
தங்கள் நாட்டில் நிலவும் பன்முக கலாசாரத் தன்மையின் காரணமாக, ஐ.எஸ். தீவிரவாதிகளின் வலையில் சிக்கப்படுவதில் இருந்து இந்திய இளைஞர்கள் தப்பிவிடுகின்றனர் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை நிபுணர் டேவிட் எப் ஹேமென் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளைப் போல் இந்திய முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ். இயக்கம் வசப்படுத்த முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக கணித்து கூறினார்.
அமெரிக்க பாதுகாப்பு துறை நிபுணரும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஆய்வாளருமான டேவிட் ஹேமென், இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அவர், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியது:
"இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து புதிதாக எழும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக திட்டமிட வேண்டியது அவசியம்.
உலக நாடுகளில் பரவலாக இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல், இளைஞர்களை அத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து இங்கு ஆலோசனை நடத்தினேன்.
பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதன் அப்படையில் எங்களால் பிரச்சினைகளையும் அதற்கான காரணங்களையும் கண்டறிய முடிகிறது.
மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரையில், அங்கு வாழும் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது நாட்டிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டது போல கருதுகிறார்கள். அவர்கள் கருதுவது போன்ற நடவடிக்கைகள் நடப்பதும் அதற்கு காரணம். இதனாலே அங்கிருக்கும் இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தால் அதிகளவில் ஈர்க்கப்பட்டு, அதில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லை. மனித உரிமைகளை இந்தியர்கள் மதிக்கின்றனர். இங்கு அமைந்திருக்கும் பன்முக கலாசாரம் கொண்ட ஜனநாயகத் தன்மை ஒவ்வொரு தனி மனிதனையும் தன்னை சமுதாயத்தில் ஒருவனாக உணர்ந்து செயல்படுவதற்கான சூழலை அமைத்து தருகிறது. இந்தியாவில் தீவிரவாதம் வேரூன்றாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால், அமெரிக்காவில் இந்த நிலைமை இல்லை. அங்கு உள்நாட்டிலேயே தீவிரவாதம் உருவெடுக்கிறது. இளைஞர்கள் மிக எளிதாக அதற்கு ஈர்க்கப்படுவதால், தீவிரவாதம் வீட்டிலிருந்து வளர்க்கப்படுவதை போல் ஆகிவிட்டது. இந்தியாவில் அந்தச் சுழல் தடுக்கப்படுகிறது" என்றார் டேவிட் எப் ஹேமென்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
03-04-2015
No comments:
Post a Comment