Followers

Tuesday, April 07, 2015

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

போன வருடம் கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு செல்ல வேண்டி இருந்தது..... அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று விழித்துக் கொண்டு ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...

'எந்த ஊரு?' ('ஆப் கஹாங் ரேனேவாலா') எனக்குத் தெரிந்த உருதுவில் கேட்டேன் :-)

'ஆந்திரா... கர்நூல்' என்று பதிலளித்தார். அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து ரியாத் பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.

எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃப்ரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை கணிணியில் பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.

எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

-திருக்குறள்

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

No comments: