'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, April 23, 2015
ஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால் பெண் கொடுமை!
ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே சோவியத் ரஷ்யாவாலும், அமெரிக்கர்களாலும் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறது. இது போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காத பல முல்லாக்கள் வேறு அந்த மக்களை கொடுமைபடுத்தி வருகின்றனர். அந்நாட்டு மக்களின் இஸ்லாமிய நம்பிக்கையை சில முல்லாக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்த போர் காரணமாக பெரும்பாலான மக்களிடம் படிப்பறிவும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிவும் இல்லை. மந்திரம், தாயத்து போன்ற மூடப் பழக்கங்களில் அந்த மக்கள் மூழ்கி திளைக்கின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மார்க்க அறிஞர்களோ மூடப்பழக்கங்களை மேலும் வளர்கின்றனர்.
சென்ற மாதம் 27 வயதே நிரம்பிய ஃபக்ருந்தா என்ற இளம் பெண்ணின் மேல் அபாண்டமாக பழியை சுமத்தினார் தாயத்துகளை விற்று பிழைப்பு நடத்தும் ஒரு மத வியாபாரி. இவரின் பேச்சை நம்பிய அந்த கிராமத்து மக்கள் அந்த பெண்ணை அடித்தே கொன்று விட்டனர். இது ஆப்கானிஸ்தான் முழுக்க சமூக ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குர்ஆனை விளங்காத மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்களால் ஆப்கானிஸ்தானில் பல பெண்களின் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.
முகத்தை முழுவதுமாக மூட வேண்டும்: கல்லூரிக்கு செல்லக் கூடாது: ஆண்களோடு பேசக் கூடாது என்று சகட்டு மேனிக்கு ஃபத்வாக்களை வாரி வழங்குவதில் இந்த முல்லாக்கள் கில்லாடிகள். இதற்கு குர்ஆனின் ஆதாரத்தையோ, நபிகளின் கட்டளைகளையோ சமர்ப்பிப்பதில்லை. இவர்களின் அடாவடிகளை தட்டிக் கேட்டால் இஸ்லாமிய நிந்தனையாகி விடுமோ என்ற அச்சத்தில் பலர் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
'தாடியும் பெரிய தலைப்பாகையும் கட்டியவர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களாகி விட முடியாது. குர்ஆனை சரியான முறையில் விளங்கியவர்களே மார்க்க அறிஞர்களாக முடியும். இதனை பொது மக்கள் நன்கு உணர வேண்டும்' என்று ஆப்கானின் மத விவகாரங்களுக்கான துணை மந்திரி தையுல் ஹக் ஆபித் மக்களுக்கு அறிவுருத்தி உள்ளார். படத்தில் அமர்ந்துள்ள கள்ள முல்லா ஜூம்மா கான் தனனை நாடி வரும் பக்தர்களுக்கு சகட்டு மேனிக்கு தட்டு தாயத்துகளை எழுதிக் கொடுத்த வண்ணம் உள்ளார். சிலருக்கு வெள்ளை பச்சை துணிகளில் அரபியில் எதையோ எழுதி ஊதி விட்டு தலையில் கட்டி விடுகிறார். மார்க்க அறிவு இல்லாத அந்த மக்களும் இதனை உண்மை என்று நம்பி தங்களின் பொருளாதாரத்தை இழக்கின்றனர்.
இதே போன்ற நிலைதான் முன்பு தமிழகத்திலும் இருந்தது. கடந்த 25 ஆணடுகளாக தொடர்ந்த பிரசாரத்தின் காரணமாக இன்று ஓரளவு மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது எனது வீட்டிலேயே தட்டு தாயத்துகள் எல்லாம் பிரபலம். நாகூர் தர்ஹாவுக்கும் வருடம் ஒருமுறை பெண்கள் சென்று வந்து விடுவர். இன்று அந்த நிலை எனது தீவிர முயற்சியால் 90 சதவீதம் மாற்றப்பட்டு விட்டது. இதே போன்று ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய குடும்பங்களில் சத்தமில்லாத ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்கள் எதைச் சொன்னாலும் அதற்கு குர்ஆனின் ஆதாரத்தை கேட்கும் மக்களாக தமிழக முஸ்லிம்கள் மாறி உள்ளனர். இதே போன்ற ஒரு எழுச்சி ஆப்கானிஸ்தானத்தில் ஏற்படாத வரை அந்த நாட்டுக்கு எந்த அரசியல் கட்சிகளாலும், அல்லது எந்த அண்டை நாடுகளாலும் விமோசனம் ஏற்பட வாய்பில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
23-04-2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment