே விழுப்புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார் விஜயா.
குடும்பத்தினர் சமாதானப் படுத்தி மீண்டும் விஜயாவை அழைத்து வந்து அபிராமபுரத்தில் விட்டுச்சென்றனர். சில நாட்கள் ஒழுங்காக இருந்த துர்க்ரு, நேற்று பிற்பகலிலும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, விஜயாவிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற துர்க்ரு, அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நின்று கொண்டிருந்தார்.
கணவன் தொடர்ந்து மது குடித்து தகராறு செய்ததால் மன வேதனை அடைந்த விஜயா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்களும், துர்க்ருவும் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் விஜயா முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
விஜயாவின் உடலை பார்த்துகதறி அழுத துர்க்ரு, 3-வது தளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திடீரென கீழே குதித்து விட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார். மதுப்பழக்கம் ஒரு குடும்பத் தையே தற்கொலை செய்ய வைத்துள்ளது. கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்த அபிராமபுரம் போலீஸார் விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
06-04-2015
------------------------------------------------------------------------
மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
No comments:
Post a Comment